புரட்டாசி முழுநிலவு நாளை அடுத்தப் பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் வந்து வாழுகின்ற காலம் என்பதை மகாளயபட்சம் என்று கூறுகின்றனர். இந்நாட்களில் இறந்து போன முன்னோர்கள் ஆவி வடிவத்தில் கோயில்களின் தீர்த்தங்களில் நீராடி, தங்களுடைய சக்திகளைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் மரபு வழியினர் வாழிடங்களுக்குச் சென்று தங்களுக்கு அவர்கள் அளிக்கும் உணவினை ஏற்பார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது.
அதனால், இந்த நாட்களில் நீர்த்தார் நீர்க்கடன் அளிப்பதையும், வழிபடுவதையும் இந்துக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பதினைந்து நாட்களில் மகாளய அமாவாசை முக்கிய நாளாகும். பிறகு மகாபரணி, மகாவியதீபாதம், மத்யாஷ்டமி, சந்யஸ்த மாளயம், கஜச்சாயா புண்யகாலம், சஸ்தர ஹத மாலயம் போன்ற நாட்களிலும் நீத்தாருக்கு நீர்க்கடன் அளிக்கின்றனர்.
மகாளயப் பட்சத்தின் ஒவ்வொரு நாள்களுக்கும் ஒவ்வொரு திதியும், அந்நாளில் இறந்து போன முன்னோர்களை வணங்கினால் சில நன்மைகளே ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த நாட்களின் ஒட்டு மொத்தப் பலன்களையும் மகாளய அம்மாவாசையில் வணங்கிப் பெறலாம் என்று கூறுகின்றனர்.
1. பிரதமை - பணம் சேரும்
2. துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3. திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4. சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5. பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்குதல்
6. சஷ்டி - புகழ் கிடைத்தல்
7. சப்தமி - சிறந்த பதவிகள் அடைதல்
8. அஷ்டமி - சமயோசிதப் புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9. நவமி - சிறந்த வாழ்க்கைத் துணை, சிறந்த மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்
10. தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்
11. ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12. துவாதசி - தங்க நகை சேர்தல்
13. திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14. சதுர்தசி - பாவம் நீங்குதல், எதிர்காலத் தலைமுறைக்கு நன்மை
15. மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனைப் பலன்களும் நம்மைச் சேர அமாவாசை முன்னோர் ஆசி வழங்குதல்
நீத்தார் கடன்களைச் செய்யச் சில இடங்களைப் சிறப்பானதாக இந்துக்கள் கருதுகின்றனர். பிற கடற்கரை, நதிக்கரைகளில் செய்தாலும் கீழ்க்கண்டவை சிறப்பான தலங்களாகும்.
ராமேஸ்வரம், கன்னியா குமரி, வேதாரண்யம் போன்ற கடற்கரைகளிலும், காசி, திருவரங்கம், பாபநாசம் போன்ற நதிக்கரைகளிலும் நீத்தார் கடன்களைச் செய்யலாம்.