கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கியச் சடங்கு வளைகாப்பு. கருவுற்ற பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்பது தொன்ம நம்பிக்க்கை. தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைத் தூண்டுவதாக அமைந்து, குழந்தைக்குப் பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும். வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் பெண்ணுக்குள் இருக்கும் பயம் குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்துணிவு கிடைக்கும். கருவுற்ற பெண்கள் படுக்கும் போது, வளையணிந்த கைகளை தன் வயிற்றின் மீதே வைத்துக் கொள்வார்கள். அந்த ஒசையை கருவில் இருக்கும் குழந்தை கேட்டுக்கேட்டுத் தன் தாயை அடையாளம் காண்கிறது. கருவுற்ற பெண்களைத் திட்டவோ அல்லது துன்பப்படுத்தவோக் கூடாது என்கின்ற்னர். அவர்களின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஊனமில்லாமல், நல்ல முறையில் பிறப்பதற்காக அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். தாய் மனம் மகிழ்ச்சியுடன் இருந்தால், குழந்தையும் நல்ல உடல் நலத்துடன் பிறக்கும் என்கின்றனர்.
கருவுற்ற பெண்ணிற்கு வளைகாப்பு வைக்க, வளர்பிறையில், பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் செவ்வாய், சனி, ஞாயிறு தவிர்த்தக் கிழமைகளில் செய்வது நல்லது. முதல்முறையாகக் கருவுற்றப் பெண்களுக்கு 5 அல்லது 7 அல்லது 9 ஆம் மாதங்களில் ஏதாவதொரு நாளில் நிகழ்த்தப்படுகிறது. வளர்பிறையில் நாள் பார்த்து, அந்நாளில் அதிகாலையில் தட்டுகளில் வளையல்கள், பூ மற்றும் மங்கலப் பொருட்களை வைத்து பின் கருவுற்ற பெண்ணை நாற்காலியில் அமர வைக்கின்றனர். பெண்ணிற்கு வளையல் அணிவிக்கும் முன் வேப்பிலையில் காப்புப் போல் செய்து முதலில் கைகளில் அணிவிக்கின்றனர். அதன் பின்பு, பெண்ணின் கூந்தலுக்கு மல்லிகை அல்லது முல்லைப் பூ சூடுவார்கள். பின் ஒவ்வொரு பெண்ணாக வந்து கருவுற்ற பெண்ணுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு, வளையல் அணிவித்து மலர் தூவி வாழ்த்துவர். திருமணம் ஆகி கருவுறாத பெண் ஒருத்திக்குத் துணை காப்பு போடுவார்கள். பெண்ணின் ஒரு கையில் இரட்டைப் படையிலும், மற்றொரு கையில் ஒற்றை படையிலும் வளையல் அணிவிப்பர். இறுதியாக அனைவருக்கும் ஐந்து வகையான சாதம் பரிமாறுகின்றனர்.