நவக்கிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்தக் கிரகங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வழியிலான வழிபாடுகளைச் செய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையில் ஒவ்வொரு கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றிச் சிறப்பித்து மகிழ்தல் எனும் புதிய வழிமுறை சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழியில் கண்ணுக்குத் தெரியும் (திருஷ்டம்) பலன்களையும், கண்ணுக்குத் தெரியாத (அதிர்ஷ்டம்) பலன்களையும் பெறலாம் என்கிறது.
இதன் படி, தந்தைக்குரிய கிரகம், உடல்நலத்தைப் பாதுகாக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும் சூரிய கிரகத்தைத் திருப்தி செய்ய, தனது தந்தையையும் தந்தைக்குச் சமமானவர்களையும் போற்றி அவர்களுக்குத் தேவையான ஆடை ஆபரணம் வாங்கித் தந்து உணவிட வேண்டும். நம்மைப் பெற்றெடுத்தவர், உபநயன தீதை செய்வித்தவர், கல்வி அறிவு போதித்தவர், அன்னம் (உணவு) இட்டவர், பயத்தில் இருந்து காப்பாற்றியவர் ஆகிய ஐவரும் தந்தைக்குச் சமமானவர்கள்.
பெற்ற தாயையும் தாய்க்குச் சமமானவர்களையும் போற்றிச் சிறப்பித்து மகிழ்வித்தல் சந்திர கிரகப் பரிகாரமாகும். இதனால் மனத் தெளிவு ஏற்பட்டு, உடலிலும் உள்ளத்திலும் ஈரப்பசை (இரக்கம்) ஏற்படும், வசிக்கும் இடத்தில் தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும்.
உடன் பிறந்த அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இவர்களைச் சிறப்பித்து மகிழ்விப்பது செவ்வாய்க் கிரக பரிகாரமாகும். இதனால் இரத்த சம்பந்தமான நோய்தீரும், திருமணத்தடை விலகும்.
தாயின் உடன் பிறந்த மாமாவை உபசரித்து மகிழ்விப்பது புதன் கிரகப் பரிகாரம். இதனால் கல்வியில் முன்னேற்றம், பயனுள்ள தெளிவான அறிவு, தோல் வியாதி நீக்கம் இவை விளையும்.
நமது குரு, ஆசிரியர், ஆசிரியை இவர்களை மதித்து உபசரித்து மகிழ்விப்பது, பெற்ற பிள்ளை பெண் இவர்களை நன்கு வளர்த்து கல்வி புகட்டுவது குரு கிரக பரிகாரம். இதனால் பெருமளவு செல்வமும், வம்ச விருத்தியும் நல்லோர் சேர்க்கையும் ஏற்படும்.
பாட்டி, தாய், பெரியம்மா, அத்தை, மாமியார், சகோதரி, பெண், மனைவி இவர்களிடம் அன்பாகப் பழகி மகிழ்வித்தல் சுக்கிரக் கிரகப் பரிகாரம். இதனால் விரைவில் திருமணம், ஆணின் இரத்தத்தில் ரேதசும், பெண்ணின் இரத்தத்தில் சோணிதமும் உருவாகி உரிய காலத்தில் மகப்பேறு ஏற்படும். கனவன்-மனைவியிடையே நெருக்கம் ஏற்படும். தரித்திரம் நீங்கி லக்ஷ்மி அருள் கிடைக்கும்.
நம் வீட்டில் தொழிலில், அலுவலகத்தில் நாம் சொல்லும் வேலைகளைச் செய்யும் நம் உதவியாளருக்குத் (ஊழியருக்கு) தேவையான உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வுடன் வைத்திருப்பது சனிக் கிரகப் பரிகாரம். இதனால் அகால மரணம், விபத்து, நோய் தவிர்க்கப்படும்.
மாதாமகன் என்னும் தாயின் தந்தையை மரியாதையுடன் நடத்தி அன்புடன் உபசரித்து மகிழ்வித்தல் ராகு கிரகப் பரிகாரம்.
பிதாமகன் என்னும் தந்தையின் தந்தைக்கு மரியாதை செய்து மகிழ்வித்தல் கேது கிரகப் பரிகாரம்.
இவ்வாறு நமது உறவினர்களைச் சிறப்பித்து மகிழ்விப்பதே நவகிரகங்களை மகிழ்விப்பதற்கு சமமானதாகும் என்று சொல்கிறது பலதீபிகை நூல்.