ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வகையான தோசங்களில் நாக தோசமும் ஒன்று. லக்கினத்திலிருந்து 1, 5, 9 இடங்களில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் அது நாகதோசம் எனப்படுகிறது.
ஒருவரின் முந்தைய பிறவியில், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில் அதைத் துன்புறுத்தியிருந்தால். இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்கினத்துக்கு ஏழாமிடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்குத் தோசத்தையும், பாம்பு தன்னுடைய பசிக்காக இரையைத் தேடிச் செல்லும் பொழுது, அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் தொழில் இடமான லக்கினத்துக்குப் பத்தாமிடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தொழில் நிலைக்குத் தோசத்தையும், பாம்பு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலத்திலோ அல்லது பாம்பு தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் காலத்திலோ அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்கினத்துக்கு ஐந்தாமிடமான புத்தி நிலையில் ராகுவோ, கேதுவோ நின்று புத்திர நிலையில் தோசத்தையும் ஏற்படுத்தும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
நாகதோசம் உடையவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. நாகதோசம் இருப்பவர்களில் நான்கு, பதின்மூன்று, இருபத்திரண்டு, முப்பத்தியொன்று ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், அவர்களுடைய கண்களுக்கு அடிக்கடி பாம்புகள் தென்படும். கனவிலும் பாம்புகள் அடிக்கடி வந்து போகும் என்கின்றனர்.