திசை, புத்தி, அந்தரம், சூட்சுமம், அதி சூட்சுமம் இன்னும் அதிலும் குறைந்த வருடம், மாதம், நாள், மணி, நிமிடம், நொடி என மிகக் குறைந்த அளவும் கணக்கினில், கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் எந்த ஒரு அதிர்ஷ்டமோ, விபத்தோ ஆக எதுவோ தொடர்ந்து நடைபெறாது. அவை சில மணியோ அல்லது சில நிமிடமோ, நொடியோ... எதற்கும் கிரகத் தொடர்பேக் காரணம்.
இவற்றினை தினக்கோள் சந்திரன் உட்பட மாதக்கோள்கள் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய், ஆண்டுக்கோள்கள் ராகு, கேது, குரு, சனி ஆக யாவுமே கிரக கோட்சாரப் பயணத்தின் வழித் துணை கொண்டு நமக்கு நம் சாதகத்திற்கு ஏற்றபடி அழகாய் நன்மையோ, தீமையோ அல்லது இரண்டும் கலந்த நிலையோ, சமநிலையோ அல்லது செயலற்ற நிலையோ எதையாவது இன்றியமையாது தந்தாக வேண்டும் எனும் கட்டுக்குள் அவை பயணிக்கின்றன.
வேறொன்றினையும் நாம் நினைவினில் கொள்ள வேண்டும். நாம் செய்த பூர்வ புண்ணியப் பிறவிப் பலன்கள் சஞ்சித, பிராப்த, ஆகாமியக் கன்ம வினைகள் யாவும் நம்மை தொடர்ந்து வருகின்றன.
அது மட்டும் அல்லாமல் நம் பூர்வ பந்த உறவின் நன்மை, தீமை உட்பட்ட கன்ம வினைகள் யாவும் நம்மைப் பின் தொடர்கின்றன. இங்குதான் நாம் கவனிக்க வேண்டும்.
திடீரென நமக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதும், துன்பங்கள் வருவதும் முதலான யாவற்றையுமே நாம் கவனித்துப் பார்த்தால் புரியும். இங்கே பூர்வ புண்ணியாதி வலிமை பெற்றுள்ளானா? எவர் வலிமை பெற்றுள்ளார்? சுப, அசுப கிரகம் என நாம் பல பாகுபடுத்திப் படித்திருந்தாலும் எந்தக் கிரகத்திற்கும் சுபம், அசுபம் பலன் தரும் அதிகாரம் உண்டு. அனைத்து நட்சத்திரங்களுமே நன்மை, தீமை தருவன. அதுபோல் அனைத்துக் கோள்களுமே அனைத்துப் பலனும் தர வல்லன.
எதையும் யோசித்து, நிதானித்துப் பிறகே பதில் கூற வேண்டும். ஏனெனில், கிரக சாபங்களுக்கு தவறாகப் பலன் கூறும் சோதிடர் ஆளாக நேரிடும்.
சிலர் பொதுவாக சனியா? ராகுவா? கேதுவா? இவர்கள் தீமையைத் தருபவர்கள் என்று கூறுவதை எல்லாம் தவறான விளக்கங்கள் தருபவர்களை எல்லாம் கணக்கினில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
எந்த ஒரு கிரகமும் நிற்கும் நட்சத்திரக் கால் - பாதம் கணக்கினில் கொண்டுதான் பலன் கூற முற்பட வேண்டும். இதை ஒட்டிதான், “நாடி பார்த்து வைத்தியம் பார்க்கணும். கால் பார்த்து சோதிடம் பார்க்கனும்” என்றார்கள்.
பலன் கூறுவதற்கு என்ன தேவை? மிகுதியான சோதிட நுால்களின் ஞானம், அனுபவ ஞானம், வாக்கு பலிதம், இறையருள் மிக மிக அவசியம்.
சிலர் குரு, சுக்கிரன் முதலான சுபத்திசைகளை கணக்கினில் கொண்டு எல்லாம் நன்மையாய் நடக்கும் என்பார்கள். ஆனால் ஒன்று கூட நடக்காது.
பகை கால்கள், அவை தொடர்ந்த கிரக சகிதங்கள் அவை பெறும் போது, அவை நன்மை செய்வதில்லை. மாறாக சிலருக்குத் தீமை செய்வதுண்டு. பொதுவாக திசைப்பலன்களின் போதும் எப்போதும் கோட்சாரம் நாம் நினைவினில் கொள்ள வேண்டும். இல்லை எனில் பலிதப் பலன்கள் மாறும். அதுவே உரிய நேரத்தில் வழங்கப் பெறாததற்கு, காலதாமதம் ஆவதற்கு, கிடைக்காமல் இருப்பதற்கு இவை யாவும் ஒரு காரணம்.
உதாரணம், சூரிய திசை அரசாங்கத் தொடர்புடையது எல்லாம் சிறப்பாய் நடக்கும் என்றோ, சுக்கிரன் திசை செல்வம் செழிப்பாய் கொட்டி விடும் என்று கனவு காணக் கூடாது. அது மிகவும் தவறு என்பது இப்போது புரியும்.
அதே போல் சனி, இராகு, கேது முதலான அசுபர் திசை வரும் போதும் சிலர் அச்சுறுத்துவர். எந்தத் திசை வந்த போதும். நாம் பயம் கொள்ள வேண்டாம். காரணம், நேர்மை, நாணயம், ஒழுங்கு, சத்தியத்தின் வழிச் செல்பவரை எந்தக் கிரகமும் தொல்லை செய்வதில்லை.
ஒன்றை நினைவினில் கொள்ளுங்கள். உதாரணமாக, நீர் தனது ஓட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது, சிறிய கல் பட்டால் அந்த இடத்தில் சலனம் ஏற்பட்டுத் தெளிந்து பின்னர் மீண்டும் செல்லும் அது போலத்தான்.
அதே போல், ஒரு கிரகம் சுபரோ, அசுபரோ இடம் மாறி வேறு இராசி வீடு அல்லது அதே வீட்டில் நட்சத்திரக் கால் பெயரும் போதும் இதன் அசைவினை நாம் நன்கு அறியலாம்.
ஒரு செடியைப் பெயர்த்து வேறு இடத்தில் நடும் போது, மண்ணின் சில அதிர்வுகள் அங்கு இருக்கும். பிறகு வேறிடம் நட்டுத் தழைத்த பின் சரியாகி விடும். அது போலத்தான். நன்றாக அந்தக் கிரக அசைவுகளை நாம் நன்கு அறியலாம்.
அதற்குத்தான் சொல்வது. பஞ்ச மாபாதகம் செய்யாதே! பழி பாவத்திற்கு ஆளாகாதே! கர்மா 10 ஆம் வீடு நமக்கு எப்போதும் நினைவினில் இருக்க வேண்டும்.
பொதுப்பலன்களில் சூரியன் - பிதுர்க்காரகன், சந்திரன் - மனதின்காரகன், செவ்வாய் - சகோதரக்காரகன், புதன் - வித்யாக்கரகன், மாதுலக்காரகன், குரு - புத்திரக்காரகன், சுக்கிரன் - களத்திரக்காரகன், சனி - ஆயுள்காரகன், ராகு - மோட்சக்காரகன், கேது - ஞானக்காரகன் எனவும் வேறு பல பெயர்கள் முதலானவை உள்ளன. இதை இங்கே சொல்கின்றேன் என்றால் பலன் கூறும் போது, அவரவர் சாதகத்திற்கு ஏற்றவர் இந்த இடங்களில் அமைவதால் சிலருக்குக் குழப்பத்தின் பேரில் தெளிவான பலன், விடை கூறுவதில்லை. எனவே பலன் தடுமாற்றம் ஏற்படுகின்றது.
எனது வானியல் தொடர்ந்த நுால்களில் இவற்றின் பெயர், காரகம் முதலிய பலவற்றின் பல பெயர்கள் தொடர்ந்த செய்திகள் யாவும் விளக்கமாய்த் தரப் பெற்றுள்ளன.
வானியல் சோதிடம் என்பது கடல். பல பழம் சோதிட நுால்கள் கற்பின் இதன் ஆழத்தை நாம் நன்கு உணரலாம். பணம் சம்பாதிப்பது இதில் நோக்கமல்ல. கிரக ஞானம் இருப்பினும் யாவும் சித்தியாகும். கற்பது கடினம். கற்ற ஞானத்தினை கரவின்றிக் கற்றுக் கொடுத்தலே மிகுந்த செல்வம். இதைத்தான் ஞானக்காரகன் செய்வான்.
பொதுவாக சிலர் நினைப்பார்கள். செல்வம் வரும் என்றால் ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, ஒரு கோடியாக இருந்தாலும் சரி. அவரவர் நிலைக்கு ஏற்றபடி இலாபம், நட்டம், ஆகியன யாவும் அமையும்.
அரவுகள் பணம், விடம், ஞானம், மோகம்… விடத்தை உடம்பில் ஏற்றுபவர்கள் வல்லவர்கள். நீங்கள் நினைக்கலாம் நாம் எந்த போதைக்கும் இந்தத் திசையில் அடிமையாகவில்லை என்று. ஆனால் அந்தக்கிரகம் நமது உடலில் இருக்கும் நிலை இல்லாமல் மருத்துவரின் ஆலோசனையும் சிறிய போதை கலந்த உறக்க மாத்திரை அல்லது வேறு வடிவினில் நமது உடம்பினுள் செலுத்தப்பெறும். இது ராகு கேதுவின் நற்சகிதம் இருக்கும் சாதகர்க்கு. அதுவே அசுபருடன் சகிதம் பெறின் அனைத்து போதை வஸ்துக்களிலும், பழக்கங்களிலும் இவரே அடிமையாகி பல இன்னல்களைச் சந்திப்பர்.
பல நிலைகளையும் யோசித்தேப் பலன் கூற வேண்டும். நாம் இதன் அடிப்படைகளை மனதில் ஊன்றிப் படித்து விட்டால், அவை நமக்கு செயல் அனுபவத்தில் இதன் செயல்பாட்டினைக் காணலாம். அப்போது தான் நாம் அதனை உணர முடியும்.