ஒருமுறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காகச் சந்திரன் சென்றான்.
அவர் தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
சந்திரன் அதனைக் கற்றுத் தேர்ந்தவுடன் எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தான்.
சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தைக் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார்.
சந்திரனும் அந்தச் சிசுவின் ஜாதகத்தை கணித்தான்.
அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் சொன்னான்.
ப்ரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார்.
அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.
சந்திரனும், குருவும் வானவெளியில் சஞ்சரித்தபடியே குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தொட்டில் சங்கிலி வழியே பாம்பு ஒன்று மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.
குழந்தைக்கும் பாம்புக்குமிடையே ஒரு அடி தூரமே இடைவெளி இருந்தது.
தன்னுடைய கணிப்பு சரிதான். இன்னும் கொஞ்ச நேரத்தில் பலிக்கப் போகிறது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறுமாந்து நோக்க, குரு தன் புன்னகை மாறாமல் குழந்தையையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அந்த எதிர்பாராத அதிசயம் நடந்தது.
திடீரென கண் விழித்த குழந்தை வழவழவென்று மின்னிக் கொண்டு இறங்கி வரும் பாம்பை ஏதோ புது மாதிரி விளையாட்டுப் பொருள் என்று கருதி, மகிழ்ச்சியால் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு துள்ள, தொட்டில் மேலே, கீழே, பக்கவாட்டில் என்று திசைமாறிக் குலுங்க, பாம்பின் தலை சங்கிலியின் ஒரு வளையத்திற்குள் எக்கச்சக்கமாகச் சிக்கிக் கொண்டது.
தன் தலையை விடுவித்துக் கொள்ளும் முயற்சியில் பாம்பு தன் உடலால் சங்கிலியைச் சுழற்றிக் கொண்டு நெளிய, குழந்தை மேலும் துள்ள, இப்போது பாம்பின் வாலும் வேறொரு வளையத்தினிடையே சிக்கிக் கொண்டது.
குழந்தை மேலும் மேலும் துள்ளி விளையாட, எவ்வளவு நேரம்தான் பாம்பு தாங்கும் ஓரிரு வினாடிகளில் பாம்பு இறந்து விட்டது.
அடுத்த வினாடி குழந்தை தன்னுடைய இரண்டாவது வயதில் அடி எடுத்து வைத்து விட்டது.
சந்திரன் தன் ஓலைச் சுவடிகளில் இருந்த குழந்தையின் ஜாதகக் கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
தன் கணக்கு சரியாகவே இருந்தது போலப் பட்டது. பின்னர் குருவைப் பார்த்துக் கேட்டான்.
ஜாதகத்தில் இப்போது குரு பார்வை கூட இல்லையே இது எப்படி நடந்தது...? குழந்தை எப்படிப் பிழைத்தது...?
தோற்றுவிட்ட ஆத்திரம் அவன் குரலில் பீறிட்டது.
புன்னகை மாறாத குரு, அப்போதுதான் வாயைத் திறந்தார்.
ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன...? அதுதான் இப்போது குரு நேரிலேயேக் குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேனே... அப்புறம் எப்படி மரணம் சம்பவிக்கும்...?
சந்திரன் தன் கர்வம் அழிந்து, குருவை வணங்கி விடைபெற்றான்.
குரு இருந்து கொடுப்பதை விட பார்த்துக் கொடுப்பது அதிகம். அதனால்தான் குரு பார்வை கோடி நன்மை என்கிறார்கள்.