பருவத யோகம்
ஒரு நல்ல யோகம்.
1. இலக்கின அதிபன், ஏழுக்கு உடையவன் ஆகியவர்கள் கேந்திர திரிகோணங்களில் ஆட்சி உச்சம் பெற்று நின்றாலும்,
2. இலக்கின அதிபன், விரையாதிபன் ஆகிய இவர்கள் நட்பு வீட்டில் கேந்திரம் பெற்று, நட்புக்கிரகங்களால் பார்வை பெற்று நின்றாலும்,
3. தன அதிபன், இலாப அதிபன் ஆகியவர்கள் உச்சம் பெற்று நின்றாலும்,
4. ஏழில் சுபக்கிரகம் இருக்க, எட்டில் பாவக்கிரகம் இருக்க, இலாப அதிபன் பாபருடனே கூடி நின்றாலும் இந்த யோகமாகும்.
பாச யோகம்
ஒரு நல்ல யோகம்.
அது மூன்றாம் அதிபன் ஒன்பதாம் இடத்திலும் எட்டாம் இடத்தில் சுக்கிரனும், ஆறாம் இடத்தில் சுபக் கிரகமும் இருந்தாலும், ஐந்து ராசியில் இராகு, கேது, நீங்கிய சூரியனாதி எழுவர் நின்றாலும் இந்த யோகம் ஆகும்.
பாதாள யோகம்
ஒரு நல்ல யோகம். சுக்கிரன் வியாழனோடு கூட விரையாதிபன் உச்சனாகி பாக்கிய அதிபனுடன் கூடி நிற்றலாகும்.
பின் மாலிகா யோகம்
ஒரு நல்ல யோகம். அது ஐந்தாம் இடம் முதல் பதினோராம் இடம் வரை இராகு கேதுக்கள் நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பது.
புட்கல யோகம்
புட்கல யோகம், புஷ்கள யோகம், புஷ்கல யோகம் என்பர். ஒரு நல்ல யோகம். அது சந்திரன் இருந்த வீட்டிற்கு உடையவனும் ஒன்றாய்க் கூடி கேந்திரம் அல்லது நட்பு வீட்டில் இருப்பதாகும். அமாவாசையானது, திங்கள், செவ்வாய், வியாழன் இக்கிழமைகளில் கூடி வருவது.
புத்திர யோகம்
ஒரு சுப யோகம். அது இலக்கினம், கேந்திரம், மூலத்திரி கோணம் உச்சம் ஆகிய இவ்விடங்களில் புதன் நிற்பதாகும்.
புஷ்கல யோகம்
அமாவாசை, திங்கட் கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் கூடி வருவது.
பூப யோகம்
ஒரு நல்ல யோகம். அது சந்திரன் ஐந்தில் நிற்க, ஐந்தோன் உச்சம் பெற பாக்கிய அதிபன் குடும்பம் ஏறி நிற்பதாகும். இலக்கினம் முதல் நான்காம் ராசி வரை இரு பாம்புகள் நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.
பேரிகை யோகம்
ஒரு விசேஷ நல்ல யோகம்.
1. அது இரண்டு, ஏழு, பன்னிரண்டு ஆகிய இந்த இடங்களில் கிரகங்கள் இருந்து, பத்தாம் அதிபன் பலத்து நின்றாலும்,
2. வியாழன், சுக்கிரன், இலக்கின அதிபன் இவர்களோடு கூடி, கேந்திரத்தில் நிற்க, பாக்கிய அதிபதி பலத்து நின்றாலும்,
3. செவ்வாய்க்கு கேந்திர திரிகோணத்தில் சுக்கிரன், வியாழன் ஆகிய இவர்கள் இருக்க இலாப அதிபதி பலத்து நின்றாலும்,
4. இலாப அதிபதிக்கு சுக்கிரன் கேந்திர திரிகோணம் பெற்று நின்றாலும்,
5. சனிக்கு ஆறு, எட்டு, இவைகளில் செவ்வாய் இருக்க, செவ்வாய்க்கு ஆறு, எட்டு இவைகளில் வியாழன் இருக்க, வியாழனுக்கு ஆறு எட்டு இவைகளில் சூரியன் நின்றாலும்,
6. ஐந்து ஒன்பதில் பாபக்கோள் இருக்க, கேந்திரத்தில் சுபக் கோள் இருக்க, சூரியன் பலத்து நின்றாலும்,
7.வியாழனுக்கு மூன்று, ஐந்து, ஏழு, இவைகளில் புதன் இருக்க, புதனுக்குப் பத்தில் குரு இருந்தாலும்,
8. இலக்கின அதிபதி, குரு செவ்வாய் இவர்கள் மூன்றில் நிற்க, அல்லது பார்க்க, இரண்டு ஒன்பதில் பாபக் கோள் இருந்தாலும்,
9. இலாப அதிபதி உச்சனாகி, இலாப ஸ்தானத்தைக் குரு பார்க்க, சுக்கிரன் கேந்திர கோணத்தில் இருந்தாலும்,
10. ஒன்பது, பன்னிரண்டில் புதன் இருக்க, ஒன்று, ஐந்து இவைகளில் குரு இருக்க, அஷ்டம அதிபன் பலத்து நின்றாலும்,
11. நாலோனும், குருவும் பாக்கியத்தைப் பார்த்தாலும், இருந்தாலும், குரு உச்சம் பெற்றாலும், வௌ்ளியும், குருவும் ஒன்றுக்கு ஒன்று நட்பாய்ப் பார்த்தாலும், வௌ்ளி உச்சம் பெற்று நின்றாலும்,
12. குரு, புதன் இலக்கினத்தைப் பார்க்க, இலக்கின அதிபதி உச்சம் பெற்று நின்றாலும், 13.இராகு, இருந்த இராசி அதிபதி உச்ச கேந்திர திரிகோணத்தில் இருக்க, இராகு சுப வீடேறி சுப வர்க்கம் பெற்றாலும், பேரிகை யோகமாகும்.
போக போக்கிய யோகம்
ஒரு நல்ல யோகம். அது ஒன்பதுக்கு உடையவன் நின்ற திரேக்காண ராசியில் ஐந்தாம் அதிபன் இருக்க, ஐந்தில் குரு இருப்பதாகும்.
மகா யோகம்
பரிவர்த்தன யோகம்,
1. அது இலக்கின அதிபன் இரண்டு, நான்கு ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இலக்கினத்தில் நிற்பது,
2. இரண்டுக்கு உடையவன் நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் இரண்டில் நிற்பது,
3. நாலுக்கு உடையவன் ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டு அதிபர் நாலில் நிற்பது,
4. ஐந்துக்கு உடையவன் ஏழு, ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஐந்தில் நிற்பது,
5. ஏழுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் ஏழில் நிற்பது,
6. பாக்கிய அதிபன் பத்து, பதினொன்று ஆகிய இவைகளில் இருக்க, அவ்வீட்டதிபர் பாக்கியத்தில் இருப்பது,
7. பத்தோன் பதினொன்றில் இருக்க, பதினொன்றோன் பத்தில் நிற்பது.
குறிப்பு: மேற் காட்டியுள்ள ஏழு பிரிவுகளில் முதலாவது பிரிவில் கண்டவை ஏழு வகையாய்க் கிரகங்கள் மாறி நிற்கும். இரண்டாவதில் ஆறு வகையாய் மாறி நிற்கும். மூன்றாவதில் ஐந்து வகையாய் மாறி நிற்கும். நான்காவதில் நான்கு வகையாய் மாறி நிற்கும். ஐந்தாவதில் மூன்று வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஆறாவதில் இரண்டு வகையாய் மாறி நிற்கும். ஏழாவதில் ஒரே வகையாய் நிற்கும். இவைகள் இருபத்தெட்டு வகையாய் மாறி நிற்கும். இவை விசேஷ நல்ல யோகமாகும்.
மகுட யோகம்
ஒரு நல்ல யோகம். அது ஐந்தில் குரு இருக்க, ஐந்தோன் ஒன்பதில் இருக்க, பத்தில் சனி நிற்பதாகும்.
மச்ச யோகம்
ஒரு நல்ல யோகம். அது ஒன்று, ஒன்பது இவைகளில் பாவர் இருக்க, நாலில் பாவிகள் இருந்தாலும், சர ராசி இலக்கினமாக இலக்கினத்தைச் சுபர் நோக்க, சரத்தில் குரு இருக்க, கேந்திரத்தில் சுபர் இருக்க, இலக்கின அங்கிச கேந்திர கோணத்தை ஐந்தாம் அதிபன் பார்த்தாலும், ஸ்திர ராசியில் குரு சுக்கிரன் இருக்க, திரிகோணத்தில் கிரகங்கள் இருக்க, இலக்கினத்தில் கிரகங்கள் வலுவுற்று இருந்தாலும், மூன்றுக்கு உடையவனுடைய அங்கிச அதிபதி, உச்சம் பெற்றிருக்க, சுபக்கிரகம் பார்த்தாலும், பாக்கிய அதிபன் இருந்த அங்கிச அதிபதி குரு சுக்கிரனாக கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும், இலக்கின அதிபதி, சுப அங்கிசம் பெற்று தேவலோக அங்கிசமுமாகி, பாக்கிய அதிபதி, சிங்க அங்கிசம் பெற அல்லது கேந்திரம் இருக்க சரராசி இலக்கினமானாலும், மச்ச யோகமாகும்.
மந்தாகினி யோகம்
ஒரு நல்ல யோகம். அது அஷ்டமத்தில் குரு, சுக்கிரன் இருக்க, சரராசி இலக்கினமாகி அதில் புதன் இருக்க, ஐந்து, ஏழு பதினொன்றில் சூரியன், சந்திரன், சனி இவர்கள் இருப்பதாகும்.
மரண யோகம்
நாச யோகம். ஒரு கெட்ட யோகம். அது நாலாம் ராசி முதல் ஏழாம் ராசி வரை ஏழு கிரகங்கள் நிற்பது. விவரம் அமிர்தாதி யோகத்தில் காண்க.
மாலிகா யோகம்
ஒரு விசேஷ நல்ல யோகம். அது இலக்கினம் முதல் ஏழு ராசி வரையில் இராகு கேது நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும். நாலாம் இடம் முதல் பத்தாம் இடம் வரை இராகு கேது நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.
மாளவ யோகம்
1. இரு பாம்பு, மதி, இரவி ஆகியவர்கள் நீங்கிய பஞ்சக் கிரகங்கள், ஆட்சி, உச்சம் இவைகளில் கேந்திரித்து நிற்பதாகும்.
2. சுக்கிரன், மூலத் திரிகோணம், ஆட்சி, உச்சம், கேந்திரம், உதயம் இவைகளில் நிற்பதாகும்.
மிருக யோகம்
ஒரு நல்ல யோகம். அது எட்டோன் நின்ற அங்கிச அதிபன் சுபக் கோளோடு பாக்கியத்தில் இருக்க, பாக்கிய அதிபதி உச்சம் பெற்று நின்றாலும், விரையாதிபன் ஆட்சி பெற அஷ்டம அதிபன் நான்கு, பன்னிரண்டு இவைகளில் இருக்க, பாக்கிய அதிபன் பார்வை பெற்று நின்றாலும் இந்த யோகமாகும்.
மிருதங்க யோகம்
ஒரு நல்ல யோகம்.
1. அது இலக்கின அதிபதியின் அங்கிச அதிபதி எந்த அமிசையில் அமிசை பெற்றிருக்கின்றானோ அதற்கு உடையவன் உச்ச கேந்திர கோணத்தில் சுபக்கிரகத்துடன் கூடி நின்றாலும்,
2. செவ்வாய் ஆட்சி பெற்று, அமிசையில் உச்சாங்கி‘ம் பெற்று நிற்க, வியாழன் ஏழாம் நோக்குப் பெற்று நின்றாலும்,
3. ஐந்தோன் நின்ற அங்கிச அதிபன் கேந்திர கோணத்திலாவது, அல்லது உச்சாங்கிசத்திலாவது நின்றாலும்,
4. சூரியன், செவ்வாய் ஆகிய இவர;கள் ஆறு, எட்டில் நிற்க, சூரியன் நின்ற அங்கிசத்துக்கு, சனி கேந்திர கோணத்தில் இருந்தாலும்,
5. இலாப அதிபன் உச்சமாய் சுக்கிரனோடு நிற்க, இவர்கள் இருந்த இராசி அதிபர் கேந்திரத்தில் நின்றாலும் இந்த யோகமாகும்.
மீன யோகம்
இலாப அதிபனுடன் வௌ்ளி கூடி உச்சம் பெற்றும், இலக்கின அதிபன் கேந்திரம் பெற்றும் நிற்பதாகும்.
முசல யோகம்
ஒரு நல்ல யோகம். பத்தில் பாம்பு இருக்க, பத்தாம் அதிபனும் உச்சம் பெற்று, சனி பார்வையோடு இருந்தாலும், இராகு, கேது நீங்கிய ஏழு கிரகங்கள் ஸ்திர ராசியில் நின்றாலும் இந்த யோகமாகும்.
மேக யோகம்
ஒரு நல்ல யோகம். அது வியாழனுக்கு மூன்றில் வௌ்ளியும், வௌ்ளிக்கு ஒன்பதில் சூரியனும், பத்துக்கு உடையவன் நாலிலும் இருப்பதாகும்.
மேதினி யோகம்
ஒரு சம யோகம். அது ஐந்து, ஒன்பது, ஏழு, பத்து இவைகளில் சுபர்கள் இருக்க, பாவர் நோக்கு இல்லாது இருப்பதாகும்.
யுக யோகம்
இராகு, கேது நீங்கிய சூரியனாதி எழுவரும், இரண்டு இராசியில் நிற்பதாகும். இது ஒரு கெட்ட யோகம்.
யூப யோகம்
ஒரு நல்ல யோகம். அது இலக்கினம் முதல் நான்காம் ராசி வரை இராகு, கேது நீங்கிய சூரியாதி எழுவர் நிற்பதாகும்.
யோகம்
1. அதிர்ஷ்டம், பலம், பொருத்தம்,
2. அமிர்தாதி யோகம் முதலியன,
3. ஆனந்தாதி யோகம் முதலியன,
4. சாதக யோகம் முதலியன
இது உத்தமம், மத்திமம், அதமம், என்னும் மூன்று வகை உள்ளது. இதன் ஒவ்வொன்றுள்ளும் பல பிரிவுகள் உள்ளது,
5. பஞ்சாங்க உறுப்பில் ஒன்று. இது விஷ்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷ்ணம்,
வச்சிரம், சித்தி, விதிபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரம், பிரமம், ஐந்திரம், வைதிருதி என்பன வட மொழிப்பெயர். இவைகட்கு முறையே கம்பம், பிரியம், வாழ்நாள், புண்ணியம், நலம், மாகண்டம், அறம், துணை, சூலம், கண்டம், ஆக்கம், நிலை, அரவு, எக்களிப்பு, வேல், வல்லமை, கொலை, காயம், தாழ்வு, காட்சி, திறம், புகழ், காவல், தெளிவு, பிரமா, இந்திரன், பேய் என்பதாக தென் மொழிப் பெயராகும். இவற்றுள் கம்பம், கண்டம், அதிகண்டம், சூலம், வியாகாதம், வச்சிரம், விதிபாதம், பரீகம், வைதிருதி இந்த ஒன்பது நீங்கிய மற்றவை நல்லனவாகும்.
இவற்றுள்ளும் கம்பத்தில் மூன்றும் சூலத்தில் ஐந்தும், கண்டத்திலும், அதி கண்டத்திலும் ஆறும், வியாகாதத்தில் ஒன்பதும் கழித்து நின்ற நாழிகையே ஆகாதது ஆகும்.
6. அட்டாங்க யோகம் முதலியனவாகும்.
யோக வகை - 4
மரண யோகம், சித்த யோகம், அமிர்த சித்த யோகம், அமிர்த யோகம்.
வசுமத்யோகம்
சந்திரனுக்காவது, இலக்கினத்திற்காவது உப செய ஸ்தானத்தில் எல்லாச் சுப கிரகங்களும் நிற்பது. இதன் பலன் திரவிய விருத்தி.
வச்சிரயோகம்
ஒரு நல்ல யோகம். அது நாலு, பத்து ஆகிய இடங்களில் பாபக்கிரகங்கள் இருக்க மற்ற இடங்களில் சுபர்கள் இருப்பதாகும்.
வல்லகி யோகம்
வீணை யோகம் பார்க்க.
வாசி யோகம்
ஒரு சுப யோகம்.
அது 1. சூரியனுக்கு முன்னே சுக்கிரன் நின்றாலும்,
2. சூரியனுக்கு முன்னே சனி நின்றாலும்,
3. சூரியனுக்குப் பின் எல்லாக் கிரகங்களும் நின்றாலும்,
4. சூரியனுக்குப் பின் சனி, செவ்வாய் நின்றாலும்,
5. சூரியனுக்குப் பின் புதன் நின்றாலும்,
6. சூரியனுக்குப் பின் குரு, சுக்கிரன் கூடி நின்றாலும், இந்த யோகமாகும்.
7. சுபம் அல்லாத யோகம், சூரியனுக்குப் பின் சனி நின்றாலும்,
8. சூரியனுக்கு விரையத்தில் சந்திரன் நீங்கிய சுபக்கிரகங்கள் நின்றாலும் இந்த யோகமாகும்.
விகக யோகம்
ஒரு மத்திம யோகம். அது சூரியாதி எழுவர் நாலாம், பத்தாம் இடங்களில் இருப்பதாகும்.
விகட யோகம்
ஒரு தீய பலன். அது நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து இந்த ஸ்தானங்களில் ஏழு கிரகங்கள் கூடி நிற்பது.
விசய மாலிகா யோகம்
ஒரு நல்ல யோகம். அது பதினோராம் இடம் முதல், ஐந்தாம் இடம் வரை இரு பாம்பு நீங்கிய ஏழு கிரகங்கள் நிற்பது.
விட்ணு யோகம், விஷ்ணு யோகம்
ஒரு நல்ல யோகம். அது கரும அதிபதி பாக்கியாங்கிசம் ஏறி, பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபனோடு கூடி நிற்பது.
விரிஞ்சி யோகம்
ஒரு நல்ல யோகம். அது இலக்கின அதிபன், குரு, சனி ஆகிய இவர்கள் கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம், நட்பு இவைகள் பெற்று நிற்பதாகும்.
விருட்டுணு யோகம்
விட்டுணு யோகம் பார்க்க.
மேலும் பல யோகங்கள் காணப்பெறுகின்றன.