“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்” என்று சொல்கிறார்களே. அப்படியானால், மூல நட்சத்திரத்தில் பிறக்கும் ஆண்கள் அரசு பதவி பெறுவார்களா? மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களால் இழப்புகள் ஏற்படுமா? என்று பலருக்கும் சந்தேகம் எழுவது இயல்பு.
“ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்” என்றிருந்த பழமொழியினை “ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்” என்று பலரும் திரித்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு அனைத்து வசதிகளும் கூடி வரும். ஏனென்றால், ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம் பௌர்ணமி நாளாகவும் அமைந்து விடுகிறது. எனவே அவர்கள் ஏதாவது கலை, வித்தைகளில் தலைச்சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனைக் கொண்டு மற்றவர்களை ஆளுதல் அல்லது மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்தல் போன்றவற்றைப் பெற்றவர்களாக இருப்பர். இங்கே “ஆளுதல்” என்ற வார்த்தையை அரசு பதவி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
பின் மூலம் நிர்மூலம் என்பது ஏன்? மூலம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறப்பவர்களின் நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பார். அதனால், எதிரிகளை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இதனைக் கொண்டே எதிரியை இருந்த சுவடு தெரியாமல் அழித்தல் என்று பொருளில் நிர்மூலம் எனப்பட்டது.
“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்” என்பதைத் தவிர்த்து “ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம்” என்று நினைத்துப் பலன்களைப் பெற வேண்டும்.