கம்பன் கவியில் மயங்கிய கவிஞன்
கம்பன் எனும் கவிஞனவன்
கற்பனைக்கு வேலியேது ?
அயோத்திகாண்டம் எனும்
அற்புத பாகத்திலே அவன் தான்
ஆக்கி வைத்த சொற்தேனைப் பருகி
நானும் உம்மோடு ரசித்திட்டேன்
அயோத்தி நகரின் அரணாம்
அழகிய மதிலும் அதைக் காக்க
அகழியாய் ஆழமாய் ஓர் நீர்த்தேக்கம்
சக்கரவாள கிரி குன்றோடு கூடிய
ஆழி போன்றதாம் அகழியது
தன்னுடலை விலைபேசி வாழ்ந்திடும்
தாசிகுலப் பெண்டிர்களின் மனமது
தாழ்ந்திருக்கும் நிலை போன்றே
அகழியது ஆழாமாய் அமைந்ததுவாம்
ஜம்பொறியின் பிடிகளுக்குள் சிக்கிடும்
ஜந்துவான மனிதனின் நிலைபோல்தான்
ஆழியதில் அகப்பட்டோர் நிலையும்
அழுங்குப்பிடி போட்டிடும் முதலைகளாம்
வானோடு ஊர்கோலம் போகும் மேகம்
வாய்பிளந்து அகழியதை ஆழியென்றே
மனதிற் கொண்டு மொண்டு கொஞ்சம் நீருண்டு
மயங்கி மலையென்றே எண்ணி அப்போதே
மதில் மீது சாய்ந்ததினால் உறவுண்டு
கருக்கொண்டு தவழ்ந்த குளிர் நீர்த்துளிகளாய்
மேகமது பொழிந்ததுவாம் மழையாக
அம்மதில் மீதென்றான் எம் கம்பன்
படித்ததும் குடித்தென் அவன் தன்
பைந்தமிழின் சுவை தன்னை
மதிமயங்கிச் சில கணங்கள் நானும்
வானேறி மிதந்திட்டேன்
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.