தமிழன் உணவு முறை
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
பகுதி 2 - தொடர்ச்சி
பஞ்சான்னம் - ஐந்து அன்னம்
எள்ளன்னம், கடுகன்னம், புளியன்னம், பயற்றன்னம், உளுந்தன்னம், வேறு வகை - கோதுமையன்னம், சம்பா அரிசி அன்னம், யுவையரிசி அன்னம், மூங்கிலரிசி அன்னம், குழைச் செந்நெல்லரிசி அன்னம், சுத்தானம், தயிரன்னம், சர்க்கரை அன்னம், நெய்யன்னம், பரமான்னம் என்பன. (சைவ பூஷணம்.) (அபிதான சிந்தாமணி, ப1227)
சித்திரான்ன வகை
இவை அன்னத்தில் வாய்க்கினியப் பொருள்களைப் புணர்த்திச் செய்வன, பாற்பொங்கல், பருப்புப்பொங்கல், சருக்கரைப்பொங்கல், மிளகோரை, புளியோரை, கடுகோரை, எள்ளோரை, உழுந்தோரை, ததியோதனம், வெங்கிபாத், பலவகைக் காய்கள் சேர்ந்த சோறு, கிச்சடி, பழரசம் சேர்ந்த அன்னம் முதலியன. (அபிதான சிந்தாமணி, ப. 777)
சாதவகை
கடலை மாச்சேர்ந்த சாதம், எள்ளோரை, வௌ்ளரி விரை, மாச்சேர்ந்த சாதம், புளியோரை, ததியோதனம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சேசர்ந்த சாம், கிச்சிலி ரசம், வாதுமைப் பருப்புச் சர்ந்த சாதம், மிளகுப் பொங்கல், கத்திரிக்காய் சேர்ந்த சாதம், தேங்காய்ப்பால் பொங்கல், வாழை, பலா, மாம்பழங்கள் சேர்ந்த பொங்கல், கடலை, சிறுபயறு, உளுந்து, கொள்ளு தனித்தனி சேர்ந்த பொங்கல், கிச்சடி, புலவு முதலிய என்பனவும் உண்டு. (அபிதான சிந்தாமணி, ப.745)
போஜனக்கிரமம்
ஆசாரக்கோவைத் தெரிவிக்கும் செய்தி: போஜனம் - உணவு. 1. நீராடி வாயைத் துடைத்துக் கொண்டு உண்ணும் இடத்தை மண்டலஞ் செய்து உண்டவரே உண்டவர்கள். கால் கழுவிய ஈரம் உலரும் முன்னர் உண்ண வேண்டும். கால் ஈரம் உலர்ந்த பின் படுக்கை அடைய வேண்டும். உண்ணும் போது மிழக்காக உட்கார்ந்து துாங்காது அசையாது நன்றாக உட்கார்ந்து வேறொன்றையும் பாராமலும், பேசாமலும் உணவைத் தொழுது உண்ண வேண்டும். 2. தம் பொருட்டாக உலையேற்றலும், தமக்காக உயிர்வதை செய்தலும், மடைப்பள்ளியை எச்சிற்படுத்தலும், சிறுவர்கள் உண்ணுகையில் பெரியோர் உயர்ந்த பீடத்திருத்தலும், சிறுவர்கள் உண்ணுகையில் அவரை எவரேனும் மனம் வருந்தக் கூறலும் ஆகாது. 3. விருந்தினர், முதியோர், பசுக்கள், பட்சிகள் - பறவைகள், பிள்ளைகளுக்கு உணவு கொடாமல் முந்தி உணவு உண்டலும், படுத்து உண்ணலும், நின்று கொண்டும், வெளியிடத்து இருந்து கொண்டும், அதிகமாக உண்ணலும், கட்டிலின் மீதிருந்து கொண்டும், பெரியோர்களுடன் சமபந்தியில் உண்ணும் போது அவர்கள் உண்ணுமுன் உண்ணலும், அவர்கள் எழுவதற்கு முன் எழுதலும், அவர்களை நெருக்கி இருத்தலும், அவர்களுக்கு வலப்பக்கத்து இருந்து உண்ணலும் ஆகாது. உண்மையில் தீம்பொருள்களை முதலாகவும், மற்றவைகளை நடுவாகவும், கசப்பைக் கடையாகவும் உண்ண வேண்டும். தம்மினும் முதியோரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு உண்ணல் ஆகாது. ஊண்டபின் வாய் நீர் உட்புகாமல் கொப்புளித்து உமிழ்ந்து எச்சில் அறும்படி வாயையும், பாதங்களையும் நன்றாகத் துடைத்து 3 முறையாகத் தண்ணீர் பருகிக் கண், காது, மூக்கு, செவி முதலிய உறுப்புக்களைத் துடைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை இரண்டு கைகளால் வாரிக் குடித்தலும், ஒரு கையால் தண்ணீர் பருகலும், ஒரு கையால் கொடுத்தலும் ஆகாது என ஆசாரக்கோவைத் தெரிவிக்கும் செய்தியும் இங்கே குறிப்பிடப் பெற்றுள்ளது.
போஜனம் - புசிக்கும் திக்கு - உணவு உண்ணும் திசை
ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாகவும், சம்மத்தை விரும்புகிறவன் மேற்கு முகமாகவும், சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாகவும் இருந்து புசிக்க வேண்டும்.
போஜன விதி
உணவு உண்ணும் விதி - இஃது உணவு கொள்ளுங்கால் இவ்வாறிருந்து உண்கவெனக் கூறும் விதி. போஜன காலத்தில் சமபந்தியில் உண்ணத்தக்கோர் அந்நியரால் லாத சம சாதியராய் நியமாசாரம் உடையாகளாயிருத்தல் வேண்டும். போஜனம் செய்யுமிடம் வெளிச்சம் உள்ளதாய் அந்நியர் புகப் பெறாததாய்க் கோமியத்தால் மெழுகப்பட்டாதாய் இருத்தல் வேண்டும்.
போஜனஞ் செய்யும் பாத்திரம்
உணவு செய்யும் பாத்திரம் - பொன், வௌ்ளி, வெண்கலப் பாத்திரங்களும், இலைகளில் வாழை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை கமுகமடல் முதலியவையாம், இவற்றுட் பொற்பாத்திரம் சுக்ல விர்த்தி உண்டாம். வாத பித்த சிலேத்மாதிகளைச் சமனஞ் செய்யும் வளப்பத்தினையு மனவுற்சாகத்தையுந் தந்து சோபாரோகத்தை நீக்கும். வெள்ளிப் பாத்திரம் சிலேத்ம பித்த கபத்தை நீக்கித் தேஜஸையும் மகிழ்ச்சியையுந் தரும். வெண்கலப் பாத்திரம் சிக்கல், சோர்வு, இரத்த பித்தரோகம், இவைகளை நீக்கித் தேஜஸையும் மகிழ்ச்சியையும் தரும். வெண்கலப் பாத்திரம் சிக்கல், சோர்வு, இரத்த பித்தரோகம், இவைகளை நீக்கித் தாதுவிர்த்தியையும் வன்மையையும் உண்டாக்கும். வாழையிலை சரும தாதுக்களுக்குப் பளபளப்பும் சுக போகங்களையுந் தந்து மந்தாக்னி, துர்ப்பலம், ஷீண வாத சிலேத்துமம், அரோசகங்களைப் போக்கும். தாமரையிலை வெப்பம், வாதரோகம் மந்தாக்னிகளை உண்டாக்கும், சம்பத்தைப் போக்கும். பல வகையான பாலுள்ள மரங்களின் இலைகள் பக்கவாதம், ஷயம், தாகரோகம் இவை அணுகாது காக்கும். பலாவிலை குன்ம ரோகத்தையும் பித்தத்தையும் அதிகப்படுத்தும். பொதுவாக இலைகளில் வௌ்வாழையிலை மனத்திற்கு உற்சாகத்தையும் திருப்தியையுந் தரும். மற்ற இலைகள் மத்திம பலனைத் தரும். கல்லைகள் தைக்குமிடத்து ஒரு ஜாதியான இலையால் தைக்க. வாழை இலையில் உண்ணுங்கால் அறுத்த அடிப்பாகத்தை வலப்பக்கமாக வைத்துண்க. போஜனப் பாத்திரங்களையும், இலைகளையுஞ் செம்மையாகச் சுத்தஞ் செய்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழமளவை சதுரச்சிரமாகப் புள்ளியின்று மெழுகிப் போடல் வேண்டும். இரண்டு கால்களையும் மடக்கி இட முழந்தாளின் மேல் இட முழக்கையை ஊன்றிக் கொண்டு போஜன சமயத்தில் தகாத வார்த்தைகள் பேசாமலும், பேசுதல், சிரித்தல், நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு என்பவைகளையும் அதீட்ஷிதர், புலையர், விரத பங்கமுடையார், பூப்புடைய மங்கையர் முதலியோரைப் பாராமல் விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து இட்ட தேவதைக்கும், அக்நிக்கும், குருவிற்கும், நிவேதித்து மௌனமாய்ச் சிந்தாமல் புசித்தல் வேண்டும். எவன் தலை மேலாடையுடனும் தென் முகமாகவும் புசிக்கின்றானோ அவனது அன்னத்தினை அரக்கர் புசிக்கின்றனர். மண்டலஞ் செய்யுமிடத்து வேதியர்க்குச் சதுரமாயும், அரசனுக்கு முக்கோணமாயும், வைசியனுக்கு வட்டமாயும், சூத்திரனுக்குப் பிறை வடிவாகவும் மண்டலஞ் செயல் வேண்டும். ஆதித்தர், வசுக்கள், உருத்திரர், பிரமன் இவர்கள் மண்டலங்களில் வசிக்கின்றனராதலின் மண்டலம் வசியஞ் செய்ய வேண்டும். கால், கை, வாய், பூசி இவ்வைந்துறுப்புக்களும் உலராததற்கு முன் கோபமற்றவனாய்க் கிழக்கு முகமாகவிருந்து இரண்டு காலினாலாயினும் ஒற்றைக் காலினாலாயினும் நிலத்தினைத் தொட்டுக் கொண்டு புசிக்க வேண்டும். பொன், வௌ்ளி, வெண்கலம் இந்தப் பாத்திரங்களிலும் தாமரையிலை, முருக்கிலை இவற்றாற் சமைத்த கல்லைகளினும் புசித்தால் மூன்று தினம் தீட்சையோடு செய்த வேள்விப் பயனை அடைகிறான். எவன் வெண்கலப் பாத்திரத்தில் புசித்து வருகின்றானோ அவனுடைய ஆயுளும், அறிவும், புகழும், வன்மையும் விருத்தியடைகின்றன. முருக்கிலை, தாமரையிலையிற் புசித்தால் இல்லறத்தான் சாந்திராயண விரதஞ் செய்க. பிரமசாரியுந் துறவியும் அவற்றிற் புசித்தால் சாந்திராயண பலனைப் பெறுவர். உண்கலத்தை நிலத்தில் வைத்துண்ணில் அது உபவாசத்தோடொத்த பலமென்று கூறியிருக்கிறது. பிராணாகுதி கொள்ளுமளவே நிலத்தின் மேல் வைக்க வேண்டும். பிறகு ஆசனத்தின் மீது வைத்துண்ணல் வேண்டும். என்னெனின் நீர்த்துளி, சோற்றின் அவிழ்கள், ஆடையுறுப்புக்களிற் சிதறுமாதலானும் காற்றூசு, ஆடைத்துாசு அந்த அன்னத்திற் படுமாதலானும் மேலெடுத்து ஆசனத்தில் வைத்து உண்ணலாம். மந்திர நியமத்துடன் கூடிய பிராணாகுதிக்கும், தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சிரார்த்தவுணவிலும், பாத்திரம் நிலத்தின் மீது வைத்தே உணவு கொளல் வேண்டும். இலையிலிட்ட அன்னத்தை நோக்கி வணங்கி அஞ்சலியத்தனாய் இஃது எமக்கு ஆகுகவெனக் கூறிப் பத்தியோடுந் தொழ வேண்டும். வியாக்ருதி, காயத்தி இம்மந்திரங்களை மந்திரித்து அன்னத்தின் மீது நீரைத் தெளித்து மந்திர பூர்வமாக உண்கலத்தினை வலமாக நீர் வளையக்கட்டி எல்லா உயிர்களினுடைய இதயத்திலும் பிராண வடிவனா உலவுகின்றாயென்ற பொருளுள்ள மந்திரத்தைத் தியானித்து முதலில் நீர் சிறிதருந்தி அவ்வன்னத்திலிருந்து சிறிது எடுத்துப் பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுக்கும், சுட்டுவிரல், நடுவிரல், பெருவிரலால் பிராணனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரல் பெருவிரலால் அபானனுக்கும், ஈற்றயல் விரல் கடைவிரல் பெருவிரலால் வியானனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரலொழிய மற்றைச் சுட்டுவிரல் கடைவிரல் பெருவிரலாலும் தானனுக்கும், ஆகுதி செய்ய வேண்டும். பிராணாகுதி அன்னச் சுவை நாலினுக்குத் தெரியாதபடி விரைவில் விழுங்க வேண்டும். உண்ணு முன் அன்னத்திருந்து சிறிதெடுத்துத் தருமனுக்கும், சித்திரகுத்தனுக்கும் பலி கொடுத்து எவ்விடத்தாயினும் பசி தாகத்தோடு வருந்தியிருக்கும் பிரேதங்கட்குத் திருப்தியுண்டாம் பொருட்டு இந்த நீர் கெடாது வளர்க என்று நீர் விட்டுப் பின்பு ஆபோசனங் கொள்ளல் வேண்டும். உண்ணத்தக்க எல்லா உண்டிகளும், சிற்றுண்டிகளும், கிழங்கு வகைகளும், பழங்களும், மாமிசங்களும் மற்றுள்ளவைகளையும் பல்லாற் கடித்துத் தின்னலாகாது. சிறு துணிக்கைகளாகச் செய்து தின்னல் வேண்டும். கடித்த சேடத்தை இலையிலாயினும், மீண்டும் வாயிலாயினும் வைக்கலாகாது. அளவு கடந்த உண்டி தின்னலாகாது. உண்ணுமிடத்து முதலில் தித்திப்பினையும், நடுவே உவர்ப்பு, புளிப்பினையும், பின் கைப்பு, கார்ப்பினையும் புசித்தல் வேண்டும். முதல் நீர்த்தன்மையுடைய பண்டங்களையும் நடுவில் வலிய பண்டங்களையும் முடிவில் நீர்த்தன்மையுடைய பண்டங்களையும் புசிக்க வேண்டும். இவ்வாறு புசிப்பவன் வன்மையையும் நோயின்மையையும் தவறாது பெறுவன். முனிவர்கள் எட்டுக்கவளமும், காட்டிலுள்ளோன் பதினாறு கவளமும், இல்லறத்தான் முப்பத்திரண்டு கவளமுங் கொள்ளல் வேண்டும். பிரமசாரியனுக்கு எல்லையில்லை. ஒரு வாய்க் கவளம் ஒவ்வொன்றாக ஒத்தபடி கொள்ள வேண்டும். வாய் கொண்டது போகக் கையின் மிகுந்திருந்தவுண்டி எச்சிலெனப்படும். அவ்வாறு மிகுந்த அன்னத்தினையும் வாயிலிருந்து விழுந்த அன்னத்தினையும் புசிக்கலாகாது. உண்ணில் சாந்திராயண விரதஞ் செய்ய வேண்டும். யார் அங்கையில் உண்கிறானோ, யார் ஆகாரத்தைக் கையிலெடுத்துக் கை விரித்து வளைத்து நக்கித் தின்பானோ, அவனுக்கு அந்தவுண்டி பசுவின் மாமிசம் போலாம். அசீரணத்தில் புசிக்கலாகாது. மிகவும் பசித்திருத்தலாகாது. அசீரணஞ் செய்யும் பொருளையும் புசிக்கலாகாது. யானை, குதிரை வண்டி, ஒட்டகம் முதலிய வாகனத்தின் மீதிருந்தும், சுடுகாடு. மனைக்குப்புறம், தேவாலயம், படுக்கை மீதிருக்கும் போதும், புசிக்கலாகாது. வைத்திய நூலார் கரபாத்திரம் சிறந்தது என்பர். ஈரவுடை உடுத்தும், ஈரத் தலையோடும், பூணுால் இன்றியும், காலை நீட்டிக் கொண்டும், கால் மேல் வைத்துக் கொண்டும் இடது கையையூன்றியும், கட்டிலின் மேலிருந்து கொண்டும், யார் தொடை மீதுட் கார்ந்தாயினும், ஒற்றையாடையோடும், கல்லின் மீதும், படியின் மீதும், காலிற் பாதக்குறடு முதலிய தரித்தும், தோலின் மீதிருந்தும், தோல் போர்த்தும் உண்ணலாகாது. வாயில் வைத்த மீதியைத் தின்னலாகாது. குடித்து மிகுந்ததைக் குடிக்கலாகாது. பலருடன் நடுவிலிருந்த புசிப்பவன் விரைந்து புசிக்கலாகாது. வீணே அன்னத்தை எறியலாகாது. பிறனெச்சிலைத் தின்னலாகாது. எச்சிலோடு எங்கும் போகலாகாது. எச்சிலையெங்கும் எறியலாகாது. புசித்துக் கொண்டிருப்பவன் வேறு அன்னத்தினை ஒரு போதுந் தொடலாகாது. கால், தலை, ஆண்குறி இவற்றினைத் தொடலாகாது. உண்கலத்தின் மேல் கால் படலாகாது. பல பேர் பார்த்திருக்கையில் அவர்களுக்குக் கொடாமல் நல்ல உணவுகளை ஒருவனே புசிக்கலாகாது. ஒருவன் பார்த்திருக்கும் போது அவனுக்குக் கொடாமல் பலருந் தின்னலாகாது. உண்டு மிக்கதை விட்டு விடல் வேண்டும். நடுராத்திரியிலும் உண்ட அன்னஞ் செரியாத போதும் நிலத்திலும் உண்ணலாகாது. எச்சில் நெய் வாங்கலாகாது. தலையைத் தொட்டுக் கொண்டும், வேதம் ஓதிக் கொண்டும், கலத்தில் மீதியாகாதபடி துடைத்தும், மனைவியோடும் உண்ணலாகாது. இடது கையாலுண்டாலும் குடித்தலுமாகாது. ஒற்றைக் கையால் நீருண்ணல் ஆகாது. சூத்திரனால் வார்க்கப்பட்ட நீருண்ணலாகாது. வாயிலிருந்து உண்ணும் அன்னத்தின் மீது நீர் படின் அது எச்சிலாமாதலின் அதனை உண்ணலாகாது. பந்தியிலுண்ணும் போது பிறர் வேண்டுகோளில்லாமல் உயர்ந்த ஆசனத்திலிருக்கலாகாது. முன்பாக உண்ணலாகாது. முன்பாக உண்டவன் அந்த வரிசையிலுள்ளார் பாவத்தை அடைகின்றான். பந்தியில் புசித்திருப்பவன், அவர்களுக்கு முன் உண்கலத்தை விடுவானாயின் அனைவரும் உண்ணாது எழுந்து விடுவாராதலின் அவன் பிரமகத்தி செய்த பாவத்தையடைவன். உண்ணும் போது பிராணாகுதிகள் அமைந்து கொள்ளும் வரை மௌனமாக உண்ணல் வேண்டும். அவ்வகைப் பேசினவனது ஆயுளை மிருத்தியு தெய்வங் கொண்டு போய் விடுமென்று கூறப்பட்டிருக்கிறது. எச்சில் மயங்கியுள்ள வாயினோடும் பேசலாகாது. கையால் பரிமாறப்பட்ட சோறு முதலியவற்றையும் வேறு பதார்த்த வகைகளோடு கூடாது நேராக விருக்கின்ற உப்பினையும் தின்னலாகாது. அவ்வகை தின்பது கோமாமிசத்தை யொக்கும். உப்பு, கறி வகை, நெய், எண்ணெய் முதலியனவற்றைக் கையாற் பரிமாறலாகாது. போஜன காலம், இரண்டு கால போஜனமே நலமாம். அது தவறி மூன்று கால போஜனங் கொள்ள வேண்டுமானால் சூரியனுக்கு இளம்பருவமாகிய உதய முதல் மூன்றே அரைக்கால் நாழிகைக்குள்ளும், காலைப்பருவமாகிய பதினைந்து நாழிகைக்குள்ளும், மூப்புப் பருவமாகிய இரவில் ஏழரை நாழிகைக்குள்ளும் நலம். சூரியனுதயமாகி பதினொன்றே கால் நாழிகைக்குள் உண்ணுகிற உணவு தேகத்திற்குப் பொருந்தும். பதினைந்து நாழிகை உணவு மிதவுணவு நோய்களை விலக்கும். இதுவே கால போஜனமாம். இருபத்திரண்டரை நாழிகையிற் புசிக்கில் ரோக சம்பவமாம். முப்பது நாழிகையிற் புசிக்கில் உயிருக்கு முடிவைத் தரும். பின்னைய இரண்டும் அகால போஜனமாம். எல்லாத் தேசிகளுக்கும் முக்கால் வயிறு உத்தமம்.
அதன் விவரம்: அன்னமுங், கறிகளுங் கூடி அரை வயிறு, பால் மோர் (சலங்) நீர் கூடி கால் வயிறு பிற சமான வாயு உலாவி அன்னத்தைச் சீரணிப்பிக்க விட வேண்டும். அதிக சுடுகையான அன்னம் உதிரப்பித்தம், தாகம், பிரமை, மாதரோகம், இவைகளை உண்டாக்கும். கொஞ்சஞ்சுடுகையன்னம் உத்தமத்தில் உத்தமமாம். (சரீரத்திற்கு) உடலிற்கு வன்மை உண்டாக்கும். நன்றாகப் பாகமாகாத நட்டரசி அன்னம் மலஜலஞ் சிக்குவதுந் தவிர மறு நாளும் சீரணிக்காது. குழைந்த அன்னம் வாதப் பிரமேகம், இருமல், அக்னி மந்தம், துர்ப்பலம், பீனசம், இவைகளை யுண்டாக்கும். சுத்த அன்னம் அரோகத்தை விளைத்து வாதாதி முக்குற்றங்களை நீக்கி வன்மை தரும். அன்னத்தைப் பருப்புட னெய் சேர்த்துண்ணில் அது பழைய மலபந்தம் ஜிக்வாகண்டக ரோகம், பித்தா திக்கம், வாத கபதோடம், நீக்கும். பொரியல் கபத்தை விருத்தி செய்யும் புளிச்சுவை மிகுந்த பொரியல் அலசரோகத்தையும், வாத நோய்களையும் உண்டாக்கும். வற்றல் இளவறுப்பால் மந்த ரோகமும், கருகும்படி வறுத்த வற்றலால் வாத, பித்த, கப தோடங்களும் உண்டாகும். இளவறுப்புங் கருகலு மில்லா துண்ணில் நலமாம். பச்சடி புளிப்புள்ளது பித்தத்தையும், உறைப்புள்ளது சிலேத்தும வாதத்தையும், இனிப்புள்ளது அரோசகத்தையும் நீக்கும். துவையல் புளிப்புள்ளது பித்தத்தை நீக்கும். வெறும் புளித் துவையல் இரத்தத்தை முறிக்கும். புளிசேராத் துவையல், நலமாம் அதிக காரஞ் சேர்ந்தது பசியை உண்டாக்கலால் உத்தமோத்தமமாம். குழம்புகள் உறைப்புள்ளது வாத கோபத்தை நீக்கும், அவ்வாறில்லாக் குழம்பால் வாத ரோகஞ் சனிக்கும். காரத்துடன் நீர்க்க வைத்த குழம்பு முத்தோடங்களையும் விலக்கும். ரஸத்தின் - சாறு. குணம், துவரம் பருப்பின் கண் இறுத்த ஜலத்தில் மிளகு, பூண்டு முதலிய (சம்பாரங்களிட்டுச்) பொருட்கள் இட்டுச் செய்தது அக்னிமந்தம் முதலிய பல பிணிகளை நீக்கும். போஜனத்தின் முடிவில் புளித்த தயிரும் லவணமுங் கூட்டியுண்ணில் உண்ட உணவிலுள்ள திரி தோடங்களும், வாயுவையும் நீக்கி உணவைச் சீரணப்படுத்தும். மோர், அன்னம் ஜடராக்கினி வளர்ந்து முளை மூலம் பாண்டு, தாகம், கிரகணி, சிலேத்துமம் சோபை இவைகளை விலக்கும். ஊறுகாய்கள் தீபாக்னியை விளைத்து அரோசகம் சிலேத்துமம் பைத்திய தொந்தரோங்களை விலக்கும்.
நீரருந்தும் வகை
கை விரல் நகம் பட்ட நீரையாண்டுங் குடிக்கலாகாது. அது கள்ளினைக் குடித்தலோடொக்கும். இடது கையினாலெடுத்துக் குடிக்கினும் அவ்வகைத் தோடத்தைத் தரும். நீர் குடித்த பாத்திரத்தைப் பூமியின் மேல் வைக்கும் வரையில் எச்சிலல்ல எலும்புள்ள குளத்து நீர், நாய், நரி, குரங்கு, மனிதன், காக்கை, ஊர்ப்பன்றி, கழுதை, காட்டுப்பசு, யானை, மயில், புலி முதலிய மிருகங்கள் முழுகி இறந்ததைக் கண்ட நீர். உண்ணத்தகாத நீர்களாம். நீரை அண்ணாந்தும், குனிந்தும், படுத்துமுண்ணலாகாது. இவ்வாறருந்தில் (ரோகங்கள்) - நோய்களுண்டாம். பாத்திரத்தை வாயாற், கடித்தருந்தில் ஒரு ரோகமும் வராது. “தண்ணீர் குடிக்க வென்றாற் பாத்திரத்தைக் கோதறவே வாயாற், கடித்தருந்தத் துளபமறுங் காண்” என்பதாலுணர்க. நீருண்ணுகையில் பாத்திரத்திலுள்ள நீரைச் சிறிது சிறிது பூமியிற் சாய்த்து அருந்துதல் சம்பிரதாயம். இதனை உண்கையில் சுத்தமான நீரைக் காய்ச்சி அருந்தின் அது ரூட்சை, வாதாதிக்கம், விதாகம், அலசல், வயிற்றுப்பினசம், இவைகளை நீக்கிச் சுக்ல விருத்தியையும், ஆயுளையும் வளரச் செய்யும். உண்கையில் அன்னத்தில் ஈ, மயிர், எறும்பு முதலிய விருக்கினவற்றைச் சிறிது அன்னத்துடன் புறத்தெறிந்து கைகால் சுத்தி செய்து புசித்தல் வேண்டும். இரவில் புசிக்கையில் தீபம் அவியின் அவ்வன்னத்தை வலக்கையால் போஜனஞ் செய்யாது மூடியிருந்து விளக்கு வந்தபின் இலையிலுள்ள அன்னத்தை மாத்திரம் புசித்து எழுந்திருத்தல் வேண்டும். உண்டு முடிந்த பின் எழுந்து புறத்திற் சென்று 16 முறைவாய் கொப்புளித்து இடப்புறத்தில் உமிழ்ந்து கை கால்களைச் சுத்தி செய்து ஆசமனஞ் செய்தல் வேண்டும். (அபிதான சிந்தாமணி, பக். 1481 - 1485)
உண்கல வகைகள்
பொன், வௌ்ளி, வெண்கலம் ஆகிய இவற்றால் செய்வித்த கலங்கள், வாழையிலை, பலா, முந்திரி, தாமரை, மந்தாரை, காட்டு முருக்கு மற்ற இலைகளால் தைத்த கல்லைகள். (அபிதான சிந்தாமணி, ப. 282)
கறிமா
இது சமயலுக்குதவும் கறி வகைகள் மணம் பெறச் செய்யும் சம்பாரத்தூள், இது வறுத்த பச்சரிசிமா, மிளகுத்தூள், கறிவேப்பிலைப்பொடி, மஞ்சள் தூள், சீரகம், வெந்தயம், கடலை மா முதலிய சேர்த்துச் செய்யும் தூள்.
கறிவகை
பொரிக்கறி, குழைக்கறி, பொரியல், வரல் புளிக்கறி, தித்திப்புக்கறி, நெய்க்கறி, தயிர்க்கறி, எலிமிச்சம் பழரசக்கறி, தேங்காய்க் கறி, எண்ணெய்க் காய்க்கறி, பருப்புக்கறி, பஜ்ஜி, சட்னி, தொகையல், பச்சடி முதலிய.(அபிதான சிந்தாமணி, ப.459)
அபத்திய பதார்த்தங்கள்
கொள்ளு, காடி, குமட்டிக்காய், கொம்புபாகல், முற்றின அவரை, காராமணிக்காய், சேப்பங்கிழங்கு, வள்ளிக் கிழங்கு, மாங்காய், மாதுளங்காய், இளநீர், மாப்பண்டம், சேவல், பன்றி, கொக்கிறைச்சி, புளி, கடுகு, தேங்காய், எருமை நெய், அந்த பால், கிழங்கு வகை, முப்பழங்கள், வெங்காயம், பெருங்காயம், பல வகை மதுக்கள் முதலியவாம். (தேரையர்.) (அபிதான சிந்தாமணி, ப.77)
பத்திய பதார்த்த வகை
பொன்னாங்காணி, சிறுகீரை, அன்றுருக்கிய பசு நெய், சுண்டைக்காய் வற்றல், கோவைக்காய்களின் வற்றல், அவரை, முருங்கை, பனிப்பயறு, மாவடு, அத்திப் பிஞ்சு, வாழைக்கச்சல், ஏரி வரால், குறவை, ஆமை, மலங்கு, கடற்குரவை, தேளி, அயிரை, சன்னை, சுதும்பு, நெய்த்தோலி, உடும்பு, சுறா, திருக்கை, காடை, கௌதாரி, ஊர்க்குருவி, வௌ்ளாட்டு வற்றல், குறவைக் கருவாடுகளுமாம்.
பத்தியம்
இது வியாதிப்பட்டவன் மருந்துண்கையில் உண்ட மருந்தின் குணம் கெடாமல் மருத்துவன் கூறிய படி உணவும் மற்றையவுங் கொண்டிருத்தல். (அபிதான சிந்தாமணி, ப.1242)
சிற்றுண்டி வகைகள்
இவை செய்யும் வகை முதலியவற்றைப் பாக சாத்திரங்களில் காண்க. பிட்டு. இலட்டுகம், அப்பம், அஃகுல்லி, பில்லடை, தினைமா, நென்மா, கோதுமை மா, தோசை, பூரிகை, கடலைமா சேர்ந்த சாதம், எள்ளோரை, புளியோரை, ததியோதனம், சருக்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழரஸம் சேர்ந்த சாதம், கிச்சிலி ரஸம், திராட்ச ரஸம், வாதுமைப்பருப்பு, கத்திரிக்காய், வண்டைக்காய், சேமைக்கிழங்கு, கருணை, வாழைப்பழம், தேங்காய், பலாக்காய் முதலிய சேர்ந்த சாதங்கள், துவரம் பருப்பு, பச்சைப்பயறு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொள்ளுப்பருப்பு, முதலிய பொங்கல்கள், உளுந்துவடை, தித்திப்பு உளுந்து வாடை, வெங்காயம் சேர்ந்த வடை, இட்லி, முருக்கு, கடலை ரொட்டி, கோதுமை ரொட்டி, கடலை மாதித்திப்பு உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, துவரை உருண்டை, மாவு உருண்டை, பூரணவுருண்டை, பணிகாரம், மகிழம்பூப் பணிகாரம், எருக்கங்காய் கொழுக்கட்டை, குழவுண்டை, அடுக்குப் பணிகாரம், கச்சுருக்காய், எள்ளுருண்டை, எள்ளடை, கடலைச் சுவையல், பேணி, பூந்தி பலகாரம், ஜிலேபி எனும் தேங்குழல், கோதுமை ரவை அல்வா, வாதுமை அல்வா, பொரி விளங்காய், பல வித பச்சி, பல வித பாயசங்கள், கிச்சடி வகைகள் முதலியன. (அபிதான சிந்தாமணி, ப. 813)
சாப்பிடத் தகாத பொருள்கள்
முள்ளங்கி, முருங்கை, வெங்காயம், காளான், அசுத்த நிலத்தில் உண்டான பதார்த்தங்கள், உள்ளிப்பூண்டு, சீப்பால், அதன் தயிர், தேவதைகளைக் குறியாது சமைத்த சித்திரான்னம், பலகாரங்கள், யாக காரியம் ஒழிந்து கொலை செய்யப்பட்ட ஜெந்துக்களின் மாமிசம், கன்று போட்டுப் பத்து நாளாகாத பசு, ஆடு, எருமை, புணரும் பருவமுள்ள பசு, இவற்றின் பால், செம்மறியாடு, கன்று செத்த பசு, சினைப்பசு இவைகளின் பால், புளித்தபால், புளித்த வெண்ணெய், ஜல சம்பந்தத்தால் புளித்த பழம், கிழங்கு ஊறுகாய்கள், அரிசி, மாமிசம் இவைகளைச் சாப்பிடுகிற பட்சி, ஊர்ப்புறா, ஊர்க்குருவி, நீர்க்காக்கை, அன்னம், சக்கிரவாகம், ஊர்க்கோழி, கொக்கு, நாரை, ஊர்ப்பன்றி, சராசப்பட்ஷி, சகல வித மீன்கள், இவைகளை நீக்க வேண்டியது. கும்பனுடன் சஞ்சரிக்கிற மீனும், சிங்கமுக மீனும், முள்ளுள்ள மீனும், ஆபத்துக் காலத்தில் சாப்பிடலாம் என விதித்த பஷி, மிருகங்களில் ஐந்து நகம் உள்ளவைகளை நீக்க வேண்டியது, புசிக்க ஆவச்யகமான பிராணிகளைத் தன் மாதா பிதா யக்யம் இவர்கள் பொருட்டு உபயோகித்துக் கொள்ளலாம். (அபிதான சிந்தாமணி, ப.751)
பால் வகை குணங்கள்
இவை வெண்ணிறத்த ஆதலின் பால் எனப் பெயர் பெற்றன. இவை மக்கள், விலங்கு, தாவர வகைளில் உண்டு, ஒவ்வொன்றும் பல வகைக் குணங்களுடையன. முலைப் பால், பசுவின் பால், காராம் பசுவின் பால், கொம்பசையும் பசுவின் பால், ஆகாப்பசுவின்பால், எருமைப்பால், வௌ்ளாட்டுப்பால், செம்மறியாட்டுப் பால், யானைப்பால், குதிரைப்பால், கழுதைப்பால், தேங்காய்ப்பால், ஆலம்பால், அத்திப்பால், பேயத்திப்பால், தில்லை மரத்தின் பால், திருகுக்கள்ளிப்பால், சதுரக்கள்ளிப்பால், மான்செவிக்கள்ளிப்பால், இலைக்கள்ளிப்பால், கொடிக்கள்ளிப்பால், எருக்கம்பால், வௌ்ளெருக்கம்பால், காட்டாமணக்கின்பால், எலியா மணக்கின்பால், பிரமதண்டின்பால் இவற்றின் குணங்களைப் பதார்த்த குணசிந்தாமணியிற் காண்க.
தயிர்
தயிர் என்பது பாலைச் சூடாகக் காய்ச்சி ஆறிய பின் அதில் மோரை ஒரு பலம் விட்டால் அது இம்மோரின் சேர்க்கையால் தன்னிலை மாறிக்கட்டி விடுகிறது. இதுவே தயிர் என்பது. இதனுடன் இடைக்கிடை நீர் சேரின் மோராகிறது. தயிரிலுள்ள ஏட்டை மோரிலிட்டுக் கடையின் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெயை உருக்கினால் நெய் ஆகிறது.
தயிர் வகை
பசுவின் தயிர், எருமைத் தயிர், வௌ்ளாட்டின் தயிர், செம்மறியாட்டுத்தயிர், ஒட்டைத்தயிர் முதலிய இவற்றின் குணங்களைப் பதார்த்த குண சிந்தாமணியைக் காண்க. (அபிதான சிந்தாமணி, ப.950)
நெய்
அபிதான சிந்தாமணி இது குறித்து தேஜஸ் - ஒளி தருவது, பாவத்தைப் போக்குவது, தேவர்க்கு யஞ்ஞம் மூலமாய் ஆகாரமாவது, இது காமதேனுவிடம் பிறந்தது, ஆகையால் பாகஹரம் என்று விஷ்ணு தர்மோத்தரம் கூறுகிறது. நெய்ப்புள்ள திரவப்பொருள், இது மிருகங்களிடத்தும், மரக்கொட்டைகளிடத்தும் எடுத்து உருக்கப்படும். பசு, ஆடு, எருமை, ஒட்டை முதலிய மிருகங்களிடமும், எள், ஆமணக்கு, இருப்பை, புன்னை, வாதுமை, வேம்பு, புங்கு, தேங்காய், கடுகு, சேங்கொட்டை, முதலிய வித்துகளிடத்தும் நெய் எடுப்பர். (அபிதான சிந்தாமணி, ப.1207)
இவ்விதமாக உணவுப்பொருட்கள் தகுந்த காரண காரிய அடிப்படையிலே பயன்படுத்தப்பெற்றது என்பதை நாம் அறியலாம்.
நிறைவடைந்தது
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.