ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
முனைவர் தி. கல்பனாதேவி
5. நவக்கிரகங்களின் செயல்பாடுகள்
சூரியன் முதலான ஒன்பது கோள்களுக்கும் காரகத்துவங்கள் உள்ளன. இது பற்றி சோதிட நுால்கள் பல தெரிவிக்கின்றன. இருப்பினும், சில அடிப்படையான இன்றியாமையாதனவற்றை நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றின் செயல்பாடுகள், பலன்கள் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலும்.
கோள்களின் வர்க்கோத்தமம் பலன்கள்
வர்க்கோத்தமம் இராசிகளும் வர்க்கோத்தமமும்
சர ராசிக்கு முதல் நவாம்சையும், ஸ்திர ராசிக்கு ஐந்தாவது நவாம்சையும், உபய ராசிக்கு ஒன்பதாவது நவாம்சையும் வர்க்கோத்தமம் ஆகும். உதாரணமாக, மேட ராசிக்கு முதல் நவாம்சம் மேடம், ரிடபத்துக்கு ஐந்தாவது நவாம்சம் ரிடபமே, மிதுனத்திற்கு ஒன்பதாவது நவாம்சம் மிதுனமே. இரண்டும் ஒரே ராசியாக வருவதால் வர்க்கோத்தமம் ஆகின்றது. இவ்வாறே மற்ற இராசிகளுக்கும் அறியலாம்.
வர்க்கோத்தமம் பெறும் நட்சத்திர பாதம், இராசிகள்
அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்துக்கு மேடமும், ரோகிணி நட்சத்திரம் 2 ஆம் பாதத்துக்கு ரிடபமும், புனர்பூசம் 3, 4 ஆம் பாதங்களுக்கு முறையே மிதுனம், கடகமும், பூரம் முதல் பாதத்துக்கு சிம்மமும், சித்திரை 2, 3 ஆம் பாதங்களுக்கு முறையே கன்னி, துலாமும், உத்திராடம் 1, 2 ஆம் பாதங்களுக்கு முறையே தனுசு, மகரமும், சதயம் பாதத்திற்கு கும்பமும், ரேவதி 4 ஆம் பாதத்திற்கு மீனமும் வர்க்கோத்தமம் பெறும் இராசிகளாகும்.
கிரகமும் வர்க்கோத்தமும்
ஒரு கிரகம் இராசிச்சக்கரத்திலும், நவாம்சச்சக்கரத்திலும் ஒரே இராசியில் இருக்க நேர்ந்தாலும் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது. இந்த நிலை பெற்ற கிரகம் தான் இருக்கும் இடம் பொறுத்து நல்ல பலனை அளிக்கும் என்று தெரிவிக்கின்றார்.
இராசிச்சக்கரத்தில் கிரகங்கள் நிற்பது போல நவாமிசச்சக்கரத்ததிலும் கிரகங்கள் அதே இடத்தில் இருப்பதாகும். அவ்விதம் இருந்தால் வர்க்கோத்தமம் பெற்றுள்ளது என்று பொருள்.
வர்க்கோத்தமம் அடைந்த கிரகத்திற்கு ஒரு கிரகம் ஆட்சி பலம் பெற்றால் என்ன பலம் பெறுமோ அந்த அளவு பலம் உண்டாகும். அதன் படி அவர்கள் பலன் தருவார்கள்.
கோள்களின் வக்ர பலன்கள்
சூரியன், சந்திரன், இராகு, கேது இவர்கட்கு வக்ரகதி கிடையாது. மற்ற கோள்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இவர்கட்கு வக்ரகதி உண்டு.
பன்னிரு இராசி வீடுகளில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இவர்கள் சாதகரின் இலக்னம், இடம், ஆட்சி, உச்சம், நட்பு, பகை, நீசம், பார்வை முதலான பல நிலைகளின் வழி தான் நின்ற இடத்தின் வழி வக்கிர நிலையிலும் பலன் தருவார்கள்.
பிறந்த சாதகத்தில் வக்ரமாயினும், கோட்சாரத்தில் வக்ரமாயினும் அப்போதும் பலன்கள் தரும். சுபர் ஆயின் தொல்லைகளை வரவழைத்துப் பின்னர் நிவர்த்தியாகும் போது நன்மையும், அசுபராயின் மிக மோசமான நிலையினையும் தரும்.
அகராதி தரும் செய்தி
வக்கிரம் - மீள மடங்குதல், மீளுதல், பின் திரும்புதல், இவை கிரக நடையில் ஒன்று.
வக்கிரன் - சனி, செவ்வாய், குரூரன்.
வக்கிராஸ்தமனம், வக்கிராத்தமனம் - கிரகங்கள், வக்கிரத்தோடு அஸ்தமனம் அடைதல்.
வக்கிரித்தல் - திரும்புதல், கிரக நடையில் ஒன்று.
வக்கிரோதயம் - கிரகங்கள் திரும்புதலோடு உதித்தல்.
அதிசாரம் - கிரக நடை. கிரக நடையில் ஒன்று.
அதிசார வக்கிரகம் - அதிசாரத்தில் வரும் வக்கிர கதி.
அதிசார வக்கிரம் - கிரக வக்கிரத்துள் ஒன்று.
சனி, செவ்வாய், குரு வக்ரம்
இம்மூவருக்கும் 5ல் சூரியன் வந்தால் வக்கிரம். 7 ல் வந்தால் அதிவக்ரம். 9 ல் வரும் போது வக்கிரம் நிவர்த்தியாகின்றது. சனி ஓராண்டில் சுமார் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரையிலும், செவ்வாய் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையும், குரு ஆண்டு தோறும் 3 மாதங்கள் வரையிலும் வக்கிர கதியில் இருக்கும்.
வக்ரகதி இல்லை
சூரியன், சந்திரன், இராகு, கேது இந்த கிரகங்கள் எப்போதம் வக்கிரகதி அடைவதில்லை.
வக்ர நிலையில் குரு திசை
குரு தன் திசை நடக்கும் போது வக்ரகதி அடைய நேர்ந்தால் பெரும் யோகம் அளிக்கும். செல்வம் பெருகும். மனைவி மக்களால் சுகம். காரிய வெற்றி. உயர்ந்தோர் ஆதரவு கிடைக்கும்.
வக்ர கதியில் பலன்
ஒரு கிரகம் வக்கிர கதி அடையும் போது வலிமை பெறுகின்றது. ஒரு இராசியில் ஒரு கிரகம் வக்கிரகதி அடைந்து விட்டால் தான் வழங்க வேண்டிய இயல்பான பலன்களை அதிக அளவில் வழங்கி விடும். தீயதானால் கொடுமை அதிகம் செய்யும். நல்ல ஸ்தானமானால் நல்லது அதிகம் நடக்கும்.
அதிசாரம்
அதிசாரம் என்றால் ஒரு கிரகம் தான் இருக்கும் இராசியில் இருந்து முன் இராசிக்குச் சென்று பிறகு மீண்டும் அதே இராசிக்குத் திரும்புவது அதிசார ஓட்டம் என்பர். இந்த நிலை குருவைத் தவிர வேறு கிரகத்திற்குக் கிடையாது என்று தெரிவிக்கின்றார்.
அதிசார வக்ர பலன்கள்
அதிசார வக்கிரங்களில் மிகவும் வலிமை பெற்று நற்பலன்களை வழங்கும். சுபகிரகங்கள் பலம் குன்றி நற்பலன்களை அளிக்க மாட்டார்கள். யோகமளிக்க வேண்டியிருந்தாலும் பாழ்படும் என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது என்று தெரிவிக்கின்றார்.
வக்கிரமும், அதிசாரமும்
வக்கிரம் என்பது கிரகங்கள் தானிருக்கும் இராசியிலிருந்து பின் செல்லுதல். அதிசாரம் என்பது தான் இருக்கும் இராசியில் இருந்து முன் செல்லுதல். எல்லா கிரகங்களும் வக்ரகதியிலும், அதிசாரத்திலும் தான் நிற்கும் ஸ்தானத்தின் பலனைத் தருவர். ஆனால் குரு மட்டும் தான் முன் நின்ற ஸ்தானத்தின் பலனைத் தருவார்.
அதிசாரமும் ஸ்தம்பனமும்
ஒவ்வாரு கிரகமும் ஒவ்வொரு இராசியில் இவ்வளவு நாட்கள் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற வரையறையை மீறி விரைவில் பயணம் செய்து அடுத்த இராசிக்கு மாறினால் அதிசாரம் என்பர். அப்படியில்லாமல் மிகவும் தாமதமாகச் பயணம் செய்து குறிப்பிட்ட நாட்களுக்கு மேலாகவும் ஒரு இராசியில் இருந்தால் ஸ்தம்பனம் என்பர்.
உதாரணம் சனி ஒரு இராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை வருடம் ஆகும். ஆனால் இரண்டாவது ஆண்டிலேயே ஒரு இராசியிலிருந்து அடுத்த இராசிக்கு மாறி விட்டால் அல்லது கடந்து விட்டால் சனி அதிசாரத்தில் உள்ளது என்றும், அவ்வாறில்லாமல் மூன்றாண்டு காலம் வரையில் ஒரு இராசியில் பயணம் செய்தால் அப்போது சனி ஸ்தம்பனமாக இருக்கின்றது என்றும் கூறுவர்.
ஒரு கிரகம் அதிசாரம் அடைந்தால் அக்கிரகத்திற்கு வக்கிரபலம் உண்டாகும். அது போலவே ஒரு கிரகம் ஸ்தம்பனம் அடைந்தால் அக்கிரகத்திற்கு அதிசாரபலம் உணடாகும் என்பது சோதிட சித்தாந்தம்.
சூரியனுக்கு அருகில் செல்லும் மற்ற கிரகங்களின் கதி
சூரியனுக்கு 5, 6 ல் மற்ற கிரகங்களின் கதி – வக்ரகதி.
சூரியனுக்கு 7, 8 – அதி வக்ரகதி.
சூரியனுக்கு 9, 10 – ருஜீ கதி (அ) குடிலகதி (அ) வக்ர நிவர்த்தி கதி.
கிரகங்களின் வக்கிரகதி
சுக்கிரன் வக்ரம்
அ.ஜோ.க எனும் நுால் ஆசிரியர் சுக்கிரன் 18 மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரம் அடைந்து சுமார் 45 லிருந்து 50 நாட்களுக்கு பிறகே வக்கிர நிவர்த்தி அடைகின்றது.
புதனின் வக்ரம்
சூரியனுடன் நெருங்கியிருக்கும் புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரம் அடைந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு வக்கிர நிவர்த்தி பெறுகின்றது.
ஜோதிட கையேடு எனும் நுாலில் வக்கர கதியும் வக்கர நிவர்த்தியும் குறித்து ஒரு கிரகம் தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லாமல் பின்னோக்கிச் சென்றால் அக்கிரகம் வக்கிர கதியில் இருக்கின்றது. பின்னோக்கிச் செல்கின்றது என்பது ஒரு பொய்த்தோற்றம். நாம் பயணம் செய்கின்ற போது அனைத்தும் பின்னோக்கி நகருவது போலத் தோன்றும் அதைப் போலத்தான்.
மேலே குறிப்பிடப் பெற்ற இயல்பான நாட்களில் இயல்பான இயக்கமும், பின் வக்கர கதியில் இயக்கமும் என பயணம் செய்யும். இயல்பில் இருந்து வக்கரகதி தொடங்கினால் வக்கிர பயணம், வக்கிரத்தில் இருந்து இயல்பிற்குத் திரும்பினால் வக்கிர நிவர்த்தி அடைந்தது என்றும் கொள்ள வேண்டும்.
எந்தக் கிரகமும் வக்கிரகதியில் இருந்தால் உச்சத்திற்கு இணையான பலனைத் தரும் என்பது சோதிட மரபு. அது போல நீசமடைந்த கிரகம் வக்கிர கதியில் இருந்தால் நீச்ச பங்கமடையும் என்றும் தெரிவிக்கின்றார்.
வக்கிரம் பெற்ற கிரகம் அளிக்கும் பயன்
ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் வக்கிர கதியில் குரு மட்டும் தன் முன் இராசிக்குரிய பலன்களைத் தருவான்.
செவ்வாய், சனி போன்றவர்கள் தாமிருக்கும் ஸ்தான பலன்களை அளிப்பர்.
ஒரு கிரகம் ஆட்சி பெற்றிருந்து வக்கிர கதிக்கு ஆளாகுமானால் அது அளிக்கும் நற்பலன்கள் அதிகமாகும்.
ஒரு சாதகத்தில் வக்கிரம் பெற்ற கிரகத்தை வேறு ஒரு சுபக்கிரகம் வக்கிரம் பெற்று பார்க்க நேருமாயின் பிறந்த நேரத்தில் யோகமான பலன்கள் நடக்க வாய்ப்புள்ளது.
ஒரு இலக்கினத்தாருக்கு திரிகோணாதிபதிகளாக இருக்கும் கிரகம் வக்கிரம் பெற்றிருந்து அதன் திசை நடைமுறைக்கு வருமானால் நற்பலன்களைத் தரும்.
அதைப் போன்று ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து வக்கிர கதிக்கு ஆளாகியிருந்தாலும் அந்த கிரகத்தின் தசா புத்திகளில் யோகப்பலன்கள் நடக்கும்.
ஆனால் உச்சம் பெற்று இருக்கும் கிரகம் வக்கிரகதிக்கு ஆளாகி இருந்தால் அதன் தசாபுத்திகளில் நற்பலன் தராது.
அதைப் போன்று ஒரு கிரகம் வக்கிரம் பெற்றிருந்து அதனுடன் ஆறு, எட்டு, பன்னிரண்டுக்குரிய கிரகங்களின் தொடர்பு இருக்குமானாலும் அதன் தசா புத்திகள் யாவும் பாழ்படும் என்று அதிர்ஷ்ட ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் தெரிவிக்கின்ற செய்திகள் யாவும் முற்றிலும் பொருந்தும்.
வக்கிரகதி
செவ்வாய்
செவ்வாய் நின்ற இடத்திற்கு சூரியன் 6, 7, 8 ஆகிய இடங்களில் பயணிக்கும் காலத்தில் வக்கிரகதிக்கு ஆளாகின்றது. இந்நிலை 18 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும்.
புதன்
புதன் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரகதிக்கு ஆளாகி மூன்று வாரம் வரை அந்நிலையிலேயே இருந்து பின் நீங்கும்.
குரு
ஒவ்வோர் ஆண்டும் சூரியன் எந்த நட்சத்திரப் பாதத்தில் கடக்கின்றதோ அதற்கு பத்தாவது நட்சத்திர பாதத்தில் குரு இருக்கும் சமயம் வக்கிரகதிக்குள்ளாகின்றது. இந்நிலை ஆண்டுக்கு சுமார் மூன்றரை மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.
சுக்கிரன்
சுக்கிரன் பதினெட்டு மாதங்களுக்கு ஒரு முறை வக்கிரகதிக்குள்ளாகின்றது. இது வக்கிர கதியில் 45 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கக் கூடும்.
சனி
சூரியன் சனியை எந்த நட்சத்திரப் பாதத்தில் கடக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்கு பத்தாவது நட்சத்திரம் அதே பாதத்தில் பயணம் புரியும் போது வக்கிரகதிக்கு ஆளாகின்றது. அதே நிலை நீடித்து மீண்டும் பத்தாவது நட்சத்திரத்தில் அதே பாதத்தில் பயணம் புரியும் போது தான் வக்கிர கதி நீங்குகின்றது.
இதையே சனி இருக்குமிடத்தில் சூரியன் 5 ல் வரும் சமயம் வக்கிரம் ஆரம்பித்து 9 ல் வரும் சமயம் வக்கிர நிவர்த்தி அடைகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் வரை இருக்கக்கூடும்.
அதிசாரம்
வக்கிர கதியைப் போல அதிசாரம் என்ற ஒரு நிலை உள்ளது. இது வக்கிர கதிக்கு எதிரிடையானது. தான் இருக்கும் இராசியில் இருந்து தனக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முன் சென்று பின் மீண்டும் தானிருந்த இராசிக்கு திரும்புதலாகும்.
அதிசார ஓட்டம் குருவிற்கு மட்டுமே உண்டு. வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது ஜாதகப்பலன் நிர்ணயம் நுால் ஆசிரியர் ரிஷிபானந்தர் தெரிவிக்கின்ற செய்திகள் யாவும் முற்றிலும் பொருந்தும்.
இவ்விதம் வக்ர கோள்களின் பலன்களை அறியலாம்.
(கற்பித்தல் தொடரும்...)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.