சரம் என்பது மூச்சுக்காற்றை அடிப்படையாகக் கொண்டது. நல்ல ஒழுக்கமும் பண்பும் உடையவனாய் மூச்சுப்பயிற்சி மூலம் மூச்சை கட்டுப்படுத்தும் வாசியோகம் அறிந்தவனாலேயே சரம் பார்க்க முடியும். பழங்காலங்களில் ரிஷிகள் தங்களைக் காண வருபவர்களுக்கு அவர்களுக்கான நன்மை தீமைகளை கூறினார்கள். அதற்குத் தக்கபடி ஆசிகள் வழங்கினார்கள். இதனைத் தருவது சரநூல். இந்நூலில் மனிதரின் மரண நிலை அறிதல் பற்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இடகலை அல்லது பிங்கலையில் ஓர் இராத்திரி சுவாசம் முழுவதும் இடைவிடாமல் நடந்தால் அம்மனிதன் மூன்று வருடத்தில் மரணமடைவான். இதே மாதிரியாகப் பிங்கலையில் மாறுதலில்லாமல் இரண்டு இராத்திரி இரண்டு பகல் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு மரணம் இரண்டு வருடத்தில் நேரிடும். இடைவிடாமல் ஒரு நாசியில் சுவாசம் மூன்று நாளைக்கு நடக்கும் மனிதனுக்கு ஒரு வருடத்தில் மரணம் நேரிடும். இராத்திரி முழுவதும் இடைகலை பகல் முழுவதும் இடைவிடாமல் நடக்கும் மனிதனுக்கு ஆறு மாதத்தில் மரணம் நேரிடும். பிங்கலை தொடர்ச்சியாக இடைவிடாமல் ஒரு பாகம் நடக்கும் மனிதனுக்கு பதினைந்து தினத்தில் மரணம் நேரிடும்.
இடைகலையானது இதே மாதிரி ஒரு மாதம் நடந்தால் இந்த விதிப்பிரகாரம் முடியும். அதாவது, புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு ஒன்பது நாளிலும், காது கேளாதவர்களுக்கு ஏழு நாளிலும், வானிலுள்ள நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு ஐந்து நாளிலும், மூக்கு நுனி தெரியாதவர்களுக்கு மூன்று நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு பத்து நாளிலும் மரணம் நேரிடும் என்பது ஒரு வாக்கியம்.
யோகிகளுக்கு மேலே கூறிய அடையாளங்கள் நேரிட்டால் உடனே வாயுவைச் சோதித்து அதைச் சரிப்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்நாளை அதிகரித்துக் கொள்வார்கள்.