குளிகன் - பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
குளிகன் என்பது பற்றி அகராதிகள் தரும் செய்தி
குளிகன் - என்பது கரந்துறை கோட்களில் ஒன்று.
குளிகை காலம் - சில காரியாதிகளுக்கு ஆகாது என்று விலக்கப்பட்ட நேரம். அது ஒவ்வொரு கிழமையிலும் வரும் மூன்றே முக்கால் நாழிகை கொண்ட கால அளவு. இதில் பகல் குளிகை காலம் என்றும். இராக்குளிகை காலம் என்றும் இரண்டு வகைப்படும்.
பகல் குளிகை காலத்தின் விவரம் ஞாயிற்றில் இருபத்து இரண்டரைக்கு மேலும், திங்களில் பதினெட்டே முக்காலுக்கு மேலும், செவ்வாயில் பதினைந்துக்கு மேலும், புதனில் பதினொன்றே காலுக்கு மேலும் வியாழனில் ஏழரைக்கு மேலும் வெள்ளியில் மூன்றே முக்காலுக்கு மேலும், சனியில் சூரிய உதயத்திற்கு மேலும் வரும். முன் கூறியபடி மூன்றே முக்கால் நாழிகை கொண்ட நேரம்.
உதாரணம்: ஞாயிறு முகூர்த்தம் ஏழாகும் நன்மதிக்கு ஆறாகும். செவ்வாய்க்கு ஐந்தாகும், புந்திக்கு இரண்டாகும், பொன் மூன்றாம், தூய நல்புகர்க்கு இரண்டாம்; உசனன் தனக்கு ஒன்றாகும், ஆயவியம் முகூர்த்தத்தோட அற்றிடுங் குளிகன் எல்லில் - என்னும் செய்யுளால் அறிக.
இராக்குளிகை காலத்தின் விவரம்
ஞாயிறு ஏழரைக்கு மேலும் திங்களில் மூன்றே முக்காலுக்கு மேலும், செவ்வாயில் சூரிய அஸ்தமனத்தின் மேலும், புதனில் இருபத்து இரண்டரைக்கு மேலும், வியாழனில் பதினெட்டே முக்காலுக்கு மேலும், வெள்ளியில் பதினைந்துக்கு மேலும், சனியில் பதினொன்றே காலுக்கு மேலும், முன் கூறியபடி வரும் மூன்றே முக்கால் நாழிகை கொண்ட நேரம்.
உதாரணம்:
“கதிரவன் தனக்கு மூன்றாகும். கவின் மதிக்கு இரண்டாகும்.
சுதிர் பெருஞ் செவ்வாய்க்கு ஒன்றாகும், சாற்றிய புதனுக்கு ஏழாம்.
மதிவளர் பொன்னுக்கு ஆறாம். மன் புகருக்கு ஐந்தாம். நான்கு
கதிர் மகற்கா முகூர்த்தங் காட்டிய பகல் போற் கொள்ளே”
என்றும் குறிப்பிடுகின்றது.
குளிகன் உதய நேரம்
இராசி மண்டலத்தில் பூமிக்கு நேராகத் தினமும் பகல் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் குளிகன் தோன்றி மறைந்து விடுவான். இவன் ஒவ்வொரு நாளும் உதயம் நான்கு நாழிகை முன்னதாக வருவான்.
கிழமை |
பகல் உதயத்திற்குமேல் |
இரவு அஸ்தமனத்திற்கு மேல் |
ஞாயிறு |
26 நாழிகை |
10 நாழிகை |
திங்கள் |
22 நாழிகை |
6 நாழிகை |
செவ்வாய் |
18 நாழிகை |
12 நாழிகை |
புதன் |
14 நாழிகை |
26 நாழிகை |
வியாழன் |
10 நாழிகை |
22 நாழிகை |
வெள்ளி |
6 நாழிகை |
18 நாழிகை |
சனி |
2 நாழிகை |
14 நாழிகை |
என்றும் குறிப்பிடுகின்றது.
(ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், பக். 76 - 77)
சாதக அலங்காரம் குளிகன் இருக்கும் இராசிக்குத் திரிகோண ராசியிலாவது, அவன் இருக்கும் அம்சத்திலாவது, மக்கள் பிறப்பார்கள் என்று குறிப்பிடுகின்றது.
(நடராசர், சாதக அலங்காரம், ப.129) குளிகன் இருக்கும் இராசிநாதன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் அந்தச் சாதகன் பெருத்த செல்வத்தையும், தனதான்ய விருத்தியையும், சந்தான நலனையும் உடையவனாக வாழ்வான் என்று குறிப்பிடுகின்றது.
(ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.131)
குளிகாதியர் தன்மை
குளிகன் எந்தக் கிரகத்துடன் தொடர்பு பெற்றாலும் அந்தக் கிரகங்களுக்குத் தோடத்தை உண்டாக்குவான். எமகண்டன் எதிரிடையாக நன்மையைத் தருவான். தோடத்தை உண்டாக்குவதில் குளிகனும், சுபத்தை அளிப்பதில் எமகண்டனும் வலிமை பெற்றவர்கள். வேதனை, கெடுதலை உண்டாக்குவதில் அர்த்தபிரகரன், காலன் ஆகியவர்கள் குளிகனில் பாதிபலம் உடையவர்கள். (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.170)
குளிகன் சேர்க்கை - தன்மை
குளிகன் சூரியனுடன் கூடில் தகப்பனுக்கும், சந்திரனுடன் கூடில் தாயாருக்கும், செவ்வாயுடன் கூடில் சகோதரத்திற்கும் அழிவு உண்டாகும். புதனோடு கூடில் உன்மத்தம் - மயக்கம் பிடித்தவனாவான். தாய் மாமனுக்கு அழிவு உண்டாகும். குருவுடன் கூடில் சந்ததிக்கு குற்றமுண்டாகும். சுக்கிரனுடன் கூடில் களத்திர தோடம் உண்டாகும். இழிந்த பெண்களின் சேர்க்கை உண்டு. சனியுடன் இருப்பின் குட்ட நோய் உண்டு அல்லது அற்ப ஆயுள் உண்டு. இராகுவுடன் இருப்பின் விட நோய் உள்ளவன். கேதுவுடன் இருப்பின் நெருப்பினில் துன்பப்படுவான். குளிகன் எந்தக் கிரகத்துடன் தொடர்பு பெற்றாலும் அக்கிரக காரகங்கள் யாவற்றிற்கும், தோடத்தை உண்டாக்குவான். எமகண்டன் அப்படிக் கூடினால் நன்மையைத் தருவான். தோடத்தை உண்டாக்கும் விசயத்தில் குளிகனும், சுபத்தை உண்டாக்கும் விசயத்தில் எமகண்டனும் பலம் உடையவர்கள். கவலையைக் கொடுக்கும் விசயத்தில் அர்த்தப்பிரகரன், காலன் ஆகிய இவர்கள் பாதி பலம் உடையவர்கள் ஆவார் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.130)
இலக்னத்திற்கு நான்காமிடத்தில் கேதுவும், குளிகனும் சேர்ந்திருக்கப் பிறந்தவர் குடியிருக்க வீடு இன்றி தவிப்பர். தாயாருக்கு கண்டம் ஏற்படும். எந்த வித நன்மையும் பெற முடியாது. இது நாக தோடமாகும். பரிகாரம் செய்ய நன்மை பெறலாம் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.148) குளிகனின் தன்மை குறித்து குளிகன் எந்த இராசியில் இருந்தாலும் அல்லது எந்தக் கிரகத்துடன் சேர்ந்திருந்தாலும் கெடுதலையேச் செய்வான். ஆனால் குருவின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருப்பின் தோடம் நிவர்த்தி ஆகும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.83)
குளிகன் நின்ற ராசிநாதன்
குளிகன் நின்ற ராசிநாதன் கேந்திரம் அல்லது திரிகோணம் ஒன்றில் இருந்தால் அந்த ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதியாகவும், நவதான்ய விருத்தியும், புத்திர பாக்கியமும் பெற்று சிறப்புடன் வாழ்வர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.165)
இலக்னத்தில் குளிகன்
குளிகன் இலக்னத்தில் இருந்தால் அந்தச் சாதகன் களவு செய்பவனும், கெட்ட குணமுள்ளவனும், வணக்கம் இல்லாதவனும், வேத சாஸ்திரார்த்த உணர்ச்சியில்லாதவனும், மெலிந்த தேகமுடையவனும், கண்கள் விகாரமுடையவனும், மூடனும், அதிக சந்ததி இல்லாதவனும், அதிக உணவு உண்பவனும், செல்வம் இல்லாதவனும், விசயங்களை அறிவதில் விருப்பமுடையவனும், தொழில் உபாயம் இல்லாதவனும், சூரம் - தனம் - வித்வத்துவம் இல்லாதவனும், எப்போதும் கலகமும், கோபமும் உடையவனும் ஆவான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.128) குளிகன் தனித்து இருந்தால் உடலில் காயம் ஏற்படுதல், பல வித நோய்களுக்கு ஆளாகுதல் கூடும். உயர்ந்த பதவியும், வாகன யோகமும் பெற்று வசதியுடன் வாழ்வும் வாய்ப்பு உண்டாகும். அத்துடன் துன்பங்களும் இருக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.94)
இரண்டில் குளிகன்
சாதக அலங்காரம் எனும் நுால் இரண்டாமிடமான தனஸ்தானத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் திறமையாகப் பேச அறியாதவனும், கலகம் செய்பவனும், தனதான்ய செல்வம் இல்லாதவனும், வெளி தேசத்தில் வசிப்பவனும், சொல்லிலும், வழக்கிலும் சூட்சமமான அர்த்தத்தை அறியாதவனுமாவான். (நடராசர், சாதக அலங்காரம், ப.128) கல்வியறிவு பெறுவது கடினம். பிடிவாத குணம் கொண்டவராக இருப்பர். பொருளாதாரத் துறையில் சீரழிவு இருக்கும். சண்டைசச்சரவு புரிபவராக இருப்பர். வெளியூரில் வாசம் செய்பவர். கலகப் பிரியன். கண்களில் ஊனம் அல்லது நோய் ஏற்படக் கூடும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.97)
மூன்றில் குளிகன்
சாதக அலங்காரம், மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் நான் எனது என்னும் அகங்காரம் மதம் இவைகளை உடையவனும், கோபத்தினால் பொருள் சம்பாதிக்கப்பட்டவனும், திறமையாளனும், சோகமில்லாதவனும், சகோதர அழிவும் உடையவனும் ஆவான் என்றும் குறிப்பிடுகின்றது.(நடராசர், சாதக அலங்காரம், ப.129) அஞ்சா நெஞ்சம், முன்கோபக்காரர், சகோதரர்கள் இருப்பின் அழிவு ஏற்படல் அல்லது அவர்களை விட்டுப்பிரிதல், கடன் வாங்குதல், வாக்கு வன்மை மிகுதல், விரதங்களை மேற்கொள்பவர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.100)
நான்கில் குளிகன்
சாதக அலங்காரம், நான்காமிடமான சுகஸ்தானத்தில் குளிகன் இருப்பின் அந்தச் சாதகன் உறவினர்கள் சேர்க்கை, வாகனம், தனசம்பத்துகள் உடையவன் ஆவான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) சுகக்கேடு உண்டாகும். தாயாருக்குத் தோடம், வீடு, வண்டி, வாகன சுகம் போன்றவை இருக்காது. எதிரிகளின் பயம், தொல்லைகள் இருக்கும். பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் மலைப்பகுதிகளில் சில காலம் வாசம் செய்பவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.107)
ஐந்தில் குளிகன்
சாதக அலங்காரம், ஐந்தாமிடமான புத்திரஸ்தானத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் சஞ்சலமான மனமும், புத்தியீனமும், இழிவான தொழிற்செய்கையும் உடையவனாவான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) புத்திரர்கள் இருக்காது. அப்படி இருந்தாலும் அவர்களால் வேதனையே மிகுந்திருக்கும். சித்தப்பிரமை ஏற்படவும் வாய்ப்புண்டு. வயிறு தொடர்பான வியாதிகளால் துன்புறுவர். பெரியோர்களை மதியார். நீண்ட ஆயுளுக்கும் குறைவு ஏற்படும். இருப்பின் செல்வச் செழிப்புடன் இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.114)
ஆறில் குளிகன்
சாதக அலங்காரம், சத்துரு ஸ்தானத்தில் குளிகன் இருந்தால் எதிரிகளை அழித்தல், ஜாலவித்தை செய்தல், சூரத்துவம், சிரேட்டமான புத்திரர்களைப் பெறுதல் ஆகிய இவைகளை உடையவன் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) எதிரிகளின் தொல்லை இருக்காது. செப்பிடு வித்தை புரிவதில் வல்லமை, உற்றார் உறவினர்களுக்குப் பகைமை, நல்ல குணம், புத்திரப் பாக்கியம். தரும குணம், நீண்ட ஆயுள் ஆகியன அமையும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.119)
ஏழில் குளிகன்
சாதக அலங்காரம், களத்திரத்தானத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் கலகம் செய்வதில் விருப்பம் உடையவன், எல்லாப் பெண்களுக்கும் பதியாகவும், அனைத்து மக்களுக்கும் விரோதியாகவும், கொஞ்சம் செய்ந்நன்றி அறிந்தவனாயும், கொஞ்சம் முன் கோபியாயும் இருப்பான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) களத்திரத்தோடம் ஏற்படும். காம உணர்ச்சி மிகுந்தவராக தவறான பாதையில் செல்பவராக இருப்பர். செய்ந்நன்றி மறந்தவர். மந்த புத்தியுள்ளவர். எதிரிகளின் தொல்லை மிகுந்திருக்கும். அதனால் பொருள் விரயமும் ஏற்படும் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.124)
எட்டில் குளிகன்
சாதக அலங்காரம், ஆயுள் பாவகமான எட்டாமிடத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் விகாரமான கண்களும், முகமும் உடையவன். வடிவிற் குள்ளனாய் இருப்பான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) ஆயுளுக்கு நல்லதல்ல. நோய்களினால் அதிக தொல்லை ஏற்படும். விபத்து, நீர் இவற்றினால் மரணம் ஏற்படும். முகத்தில் குறை அல்லது வடு ஏற்படும். புத்தி கூர்மை உள்ளவர். கருமியாக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.131)
ஒன்பதில் குளிகன்
சாதக அலங்காரம், ஒன்பதாமிடமான பாக்கியஸ்தானத்தில் குளிகன் இருந்தால் அந்தச் சாதகன் ஒழுக்கம், புத்திரர் இவை இல்லாதவன் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) முகவசீகரம் இருக்கும். ஒழுக்கம் இல்லாதவராக இருப்பர். கடவுள் பக்தியும் இருக்காது. தந்தை வகைக்கு நன்மை அமையாது. துரோகியாக இருப்பர். எவ்வழியிலும் பொருள் சேர்க்கைப் பெறுவர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.142)
பத்தில் குளிகன்
சாதக அலங்காரம், தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் குளிகன் இருந்தால் சுபத்தைக் கொடுக்கும் புண்ணிய கர்மங்களைச் செய்யாதவன். மானத்தின் மீது பார்வை இல்லாதவன் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) நீசத்தொழில் புரிபவராக இருப்பர். கல்வி சாஸ்திரம் கற்றவராக இருப்பர். தயாள குணம் இருக்காது. தன் தொழிலில் விருப்பம் இன்றி கடமைக்காகச் செய்யக் கூடியவராக இருப்பர். கருமியாகவும், துரோகம் புரிய அஞ்சாதவராகவும் இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.153)
பதினொன்றில் குளிகன்
சாதக அலங்காரம், இலாபமான பதினொன்றில் குளிகன் இருப்பது அந்தச் சாதகன் சுகமான புத்திரரையும், பெருத்தப் புகழினையும், ஒளி பொருந்திய தேகத்தினையும் உடையவனாவான் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) அதிர்ஷ்டமாகும். பல வகையில் இலாபம் உண்டாகும். அழகு, புத்திக் கூர்மை உள்ளவராக இருப்பர். வசதியுடன் கூடிய வாழ்க்கை, வாகன யோகம் பெற்று சிறப்புடன் வாழ்வர். ஜாலவித்தை, வசியம் புரிவதில் வல்லவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.160)
பன்னிரண்டில் குளிகன்
சாதக அலங்காரம், விரையமான பன்னிரண்டில் குளிகன் இருந்தால் விசயங்களில் விருப்பமில்லாதிருப்பான். குற்றமுடையவன். அதிக செலவு செய்பவன் என்றும் குறிப்பிடுகின்றது. (நடராசர், சாதக அலங்காரம், ப.129) இல்லறத்தில் சுகம் அனுபவிப்பது கடினம். பிறருக்கு உதவாதவராக இருப்பர். செல்வம் அவர்களிடம் தங்கி இருக்காது. மரணபயம் இருக்கும். இரசவாதம் செய்வதில் வல்லவராக இருப்பர். தன் குடும்பத்துக்குத் தாமே அழிவினை விளைவித்துக் கொள்வர் என்றும் குறிப்பிடுகின்றது. (ரிசிபானந்தர், அதிர்ஷ்ட களஞ்சியம், ப.175)
இவ்விதம் குளிகன் பற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளது. குளிகன் பார்த்து பலன் குறிப்பிடும் வழக்கமும் உள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.