மனக்குதிரை
கண்கள் அலைபாய்கிறது
மங்கையின் வதனத்தைத்
தேடுகிறது
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு முகம்
மனக்குதிரையின் வேகத்தால்
உடல் களைப்படைகிறது
உடல் மொழி என்கிறார்கள்
சில சமயம் பேசுவதே
புரிய மாட்டேன் என்கிறது
இச்சைகளுக்கு மேலாக
ஏதோ ஒன்று இருக்கிறது
இந்த ஜென்மத்திலாவது
அது புரிபடுமா
இந்த கைத்தடி இல்லாமல்
எங்காவது போய் வர
முடிகிறதா
ஊர்க் கதையை
எவ்வளவு நேரம்
பேச முடிகிறது
சுப்ரமணியன் வந்தான்
காசி யாத்திரை வர்றியா
எனக் கேட்டான்
திரும்பி விட முடியும்
என்ற நம்பிக்கையில் தான்
கிளம்புகிறேன்
காலம் எங்கெல்லாம்
அழைத்துச் செல்கிறது
காலில் காயம்பட்டால்
கண் அழுகிறது
வெளிச்சத்தின் வாசனையை
நாசி முகர்கிறது
வீதியின் வெறுமையைக் கண்டு
நாய் குரைக்கிறது
கடலலைகள் முத்தமிட
கரை நாணி கன்னம் சிவக்கிறது
பரிதியின் ஒளிப்பிழம்பு
இருளை விரட்டுகிறது
தேய்ந்து வளரும் நிலா தான்
எல்லோருக்கும் பால்ய கால சகி.
- ப. மதியழகன், மன்னார்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.