மனித உடலில் பத்து வித வாயுக்கள் உண்டு . இவற்றைத் தச வாயுக்கள் என்கின்றனர்.
1. உயிர் காற்று (பிராணன்)
மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பேச உதவம் குரல்வளையில் உள்ளது. கை, கால்களை வேலை செய்யப் பெரு விரல் உள்ளது.
2. மலக்காற்று (அபானன்)
சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.
3. தொழில் காற்று (வியானன்)
தோளிலிருந்து எல்லா நரம்பிலும், அசையும், அசையாப் பொருளில் உறுப்புக்களை நீட்ட, மடக்க, உணர்ச்சிகளை அறியவும், உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும்.
4. ஒலிக்காற்று (உதானன்)
உணவின் சாரத்தை கொண்டு செல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.
5. நிரவுக்காற்று ( சமானன்)
நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும். உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.
6. தும்மல் காற்று (நாகன்)
அறிவை வளர்க்கும், கண்களைத் திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தல், துப்புதல் ஆகிய வேலை செய்யும்.
7. விழிக்காற்று (கூர்மன்)
மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண் திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.
8. கொட்டாவிக் காற்று (கிருகரன்)
நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும். பசி வர வைக்கும். செயல் புரிய, தும்மல், இருமலை உண்டு பண்ணவும் செய்யும்.
9. இமைக் காற்று (தேவதத்தன்)
சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.
10. வீங்கற் காற்று (தனஞ்சயன்)
மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும். காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல். இறந்த மூன்றாம் நாள் தலை வழியாக வெளியேச் செல்லுதல்.
ஒருவர் உடலை விட்டு உயிர் பிரியும் போது, இந்தத் தச வாயுக்கள் அனைத்தும் நம் உடலை விடுத்து வெளியேறி விடுகிறது. உயிர் வெளியே புறப்படும் நாள், நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்துச் செல்களும் முடக்கப்பட்டு, எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும். ஒவ்வொரு உடலுறுப்புகளும் செயலிழந்து கொண்டே வந்து, நடுநெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். சிலருக்குக் கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசனத் துவாரத்தின் வழியாகவும், மூத்திர வாசல் வழியாகவும், காதின் வழியாகவும், மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும்.
ஒன்பது காற்றும் நிறுத்தப்பட்டு, உடலுறுப்புகள் அனைத்தும் முழு நிறுத்தம் கண்டு, எந்த வழியாக உடலை விட்டு உயிர் வெளியேற வேண்டுமோ, அந்த வழியாகத் தனஞ்சயன் என்ற வீங்கற் காற்று, மற்ற காற்றுகளை வெளியே அழைத்துச் செல்லும் போது, உயிர் பிரியும். மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும் போது, அதற்கெனக் குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் சேர்ப்பிக்கும் வேலையும் அந்த தனஞ்சயன் என்ற வீங்கற் காற்றே செய்கிறது என்று இந்து சமயப் புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.