பானு என்றால் சூரியன் என்று பொருள். சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. சப்தமிதிதியும், ஞாயிற்றுக் கிழமையும் ஒன்றாக வரும் நாள் ‘பானு சப்தமி’ என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. வெகு அபூர்வமாக வரும் பானு சப்தமி தினம் ஆயிரம் சூரிய கிரகணத்துக்கு ஒப்பானது. இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது சூரிய கிரகணம் முடிந்த பிறகு செய்யும் தர்ப்பணத்துக்கு ஒப்பானது. இந்த தினத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நதி தீரத்தில் நீராடி சூரிய வழிபாடு செய்தல், தானம் செய்தல் ஆகியவை பல்வேறு நலன்களைக் கொண்டுவரும். மற்ற நாட்களில் செய்யும் தான தர்மங்களை விட, இந்த நாளில் செய்யும் தானத்துக்கு ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும்.
இந்த நாளில் சூரிய வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களும் நீங்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பானு சப்தமி நாளன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு துன்பப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். அன்றைய நாளில் காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் கூடுதல் நன்மைகள் வந்துசேரும்.