பஞ்சாங்கத்தில், ‘ஒருவர் இறந்தால் வீடு மூடவேண்டிய நட்சத்திரங்கள்’ என்ற தலைப்பில் சில நட்சத்திரங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் இறந்தால் ஆறு மாத காலத்திற்கும், ரோகிணி நட்சத்திரத்தில் உயிர் துறந்தால் 4 மாத காலமும், கார்த்திகை, உத்திர நட்சத்திரங்களுக்கு 3 மாத காலமும், மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, விசாகம், உத்திராட நட்சத்திரங்களுக்கு 2 மாத காலமும் இறந்தவர்களின் வீட்டை மூடி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு ‘தனிஷ்டா பஞ்சமி’ என்று பெயர்.
அவ்வாறு வீடு மூடப்படாமல் இருக்கவும், தனியாகப் பரிகாரம் சொல்லியிருப்பார்கள். இறந்தவர்களின் ஆன்மா அவர்கள் வசித்த வீட்டைச் சுற்றி வரக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களுக்கு உரிய அந்திம கிரியைகளையும், கரும காரியங்களையும் சரிவரச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். பின்னர், பிள்ளைகள் அவர்களுக்குச் செய்யும் சடங்குகளின் மூலமாக அவர்களின் ஆன்மா பித்ருலோகத்தைச் சென்றடையும்.