ஒரு சமயம் சிவபெருமானுக்கும், அந்தகாசுரன் என்னும் அசுரனுக்கும் இடையே போர் மூண்டது.
அச்சமயம் சிவபெருமானின் கோபத்தினால் அவரது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் உருவாகின.
அந்த வியர்வைத் துளிகளிலிருந்து ஒரு பூதம் தோன்றியது.
அந்தப் பூதம் சிவபெருமானின் கட்டளைப்படி அசுரன் அந்தகாசுரனைக் கொன்று அவனது இரத்தத்தைப் பருகியது. அதன் பிறகு சிவபெருமானை நோக்கித் தவமிருந்தது.
அந்தத் தவத்தின் பயனால் பூதம் பல வரங்களைப் பெற்றது.
பல வரங்களைப் பெற்ற அந்தப் பூதம் மூவுலகையும் ஆட்டிப் படைத்தது.
இதனால் அச்சமடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர்.
சிவபெருமான் பூதத்தை அடக்க “அதிபலர்” என்ற ருத்திரையும், எட்டு மாயா பாசங்களையும் படைத்தார்.
அதிபலரும் எட்டு விதப் பாசங்களினால் பூதத்தைக் கட்டி, தரையில் தள்ளினார்.
அவர், பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவர்களையும் அந்தப் பூதத்தின் உடலின் வசிக்கும்படி செய்தார்.
பூதத்தின் உடலில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தேவர்களும் இடம் பிடித்து வசிக்கத் தொடங்கியதால் அது “வாஸ்து புருஷன்” ஆனது.
வாஸ்து புருசன் சிவபெருமான் கட்டளைப்படி நிலத்தில் படிந்து உறங்கிக் கொண்டிருக்கிறது.
தேவதைகள் வாசம் செய்வதால் வாஸ்து என்கிற பெயர் ஏற்பட்டது.