நட்சத்திரங்கள் குறித்த பழமொழிகள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
அசுவிணி முதல் ரேவதி முடிய உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழு. இவை மட்டும் அல்லாது வேறு சிலவும் உள்ளன. இவை குறித்த பழமொழி பற்றிக் காண்போம்.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகி விடாது. ஆயிரம் நட்சத்திரம் ஒன்று கூடினாலும் அது பூரண சந்திரன் ஆகுமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.29.)
“ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரனுக்கு ஈடாகாது.” ஆயிரம் ஆயிரம் முட்டாள்கள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தாலும் ஒரே ஒரு அறிவாளி தரும் முடிவிற்கு ஈடு இணையாகாது என்பதனை உணர்த்துவதே அறிவாளி சந்திரனைப் போன்று மிகுந்த பிரகாசம் உடையவன் என்பது என்று ம. தஜோ குறிப்படுகின்றார். (சமுதாய கிராமப் பழமொழிகள், ம. தஜோ, 28.)
நட்சத்திரங்கள்; கூச்சலிடுவதில்லை, (எஸ்,லீலா, பு.பெ.உ.ப.மொ, அயர்லாந்து, ப.24)
நட்சத்திரத்தை எண்ணி விட முடியாது. நாய் வாலை நிமிர்த்த முடியாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.154.)
அழகு - வான் - தாரகை:
வானின் அழகு தாரகைகளில் உள்ளது. பெண்ணின் அழகு கூந்தலிலுள்ளது - இத்தாலி (ப.ரா,உ.ப, ப.183.)
வானத்தின் அழகு நட்சத்திரங்கள். பெண்ணின் அழகு அவருடைய கூந்தலில் உள்ளது - இத்தாலி (எஸ். லீலா, பெ.உ.ப.எ.1, ப.44.)
எண்ணற்ற நட்சத்திரங்கள்:
ஆற்றுமணலையும் ஆகாசத்து நட்சத்திரத்தையும் அளக்க முடியுமா? (துர், த.நா, ப.43)
ஆற்று மணலையும், ஆகாயத்து நட்சத்திரங்களையும் அளவிட முடியுமா? (மேலது, ப.31.)
புராணக் கூறுகள்:
அர்ச்சுனன் மனைவிமாரையும் ஆகாசத்து நட்சத்திரங்களையும் எண்ண முடியாது. (மு. சரளா, பெ.ப.ப.மொ, ப.122.)
நட்சத்திரத்தை எண்ண முடியாது. நாய்வாலை நிமிர்த்த முடியாது. (மேலது, ப.97.)
இருட்டு - இருள்:
ஒரு சின்ன நட்சத்திரத்திங் கூட இருட்டில் மின்னுகிறது - ஃபின்னிஷ் பழமொழி (சு.ல, உ.ப, ப.47.)
இரவு :
பகலில் மின்னாதது, இரவில் மின்னும் - ஸ்விஸ் பழமொழி. (மேலது,ப.47.)
நட்சத்திரங்கள் ஓசையிடுவதேயில்லை - ஐரிஷ் பழமொழி.
நட்சத்திரங்கள் உலகை ஆள்கின்றன. ஆனால் நட்சத்திரங்களைக் கடவுள் கட்டுப்படுத்துகிறார் - இலத்தீன் பழமொழி. (மேலது, ப.273.)
நாள் நட்சத்திரம்:
செய்யும் காரியம் நன்மையாக முடிய வேண்டும் என்பதற்காகப் பார்க்கும் நல்ல நேரம்.
அவர் நாள் நட்சத்திரம் பார்க்காமல் எந்தக் காரியத்தையுமே செய்ய மாட்டார்.
கல்யாணத்திற்கு நாளும் நட்சத்திரமும் மட்டும் பார்த்தால் போதுமா? பணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டாமா? உம் இடைச் சொல்லுடன். (பே.வி.எஸ்.சே, த.த.ம.தொ.அ, ப.223.)
விண்மீன்கள்:
வானத்தின் கவிதை விண்மீன்கள் என்றால் வையத்தின் கவிதை பெண்கள் (ஹார்கிரெவ், முனைவர். சரளா இராசகோபாலன், பெண்களைப் பற்றிய பொன்மொழிகள், ப.107)
இராஜயோகம் தரும் நட்சத்திரங்கள்:
ஆதிரை, பரணி, சோதி, அத்தநாள், உத்திராடம் மேதினி பிறந்தோர்க்கெல்லாம் விளம்பலாம் இராஜயோகம்
அசுவனி - கார்த்திகை:
எஸ்.லீலா எழுதிய புகழ் பெற்ற உலகப் பழமொழிகள் 2300க்கும் அதிகமான பழமொழிகள் எனும் நுாலில்,
அசுவினி கார்த்திகையில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழை இல்லை. (எண்.24, ப.43)
பரணி :
பரணி அடுப்புப் பாழ் போகாது (எஸ்.து.த.நா.ப, ப.203.)
பரணி அடுப்புப் பாழ் போகாது (பரணி நட்சத்திரத்தில் சனி மூலையில் அடுப்புப் போட்டால் குடி உயரும்.) (போ.ப.மு, பு.நோ.ப, ப.64.)
பரணி தரணியாளும். பரணியில் பிறந்தவன் தரணியாள்வான்.
பரணியில் பிறந்தால் தரணியாள்வான் (அ) பரணி தரணி ஆளும். (பேச்சு வழக்கு)
பரணி மழை தரணியெல்லாம் பெய்யும். (எஸ்.லீலா, பு.பெ.உ.ப, எண்.41, ப.7.)
பரணி மழை தரணியெல்லாம் பொழியும். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.174.)
திருவாதிரை:
திருவாதிரைக்களி தினமும் அகப்படுமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.144).
மிளகுப் பொடியோட திருவாதிரை! (துர், த.நா.ப, ப.241.)
அவன் தில்லு முல்லு; திருவாதிரை. (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.19.)
சந்தேகமின்றி உலகத்துள்ளோர் வணங்குவதற்கு ஒரு மணியைப் போல, பிரகாசிக்கப் பெற்ற திருவாதிரை நட்சத்திரம் என்பது பொருள். சிவப்பெருந்தகையார் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தமையால் “ஐயம் அற உலகு தொழ” என்று கூறினார். “ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை” என்ற வசனப்படி திருவாதிரை நட்சத்திரம் ஒரு மணியைப் போல் தனியே பிரகாசித்து வானவெளியில் விளங்கும் நட்சத்திரமாதல் பற்றி ‘ஒரு மணி’ எனக் கூறினார் என்க. (ப.228.)
ஐயம் அற உலகு தொழு ஒரு மணியாய் விளங்கிய ஆதிரையின் ஆனே (நடராசர், சா.அ, செ.எ.104, ப.227.)
ஆயில்யம்:
மாமியார் - மருமகள் எனும் தலைப்பில், “ஆயில்யத்தில், மாமியார் ஆசந்தியிலே (மு. சரளா, பெ.ப.ப.மொ, ப.44.)
ஆயில்யத்தில் மாமியார் ஆசந்தியிலே. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.29.)
மகம்:
மகத்துப் பிள்ளை ஜெகத்திலே கிடைக்காது.
மகத்துப் பெண் ஜகத்தில் கிட்டாது.
மகத்தில் பிள்ளை ஜகத்தில் இல்லை. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.197.)
”மகத்தில் மங்கை; பூரத்தில் புருடன்.
மகத்துப் பெண் பூரத்துப் புருடன்.
மகத்துத் தகப்பன் முகத்தில் விழியான்.
மகத்துப் பெண், முகத்துக்கு ஆகாது.
மகத்துப் பெண் வசத்திலே கிடையாது” (மு. சரளா, பெ.ப.ப.மொ மேலது, ப.63.)
திதி கொடுக்கத் தவறியவர்கள் மகத்தில் தருவது சிறப்பாய் கருதப் பெறுகின்றது.
மறந்த திதியை மகத்தில் கொடு. (மேலது, ப.201.)
மு. சரளா, பெ.ப.ப.மொ , மகப்பேறு தலைப்பில், ‘மகம் ஜெகத்தை ஆளும்’ (தினந்தந்தி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம் 17-8-2012 ப.6)
பூரம்:
பூரத்திற்கு தாரத்தால் தொல்லை (தினத்தந்தி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம் 17.8.2012 ப.6)
உத்திரம்:
உத்திரத்தில் பிள்ளையும், ஊர் ஓரத்து நிலமும் (பே.ப.மு, பு.நோ.ப, ப.65)
உத்திரத்தில் ஒரு பிள்ளையும், ஊர் ஓரத்தில் ஒரு காணியும். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.45.)
உத்திரத்தில் ஒரு பிள்ளை; உறவுக்கெல்லாம் ஒரு தொல்லை. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.44.)
அஸ்தம்:
அஸ்த நட்சத்திரத்தில் ஒரு சேயும் ஆற்றோரத்தில் நிலமும். (மேலது, ப.65)
உழவியல்: அத்தத்தில் நாற்று விடு. (எஸ். லீலா, பழங்கால தமிழப் பழமொழிகள்;, ப.23).
அத்தத்தில் நாற்று நடு.
சித்திரை:
சித்திரை அப்பன் தெருவிலே (பேச்சு வழக்கு)
சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்.
சுவாதி:
சுவாதியில் வில் போட்டில் சொன்ன படி மழை பெய்யும். (மேலது, ப.126.)
சுவாதி சுக்கிரன் ஓயாமழை.
கேட்டை:
கெட்ட நாளுக்கு ஒரு கேட்டை பிறந்தது. (புதன் நலம் காலம் வந்தது.)
கேட்டையில் பிறந்தால் எட்டுச் சேவகன் உண்டு.
கேட்டையில் பிறந்தவன் கோட்டைக் கட்டி ஆள்வான்.
கேட்டை(புதன்) மூட்டை (மூலம்) செவ்வாய். (மேலது, ப.65.)
கேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை.
கேட்டை நட்சத்திரம் ஜேஷ்டனுக்கு (மூத்தவனுக்கு) ஆகாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.106.)
கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. (மேலது, ப.116.)
கேட்டை மூட்டை செவ்வாய்க்கிழமை. (மேலது, ப.118.)
கேட்டை மூட்டை செவ்வாய்க் கிழமை கேட்க முடியாத கடன் மரியாதை - தமிழ்நாடு. (எஸ்.லீலா, பு.பெ.உ.ப, எ.407, ப.121.)
மூலம்:
நோயா? நட்சத்திரமா?, மாமியார் - மருமகள்
மூலத்துப் பெண் மாமியார் மூலையிலே (டா.சரளா, பெ.ப.ப.மொ, ப.48)
மூலத்துப் பெண்ணைக் கொண்டால் மாமியார் மூலையிலே. (மேலது, ப.210.)
ஆண் மூலம் தரணியாளும்; பெண்மூலம் நிர்மூலம். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு, ப.59)
மூலத்தான் போகிற இடம் போக்கற்றுப் போகும். (பே.ப.மு,பு.நோ.ப, ப.65)
மூலத்தில் பிறந்தவன் காலத்தில் வாழ்வான்.
வைத்தியப் பழமொழி - மூலம் நட்சத்திரம் குறித்தப் பழமொழி அல்ல.
ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.27.)
மூலம் என்றால் வேர், கிழங்கு, அடிப்பாகம் என்று பொருள். இது வைத்தியப் பழமொழி. சோதிடப்பழமொழி அன்று. ஆண் மரத்தின் வேர் மிகுந்த மூலிகைத் தன்மை வாய்ந்தது. நோய் வாய்ப்பட்டவனை வலிமை உடையவனாக ஆக்கும் தன்மை உடையது. பெண் மரத்தின் வேர்கள் அழிக்கும் தன்மை உடையன என்பதையே இப்பழமொழி மெய்ப்பிக்கின்றது. எனவே இங்கே இந்த சோதிட விதி பொருந்தாது.
பூராடம்:
பூராடக் காரனோடு போராட முடியாது. (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.187.)
பூராடகாரனோடு சண்டை போடாதே.
பூராடக்காரனோடு சண்டை போட்டு மீள முடியாது. (மேலது, ப.65)
அகதி பெறுவது பெண் பிள்ளை, அதிலும் வௌ்ளிப் பூராடம். (எப்போதும் சண்டை) (மேலது, ப.65)
ஆண்டிச்சி பெறுவது பெண்பிள்ளை; அதுவும் வௌ்ளிப் பூராடம். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு, ப.59)
பூராடக்காரனோடு போராட முடியாது. (துர்.த.நா.ப, ப.219.)
அகதி பெறுவது பெண் பிள்ளை; அதுவும் வௌ்ளி பூராடம். (பிரம்ம புத்திரன், தன்னிகரில்லா தமிழகத்துப் பழமொழிகள், ப.6.)
உத்திராடம்:
உத்திராடத்தில் பிள்ளையும் ஊர் வாரியில் ஒரு நிலமும்.
(மேலது,ப.59)
உத்திராடம் ஒரு பிள்ளையும் ஊர் வாரியில் ஒரு நிலமும்.
(மேலது, ப.55.)
கடுக்காய்க்கு அகனி நஞ்சு; சுக்கிற்குப் பரணி நஞ்சு
(மேலது, ப.78.)
திருஓணம்:
திருவோணத்திற்கு எதிர் ஓணம் இல்லை.
திருவோணத்திற்கு எதிர் ஓணம் கிடையாது.
திருவோணத்தான் உலகாள்வான்.
திருவோணத்தானை வெற்றி கொள்ள இயலாது.
அவிட்டம்:
அவிட்டத்திலே பெண் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன். (மு. சரளா, பெ.ப.ப.மொ, மகப்பேறு தலைப்பு, ப.58)
அவிட்டம் தொட்டதெல்லாம் பொன்.
அவிட்டம் தவிட்டுப் பானையும் பொன். (மேலது,ப.65.)
அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையிலும் பொன். (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.19)
பெண்களைப் பற்றிய பழமொழிகள் நூலில், பெண்ணின் உறவு நிலைகள் அக்காள், தங்கை.
“அவிட்டத்தில் பிறந்த தங்கச்சி அந்நியத்தில் கொடுக்கக் கூடாது” என்கின்றது. (மு. சரளா, பெ.ப.பமொ, ப.24)
அவிட்டம் தவிட்டுப் பானையிலே பணம்.
அவிட்டம் தவிட்டுப் பானை எல்லாம் பொன்.
சதயம்:
சதயத்திற்கு சொல் புத்தியும் கிடையாது; சுய புத்தியும் கிடையாது.
சுயபுத்தி இல்லையென்றாலும் சொற்புத்தி வேண்டாமா? (பிரம்ம புத்திரன், த.த.ப.மொ, ப.125.)
கற்கடக நட்சத்திரம்:
காவரி ஆற்றை மறைப்பாய் கார்த்திகை மாதத்துக் கற்கடக நட்சத்திரத்தை மறைப்பாயா? (மேலது, ப.100.)
கிழமைகள் பிறந்த நட்சத்திரங்கள் குழந்தை பிறந்தால் ஆகாது.
சோதிட பழம் பாடல் ஞாயிற்றுக் கிழமையில் பரணி நட்சத்திரத்திலும், திங்கட் கிழமையில் சித்திரை நட்சத்திரத்திலும், செவ்வாய்க் கிழமையில் உத்திராட நட்சத்திரத்திலும், புதன் கிழமையில் அவிட்ட நட்சத்திரத்திலும், வியாழக் கிழமையில் கேட்டை நட்சத்திரத்திலும் வௌ்ளிக்கிழமை பூராட நட்சத்திரத்திலும், சனிக் கிழமை இரேவதி நட்சத்திரத்திலும், குழந்தை பிறந்தால் அதிக துக்கத்தை உண்டாக்கும்.
“ஆயசித் திரையில் திங்கள் அணிகுசன் உத்திராடம்
ஞாயிறு பரணி கேட்டை நற்குரு வாரம் ஆகும்
ஏயறு புதன் அவிட்டம் இரேவதி சனியே ஆகும்
தூயபூ ராடம் வௌ்ளி இதில் சன்மம் துயரம் செய்யும்.” (சா.அ.) - செ.74, ப.197.)
“வந்திக்குங் கதிர்க்குங் கங்குல் மதிக்குச்சித் திரைசேய் தரடி
புந்திக்கு விட்டம் ஆகும் பொன்னுக்குக் கேட்டை ஆகும்
சந்திக்கும் புகர்பூ ராடம் சனிதோணிப் பிறந்த நாள்ஆம்
சிந்திக்குங் கருமம் எல்லாம் தீமையாய் விளையும் மாதே.”
என்று சூடாமணி உள்ளமுடையான் தெரிவிக்கின்றது.
கிழமைகள் பிறந்த நட்சத்திரங்கள் குழந்தை பிறந்தால் ஆகாது, இவ்வாறு அமைந்த தினங்களில் சுபக்கருமங்கள் செய்யக் கூடாது. (மேலது, ப.197.)
பழங்காலம் முதல் சோதிட வழக்கினில் வரும் பழமொழிகளாக இவை விளங்கி வருகின்றன.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.