சுக்கிரன் பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
அசுரமந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், உசனசன், ஔ்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சிதம், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி, நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வௌ்ளி, சைத்தியன், சுசி, காவியன், சுக்கிரன், சுக்ரன், சுவேதம், வௌ்ளி, சுவேதன், சுவாமி, குரு, சுல், வௌ்ளி. சுல்லு, வௌ்ளி, சுக்கிராச்சாரியன், சுக்கிரபகவான், சிவசன், சல்லியன், குருடன், அந்தகன், கண்ணில்லாதவன், காமகாரகன், காமன். ஏகாட்சி, ஒற்றைக்கண்ணோன், ஒற்றைக்கண்ணன், பார்க்கவன், பார்கவி, பாராசாரி தைத்திய புரோகிதன், தைத்திய மந்திரி, தைத்திய குரு, பழங்கு, பளிக்கு, பிருதி, மோககாரகன், மோக்கம், சுக்கிரவன், ஒரு நட்சத்திரம், வெண்மை, ஓர் கிழமை, விண்மீன். வெண்பொன் இவன் அசுரகுரு, வெண்மீன் ஆக இன்னும் அனந்தம் பெயர் உள்ளன.
காமக்காரன், காமக்கோள் ஆகிய சுபக்கோள் சுக்கிரன் 12 தமிழ் மாதங்களில் நின்ற பலன்கள், சுக்கிரன், புதன் 27 நட்சத்திரங்களில் நின்ற பலன்கள் ஆகியவற்றினைக் காண்போம்.
சுக்கிரன் சித்திரை - புரட்டாசி ஆகிய மாதங்களில் நின்ற பலன்கள்
மழை நுால் சித்திரை மாதத்தில் சுக்கிரன் உதயம் ஆகினும், அஸ்தமனம் ஆகினும் பூமியில் பயிர்கள் நன்றாக விளையும். வைகாசி மாதம் ஆகில் பயிர்கள் பூர்த்தியாய் விளையாது. ஆனி மாதத்தில் வருமாகில் அனைத்து விதத் தானியங்களும் விளையும். ஆடி மாதம் வருமாகில் அதிக மழை பெய்யும். ஆவணி மாதத்தில் வருமாகில் பூமி நடுங்கும். புரட்டாசி மாதத்தில் வருமாயின் மிகுந்த வருத்தம் உண்டாகும்.
“பாரின் மேட மதியதனிற் பளிங்க னுதய மஸ்தமனம்
நேரிற் றேச மிகச்செழிக்கும் நிகழு மிடபங் கெடுதியுறும்
சாரின் மிதுனஞ் சித்திபெறுந் தக்க நண்டுக் கதிகமழை
கூருஞ் சிம்மம் புவிநடுங்குங் குமரிக் கதிக நலிவாமே”
என்றும் குறிப்பிடுகின்றது.
சுக்கிரன் ஐப்பசி - பங்குனி மாதத்தில் நின்ற பலன்கள்
மேலும் ஐப்பசி, கார்த்திகை ஆகிய இவ்விரண்டு மாதங்களில் வருமாகில் (பீடை) துன்பம் உண்டாகும். மார்கழி, தை, மாசி ஆகிய இம்மூன்று மாதங்களில் வருமாகில் பூமி செழித்து நோய்கள் அகன்று தானியங்கள் நன்றாய் விளையும். பங்குனி மாதம் வருமாகில் பொருளும், பூடணமும், தானியமும் பெற்று வாழ்வார்கள்.
“ஆமே கோலி னுடன்றேளுக் கசதி பீடை மிகவுளதாம்
தாமே தனுசு மகரகும்பந் தனக்கே யவனி செழித்தோங்கும்
போமே சகல பிணியதுவும் பொருந்த விளையுந் தானியங்கள்
பூமேற் சேலின் மதியாகிற் பொன்னு மணியு மிலங்கிடுமே” (மழை, செ.எண்.63 - 64, பக்.22 - 23.)
என்றும் குறிப்பிடுகின்றது.
இதனை பின்வரும் இராசிக்கட்டம் எளிதாக உணர்த்தும்.
சுக்கிரன், புதன் 27 நட்சத்திரங்களில் நின்ற பலன்கள்
கார்த்திகை, பரணி, அசுவனி, ஆகிய இந்த மூன்று நட்சத்திரங்களில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் புவி புகழும் கவியாகிய சுக்கிரனும், கல்வியில் மிக்க வல்லமையுடைய புதனும் ஒன்றாகக் கூடியிருக்க மாரியும், பாரிற் பெய்து பூமி எங்குஞ் செழிக்கவும் (மனு) தர்மநெறி தவறாத அரசர்கள், சிறந்த முறையில் செங்கோல் நடத்தவும், தம்பதிகள் மனமொத்து பெருமையுஞ், செல்வமும் மிக உண்டாகி வாழ்வார்கள்.
“ஓதவே யார லோடு உற்றதோ ரடுப்பு மாவில்
நீதமாங் கவியும் புந்தி நின்றிடின் மழையும் பெய்து
பூதலஞ் செழிக்கு மெங்கும் புரவலர் செங்கோ லோங்கும்
காதல ரொத்து வாழ்வர் கனதன மிகவுண் டாமே”
என்றும் குறிப்பிடுகின்றது.
ரோகிணி, மிரு, திருவா - சந் - புத, சுக் மழை பெய்யாது.
வண்டார் கூந்தல் ஒண்டொடியே! உடுபதி உலவும், உரோகணி, மிருகசீரிடம், திருவாதிரை ஆகிய இந்த மூன்று நட்சத்திரங்களில், ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் புதனும், சுக்கிரனும் இருப்பார்களாகில் மண்டலம் அதனில் கொண்டல் பெய்யாக் குறைவினால் மக்கள் கட்டம் அடைந்து நட்ட பயிர் விளையாது.
“உண்டா முருளை யிந்திரனோ டோங்குஞ் செங்கை யிந்நாளில்
பண்டாம் புந்தி சல்லியனும் பாங்கா யொன்றி லடுத்திருக்க
வண்டார் கூந்த லொண்டொடியே வையந் தன்னில் மாரியுறத்
திண்டா டிடுவர் மானிடவர் செய்யும் பயிரும் விளையாதே” (மே, செ.எண். 7 - 8, பக். 3 - 4.)
எனும் செய்யுள் இதனை மெய்ப்பிக்கின்றது.
மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த ஏழு நட்சத்திரங்களில் ஏதேனும் ஓர் நட்சத்திரத்தில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருக்கில் மழை பெய்யாததினால் பயிர்கள் எல்லாம் காய்ந்து விடும்.
“பெருகிடு மானி பொய்கை பிறங்கிடுங் கூவல் மாயன்
தருகிடுங் காக்கை சுண்டன் சாற்றிடும் புரட்டை தன்னில்
அருகுற வொள்ளி யோனு மறிஞ்ஞனுஞ் சேர்வா னாகில்
கருகிடும் பயிர்க ளெல்லாங் கனமழை பெய்யா தென்னே”
என்றும் குறிப்பிடுகின்றது.
உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஏதேனும் ஓர் நட்சத்திரத்தில் சுக்கிரனும், புதனுஞ் சேர்ந்திருக்கில் சிறுமையாக பற்பல இடங்களில் எப்போதும் வஞ்சனையோடும் கூடிய கீழ் மக்களுக்குள் வேற்றுமையாகிய பகைகள் உண்டாகி அரசன் முன் சென்று துன்பங்களைத் தரத்தக்க வாதுகளை உரைத்து தங்களுக்குள்ள பொருட்களை எல்லாம் தோற்று விடுவார்கள்.
“என்னநல் வேந்தன் றோணி இசைபுகர் கணக்க னிற்கில்
தன்னமா மங்கங் குற்ற சதிமிகுங் கசட ருக்குள்
பின்னமாம் பகையு மாகிப் பிரபல வரசர் பக்கம்
இன்னலாம் வழக்கு ரைத்து மிருநிதி யிழப்பா ரன்றே” (மே, செ.எ.11 - 12, ப.5.)
என்றும் குறிப்பிடுகின்றது.
கரும்பு, நெல் சமமாக விளைவு உண்டாதல்
கார்த்திகை மாதப் பவரணையன்று அசுபதி, பரணி, கார்த்திகை ஆகிய இந்த நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து வருமாகில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய இந்த நான்கு மாதங்களிலும் சமரசமாக மழை பெய்து பூமியில் புஞ்சை, நஞ்சைகளில் இட்டிருக்கும் தானியங்களும் கரும்பும் சமமாக விளைவு உண்டாகும்.
“என்னக் கீட மதிபவ்வத் திவுளிபா கெரியுஞ் சேரில்
மின்னிடைச் சிம்மந் தொட்டு விருட்சிக மதிவ ரைக்கும்
நன்னய நாட்டிற் புஞ்சை நஞ்சையி லிட்டி ருக்குங்
கன்னலுஞ் செந்நெற் பாதி கண்டிடும் விளைவென் றோதே” (ம, செ.எ.113, ப.39.)
என்றும் மழைநூல் தெரிவிக்கின்றது.
செந்நெல் குறைந்த விளைவு
வியாழன் நட்பு வீடுகளில் அத்தமனமாயின் பலன், பகை வீடுகளில் நீசத்தில் வக்கரித்து நின்ற பலன்
வியாழன் நட்பாகிய இடபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், கும்பத்தில் இருந்து அத்தமனமாகில் தங்கம், முத்து, வஸ்திரம் முதலான பொருட்கள் குறைந்து போகும்.
வியாழன் பகையாகிய மேட, விருச்சிகத்திலும், நீசமாகிய மகரத்திலும் இருந்து வக்கரிக்கில் கரும்பு, செந்நெல் முதலிய தானியங்களும் விளைவு குறையும். அதனால் நாலாப்பக்கத்திலும் களவு போகும். இதனை,
“இன்னமும் வேந்த னட்பி லிசைந் துடன் மறைவானாகிற்
சொன்னமுந் தாள மாடை தோற்றமுங் குறைந்து காணும்
பொன்னவன் பகை நீசத்திற் புக்கிவக் கரமு மாகில்
கன்னலுஞ் செந்நெ லற்பங் களவுநாற் றிசையு மாமே” (மே, செ.எண்.146, ப.51.)
என்றும் குறிப்பிடுகின்றது.
சாலி நெல் விளைவு
செவ்வாய் நட்பு, வீடுகளில் நின்ற பலன் சுபம் (வக்ரம்)
செவ்வாய் நட்பாகிய இடபம், மிதுனம், கன்னி, துலாத்தில் இருக்கும் போது நன்றாக மழை பெய்து குன்றாமற் அனைத்து விதத் தானியங்களும் விளைந்து சுபமாக விளங்கும். செவ்வாய் மேற்படி ராசிகளில் வக்கரகதியானால் மனிதர்களுக்கு நன்மையும் பாற்பசு பாக்கிய வளர்ச்சியும் உண்டாகும்.
“என்றபின் செவ்வாய் நட்பி லியல்புட னிருப்பா னாகில்
நன்றுபின் சாலி யௌ்ளும் நாடெலாம் விளைந்து நல்கும்
நின்றுபின் வக்க ரித்தால் நீணில மனிதர்க் கெல்லாம்
கன்றுபின் கறவை சேருங் காசினி விளங்கும் மென்னே” (ம, செ.எண்.135, ப. 47.)
என்றும் குறிப்பிடுகின்றது. (சாலி என்பது நெல்லின் வகைகளில் ஒன்று)
சாலி மிக ஓங்கும் மீனச்சந்திரன்
மீனத்தில் சந்திரனிருக்க, இடபத்தில் சுக்கிரனிருக்க, மிதுனத்தில் புதனிருக்க மழை அதிகமாகப் பெய்து தீய்ந்து போகும் தருவாயிலிருந்த பயிர்களும் செழித்து விளையும், கருகுந் கதியிலிருந்த தருக்களாகிய மரங்கள் செழித்து வளர்ந்து அதன் பலனாகியக் கனிகளைத் தரும்.
“பெருகச் சேலிற்சசியிருக்கப் பிறங்கும் விடையிற் கவியிருக்க
வருகத் தண்டின் மதிமகனு மழையும் பெய்யு மதிக மதாய்
சருகொத் திருக்கும் பயிர்களெலாந் தழைக்குஞ் சாலிமிகவோங்கும்
கருகுந் தருக்கள் நீருண்டு காயுங் கனியுந் தந்திடுமே” (மழை, செ.எ.56, ப.20.)
என்றும் குறிப்பிடுகின்றது.
இவ்விதம் நெல்லின் விளைவு குறித்த கோள்நிலைகளை அறிந்து அதன் வழி பயன் பெறலாம்.
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|