கிரக மாற்றங்களால் தைப்பூசத்திற்குச் சிறப்பு
தேனி. பொன் கணேஷ்

தைப்பூசம் முருகன் வழிபாட்டில் மிகச் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்து சமயப் புராணங்களில் பல இடங்களில் இந்த நாள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரங்களும் இந்த தைப்பூசம் சிறப்பான நாள் என்கிறது.
தை மாதத்தில் சூரியன் தன்னுடைய மைந்தனான சனி பகவான் வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார். ஒரு மாத காலம் சனி வீட்டில் சூரியன் இருப்பார். சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் குணங்களைப் பொறுத்தவரை எதிரிடையான கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதில்லை. இரண்டும் பகை கிரகங்கள்.
சூரியன் பகை ராசியான மகரத்தில் நுழைந்தவுடன் விறுவிறுப்பாக செயல்படத் துவங்குகிறது. எனவே சகலவிதமான சுப காரியங்களையும் சூரியன் விறுவிறுப்பாக நடத்தி வைப்பார். உத்திராயணம் என்னும் புண்ணிய காலத்தையும் தோற்றுவிக்கிறார். ஏற்கனவே சனி பகவான் சூரியன் வீட்டில் இருக்கிறார். அதே சமயம் தை அமாவாசை அன்று சூரியனோடு சந்திரன் சேர்ந்து சனி பகவானுடைய வீட்டில் சஞ்சரிக்கிறபடியால் மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது.
அதே சமயம் சூரியனுக்கு ஏழாம் வீட்டில் அதாவது கடக ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நேரத்தில் அதுவும் தைப்பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி தோன்றுகிறது. எனவே இது தெய்வங்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. குறிப்பாக முருகப்பெருமானுக்கு இது உகந்த நாள். சந்திரன் கடகத்தில் ஆட்சி செய்கிறார். சந்திரனைச் சூரியனும் சூரியனைச் சந்திரனும் ஏழாம் பார்வையாகப் பார்க்கும் தைப்பூசத் திருநாள் மிகவும் முக்கியமான புனித நாளாகும்.
சந்திரன் தன் சொந்த வீட்டிலிருந்து சூரியனை அதுவும் சனி வீட்டில் பார்ப்பதால் இந்த நாள் ஒரு வருடத்தின் மற்ற நாட்களை விட மிக்வும் விசேஷமான நாளாக ஜோதிடரீதியாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணிய காலம் என்பது மிகவும் விசேஷமானது. இந்த புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் பல்வேறு சிறப்புகளுடன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது ஜோதிடம் காட்டும் ஒரு சிறப்பான நாள்.


இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.