அன்னப்பிரசன்னம் அல்லது சோறு ஊட்டும் சடங்கு, பிறப்பு இறப்பு வரை இந்து சமயத்தவர் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் இச்சடங்கு ஏழாவதாகும். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தை முதன்முறையாக அரிசி உணவு சாப்பிடத் தொடங்குவதற்கு நடத்தப்படும் சடங்காகும். இச்சடங்கு குழந்தை பிறந்த 6 அல்லது 8 ஆவது மாதங்களில் செய்யப்படும். இந்தச் சடங்கைச் செய்ய உகந்த இடமாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருச்சோற்றுதுறை என்னும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூரணி அம்பிகை சமேத ஶ்ரீ ஓதனவனேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திகழ்கிறது. இச்சடங்கை இந்தியாவின் மேற்கு வங்காளம், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநில மக்கள் ஒரு சடங்காகச் செய்கிறார்கள்.
குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் திட உணவு ஊட்டும் நிகழ்வை நடத்துவார்கள். இல்லையெனில், குழந்தை பிறந்த 8, 9 அல்லது 12 ஆவது மாதங்களில் ஆடி, மார்கழி மாதங்களைத் தவிர்த்து, பிற மாதங்களில் வரும் அஸ்வினி, மிருகசீருடம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில், துவிதியை, திருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில், திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பம் லக்னங்களில் செய்வது நல்லது.