அட்டமாதிபத்ய தோடம்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
அட்டமம் என்றால் எட்டு. ஆதிபத்யம் - எட்டினை இடமாகக் கொண்ட தன் தோடம். எட்டாம் பாவகம், அட்டமன் விதி பற்றி புலிப்பாணி ஜோதிடம் தரும் செய்தி, அட்டமன் நிலைமை, மாங்கல்ய தோடம், அரவுகளின் பலன்கள், அட்டமாதிபத்ய தோடம், அட்டமத்தில் இருப்பவன் திசை, மரணம், ஆயுள் நிர்ணயம், மாங்கல்ய ஸ்தானம் ஆகியவற்றினைப் பற்றி சோதிட நுால்கள் தரும் செய்திகளைக் காண்போம்.
எட்டாம் பாவகம்
பன்னிரு பாவகங்களில் எட்டாமிடம் அட்டமத்தானம், எட்டாமிடம், மாங்கல்யத்தானம், ஆயுள்தானம் என்று அழைக்கப்பெறும். இதன் பலன்கள்
1. வாளாயுத காயம்
2. யுத்தம்
3. மலை மீதிருந்து வீழ்தல்
4. மீளாவியாதி
5. காரியவிக்கினம்
6. நீங்காத விசனம்
7. நீங்காத பல துன்பம்
8. மானக்குறைவு
9. செலவினால் நட்டம்
10. ஆயுள்
11. நீங்காத பகை
முதலியவைகளை அறியலாம்.
பொதுவாக இலக்கினத்திற்கு எட்டாமிடம் சுத்தமாய் இருத்தல் மிகுந்த நன்மையைத் தரும். எட்டில் கிரகம் நிற்கக் கூடாது. சுபர் பார்வை, நன்மையைத் தரும். சனி, சுக்கிரன், புதன் இடத்திற்கு ஏற்பப் பலனைத் தருவர். மற்றவர்கள் தீமையைத் தருவர். செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி இவர்களுக்கு அட்டமாதிபத்ய தோடம் உண்டு. சூரியன், சந்திரன் இவர்களுக்கு அத்தோடம் கிடையாது. ஆறு, எட்டு, பன்னிரண்டு இவ்வீடுகளில் நிற்கும் கிரகங்கள் ஆட்சி, உச்சம் எனில் பலன்கள் மாறுபடும்.
அட்டமன் விதி பற்றி புலிப்பாணி ஜோதிடம் தரும் செய்தி
புலிப்பாணி ஜோதிடம் எனும் நுால் இலக்கினத்திற்கு அட்டமாதிபதி யாராக இருந்தாலும் பலம் உள்ளவர். அவரால் சிறைப்படுதலும், மரணம் வாய்த்தலும், மலை மேல் ஏறித் தவறி விழுந்து இறத்தலும் பரதேசம் செல்வதும், மற்றும் கொடிய பகையும், கொடுவாள் போன்ற ஆயுதங்களால் காயமும், குடும்பத்திற்கும், பூமிக்கும், தொழிலிற்கும் துன்பம் விளைத்தலும், விஷபயமும், அம்மை, பேதி போன்ற பற்பல விதமான துன்பங்களைத் தரும் வினையும் நேரும் என்று புலிப்பாணி சித்தர் தமது நுாலில் குறிப்பிட்டுள்ளார்.
“பாரப்பா அட்டமனு மெவரானாலும்
பலமுள்ளோர் அப்பலனை பணிந்து கேளு
சீரப்பா சிறைமரணம் கிரிமேலேறி
சிவசிவா வீழ்ந்திடுவன் தேசம் செல்வன்
கூரப்பா கொடும்பகையும் கொடுவாள்காயம்
குடிமண்ணுஞ் சீவனமும் மோசக்கேடு
வீரப்பா விஷபயமும் அம்மைபேதி
விளையுமடா பலதுன்பம் வினையைக்கேளு”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா. 83, ப.53)
அட்டமாதிபதியால் பீசத்தில் நோய் உண்டாதலும், நற்கதியுள்ள குழவிக்கு பல வித ரோகங்கள் ஏற்படுதலும், பல பேரும் கண்டு அனுதாபப்படுமாறு துாக்கில் தொங்கி மரணமடைதலும், மற்றும் பீரங்கி முதலிய வெடிகளால் ஏற்படும் துன்பங்களும் போன்ற பலவும் ஏற்படுவதோடு அனேகப்பொருள் நஷ்டமும், நீரில் கண்டமுள்ளதலால் பயமும் தீயால் துன்பம், நீரில் இடி விழுததலும் நேர்ந்து மிகத்துன்பம் உண்டாகும் என்பதனை;
“கேளப்பா பீசத்தில் நோயுண்டாகும்
கெதியுள்ள குழவிக்கு ரோகங்கிட்டும்
வீளப்பா தொங்கிடுவன் வெகுபேர்காண
விளங்குகின்ற துாக்குமரக் கோலில் தானும்
பாரப்பா பீரங்கி வெடியால் கேடு
பலதுன்பம் விளையுமடா பொருளும் நஸ்டம்
நீளப்பா நீர்ப்பயமும் தீயால்வேதை
நீரிடியும் விழுகுமடா நிசஞ்சொன்னோமே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.84, ப.53)
அட்டமன் நிலைமை
அட்டமாதிபத்தியம் பெற்ற கிரகமானது அட்டமத்தில் ஆட்சி பெறுமானால் அந்த சாதகனுக்கு ஆயுள் நுாறாகும். அதே சமயம் பகைக்கிரகம் கூடி அட்டமாதிபதியைப் பார்ப்பின் அவன் விதி குறைந்தது. சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்திலோ அல்லது இலக்கின கேந்திரமானதாகவோ இருந்தால் அந்த சாதகன் ஐம்பது வயதிற்குள் சிவலோகம் சேர்வான் இருப்பினும் மற்ற கிரக பலங்களையும் பார்த்து ஆராய்ந்து கூறுதல் வேண்டும் என்பதனை;
“பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு
பலமுள்ள அட்டமனு மட்டமத்தில்
கூறப்பா குழவிக்கு ஆண்டுநுாறு
கொற்றவனே சத்துருவும் கூடிநோக்க
ஆரப்பா அயன்விதியும் அற்பமாகும்
அம்புலியும் உச்ச கேந்திரத்தில் நிற்க
சீரப்பா ஜென்மனுமே அம்பதுக்குள்
சிவலோகஞ் சேர்வனென்று தெளிந்து செப்பே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.85, ப.54)
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் ஒரு லக்னத்தாருக்கு அட்டமாதிபதியே இலக்னாதிபத்யமும் பெற்றவனாக இருந்தால் அசுப பலனைத் தருவதில்லை. அந்த இலக்னத்தாருக்கு பாவியாவதில்லை. மேட லக்னத்தாருக்கு செவ்வாய், துலா இலக்னத்தாருக்கு சுக்கிரன் ஆகிய இவர்கள் பாவியாவதில்லை. (ரிஷிபானந்தர், அதிட்ட ஜோதிடக் களஞ்சியம், ப.219)
இலக்கினத்திற்கு எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் அமர அவனுக்கு ஆயுள் நுாறு. அவனுக்குப் பகைவர் ஏற்படின் அவன் அச்சமற்றவனாக வீரப்போர் புரிபவனாவான். இவன் மிகுதனம் உடைய இருநிதிக்கிழவன். என்பதனை;
“அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு
அட்டமத்தோன் மூன்றினிலேயமர்ந்தவாறும்
கரந்திட்டேன் கருவூரி லிருந்துவந்த
காளையன் நுாறாண்டு வசிப்பனப்பா
பரைந்திட்டேன் பகைவர்களு மெதிர்த்தாரானால்
பாலனுமே போர்புரிவன் நிதியுள்யோன்
கிரந்திட்டேன் போகருட கடாட்ஷத்தாலே
சிறப்பான புலிப்பாணி சொன்னேன் பாரே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.86, ப.54)
மாங்கல்ய தோடம் - மாங்கல்ய ஸ்தானம்
அரவும், சனியும், செவ்வாயும், சூரியனும் சேர்ந்து களத்திர ஸ்தானத்தில் அமர அந்த சாதகனுக்கு வந்த தாரம் எல்லாம் இப்பூமியிலே வரிசையாக மாண்டு போவார்கள். ஆனால் இவர்கள் அட்டமத்தில் அமர்ந்தார்களே ஆனால் அப்பெண்ணின் கணவனே அவளுக்கு முன்னர் இறந்து போவான் என்பதனை;
“பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
படவரவ சனிசெவ்வாய் வெய்யோனேழில்
வாரப்பா வந்ததொரு தாரமெல்லாம்
வையகத்தில் மாண்டிடுவர் விரிசையாக
ஆரப்பா அட்டமத்தி லிவர்கள் நிற்க
அப்பெண்ணின் கணவனோ முந்திசாவன்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாகப் புலிப்பாணி நுாலைப் பாரே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.87, ப.55)
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் பெண்களின் லக்னத்திற்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம் என்பர். அந்த இடத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது நல்லது. அசுப கிரகங்கள் சுபர் பார்வையின்றி இருக்க நேர்ந்தால் மாங்கல்ய பலம் கெடும். இளம் வயதிலேயே விதவையாகக் கூடும்.
(ரிஷிபானந்தர், அதிட்ட ஜோதிடக் களஞ்சியம், ப.228) அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் ஒரு பெண் பருவம் அடைந்த சாதகத்தில் இலக்னத்திற்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம் என்று அழைக்கப்பெறும். இங்கு சூரியன், செவ்வாய். சனி, ராகு, கேது போன்ற அசுப கிரகங்கள் இருந்தால் வாழ்க்கையில் சோதனை, வேதனை நிறைந்திருக்கும். மாங்கல்ய பலத்தில் குறைவு ஏற்படும். சந்திரன், சுக்கிரன் நின்றிருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்காது. புதன் நின்றிருந்தால் புத்திர பாக்கியம் குறைகாணும். இருப்பினும் செல்வச்செழிப்பு இருக்கும்.
(ரிஷிபானந்தர், அதிட்ட ஜோதிடக் களஞ்சியம், ப.168)
சூரியனும், சுக்கிரனும் இலக்கினத்திற்கு எட்டில் நிற்க அந்த சாதகனுக்கு பஞ்சணை, கட்டில், மாடகூடம் உள்ள நன்மனையும், பொருளும், நிலமும் மிகவானதாகப் பெற்று மகிழ்வதுடன் அரன்மனையில் சேவகமும் புரிபவனாவான். பின்னர் சுக்கிரன் வழங்கிய வண்ணமே மீண்டும் வாங்கிடுவான். அதனால் பின்னர் கேடு விளைவது உறுதி ஆகும் என்பதனை;
“சொல்லப்பா சுடர்வெள்ளி யெட்டில்நிற்க
சுகமான கட்டில்மெத்தை மாடகூடம்
அல்லப்பா அகம்பொருளும் நிலமுங்கிட்டும்
அரண்மனையில் சேவகமும் செய்வன் காளை
தள்ளப்பா தரைபொருளும் நிலமுமெல்லாம்
தந்த சுக்கிரன் வாங்கிடுவன் பின்னால்கேடு
வல்லப்பா போகருட கடாட்சத்தாலே
வளமான புலிப்பாணி பாடினேனே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.88, ப.55)
இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் இராகு நிற்க அந்தச் சாதகனை அரவந் தீண்டுதலால் அவனுக்கு மரணம் என்பது உறுதி. அந்த இடத்தை வியாழன் பார்க்க அரவு தீண்டாது. அதே சமயம் உண்ணும் உணவினால் அவனுக்குத் துன்பம் உண்டு என்பதனை;
“ஆரடா யின்னமொரு சேதிகேளு
அட்டமத்தில் கருநாக மமைந்தவாறும்
சீரடா செல்வனையும் அரவந்தீண்டி
செத்திறந்து போய்மடிவன் செகத்திலேதான்
பாரடா பரமகுரு வேந்தன் நோக்க
படவரவு தீண்டாது பாலனைத்தான்
ஊரடா உண்ணுதலால் கேடுமுண்டு
உத்தமனே ஆறோனைக் கூர்ந்துசொல்லே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.89, ப.56)
சனி சந்திரனுக்கு எட்டில் நிற்கப் பலவிதத் துன்பங்கள் ஏற்படும். அவன் தற்கொலை செய்து கொள்வதற்கும் எண்ணுவான். அவனது மனையும், பொருளும், நிலமும் நஷ்டம் ஆகும். அரசர்களது கோபத்திற்கும் ஆளாகும், தோடம் ஏற்படும். இருப்பினும் இலக்கினாதிபதி கேந்திரத்தில் இருக்கக் குற்றமில்லை என்பதனை;
“பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு
பானு மைந்தன் பால்மதிக்கு யெட்டில்நிற்க
சிறந்திட்டேன் ஜென்மனுக்கு அனேகதுன்பம்
செத்திறந்து போவதற்கு யெண்ணங்கொள்வன்
அறைந்திட்டேன் அகம்பொருளும் நிலமும் நஷ்டம்
அப்பனே அரசனிடம் தோஷமுண்டாம்
குரைந்திட்டேன் குடிநாதன் கேந்தரிக்க
குற்றமில்லை புலிப்பாணி கூறக்கேளே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.
(வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.90, ப.57)
அரவுகளின் பலன்கள்
அரவுகள் இலக்கினத்திற்கு நான்கிலேனும், மற்றும் 1, 2, 8 ஆகிய இவ்விடங்களில் அமர்ந்தால் நற்பலனினைச் செய்ய மாட்டார். நான்கில் மாதர் தோஷம் குறைவினைச் செய்யும். பன்னிரண்டாம் இடத்தில் பாதரோகமும், அட்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் நிற்க மிகுதியான பயமும் ஏற்படும். பிற ராசிகள் நலமுடையது என்பதால் 3, 5, 6, 7, 9, 10, 11 நலம் என்பதனை;
“நன்றாகப் பாம்புகள் தான் நாலிலேனும்
நலமாக ஈராறும் இருநான்கேனும்
சென்றிட்ட தீயர்பலர் செய்யாரப்பா
திறமான நாலில் நின்றால் மாதர்தோஷம்
குன்றிவிடும் யீராறில் பாதரோகம்
குணமான இருநான்கில் கூறும்பாம்பால்
நன்றாக மிகுபயமா மற்றராசி
நலமென்றே புலிப்பாணி நவின்றிட்டேனே”
எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. (வளர்மதி, புலிப்பாணி சோதிடம், பா.91, ப.57)
அட்டமாதிபத்ய தோடம்
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி இவர்களுக்கு அட்டமாதிபத்யத் தோடம் உண்டு. ஆனால் சூரியன், சந்திரன் இவர்களுக்கு அத்தோடம் கிடையாது என்று இந்நுால் குறிப்பிடுகின்றது. (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.121)
அட்டமத்தில் இருப்பவன் திசை
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் அட்டமத்தில் இருப்பவன் நல்லவனில்லை என்று கூறப்பட்டாலும் அவனே இலக்னத்தாருக்கு பாவியாக இருந்தால் நல்லவனாகின்றான். அவன் திசையும் நன்றாக இருக்கும். அதற்கு புதன் விதிவிலக்கு. அவன் சுபனாகவோ, அசுபனாகவோ இருந்தாலும், அட்டமத்தில் இருந்து திசை நடந்தால் யோகம் அளிப்பான். (ரிஷிபானந்தர், அதிட்ட ஜோதிடக் களஞ்சியம், ப.205)
மரணம்
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் ஒருவருக்கு இலக்னத்திற்கு எட்டுக்குரியவன் எந்த ஸ்தானத்தில் இருக்கிறானோ அதற்கு ஐந்து ஒன்பதாமிடத்து ராசிக்குரிய மாதம் எதுவோ அந்த மாதத்தில் மாரகாதிபத்தியம் பெற்றவர்களின் தசாபுத்தி தொடர்புபடும் சமயம் மரணம் ஏற்படும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.205)
ஆயுள் நிர்ணயம்
அதிட்ட ஜோதிடக் களஞ்சியம் இலக்னத்திற்கு எட்டாமிடம் ஆயுள் பாவம் என்று அழைக்கப்பெறும். ஆயுளை நிர்ணயிக்க இதனையும், ஸ்தானாதிபதியின் - இடத்தின் அதிபதி பலம், அந்த ஸ்தானாதிபதி நின்ற இராசிக்குரியவரின் பலம். ஆயுள்காரகனின் பலம், போன்ற பல அம்சங்களையும் ஆராய்தல் வேண்டும். இதில் ஒன்று பலம் பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுள் பெற வாய்ப்புண்டு. அத்துடன் இலக்னம், இலக்னாதிபதி, பத்தாமிடம், பத்துக்குரியவன், ஒவ்வொரு இலக்னத்தாருக்கும் மாரக ஸ்தானங்கள், அந்த ஸ்தானாதிபதிகள் போன்ற அம்சங்களையும் ஆராய்ந்து நிச்சயிக்க வேண்டும். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், ப.211)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.