விடியலைத் தேடி!
காரிருள் சூழ்ந்திருக்கக் கருமேகம் வானில்
விடியலைத் தேடி விரைகிறது
காலஓட்டத்தில் கலந்திருக்கும் மானிடரும்
ஞால விடிவுதேடி விரைகின்றார்
அஞ்ஞானத்தை அழித்து மெஞ்ஞானத்தில் வெல்ல
மெஞ்ஞானிகள் தேடுகிறார் விடியலை
மெய்ஞானத்தை வென்று விஞ்ஞானத்தை விளக்க
விஞ்ஞானியும் தேடுகிறான் விடியலை
எஞ்ஞானமுமின்றி தன் துணைஞானம் கொண்டு
தன்ஞானம் இழக்கின்றாள் அத்தமிழ்மகள்
ஞாலத்தின் விடியலுக்கு ஆதவன் உதித்தான் - உறவுப்
பாலத்தின் விடியலுக்கு உதித்தவன்
உத்தமனென உறங்குகிறான் கண் விழித்தபடி – அவன்
முழுஉருவும் மூடும் விழிகளுக்குள்
முப்பதைத் தாண்டிய முதிர் கன்னியாய் – அவன்;
செப்பிய வார்த்தைகள் பலாக்கனியாய்
காலதேவன் கடுகதி ஓட்டத்தில்
காத்திருப்புக்கள் யுகங்களாய் கழிகின்றன
விடியாத பொழுதுகள் வேதனையின் சுவடுகள் - அவள்
படியாத வாழ்வைப் பறைசாற்றுவதாய் - காதல்
செடியொன்று சருகாகி சாக்கடையில் சகதியாகுமுன்
மலரெடுத்து மாலையாக்கி மன்றல் காண
மனப்பீடை மனந்தாங்கி மணவாளன் மார்பில்சாயும்
விடியலைத் தேடி விசுவாசம் கொள்கின்றாள்
- சந்திரகௌரி சிவபாலன், ஜெர்மனி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.