தமிழ் எண் கணித பலன்கள்
வேந்தன் சரவணன்
எண் ஒன்பது (9) மற்றும் அதற்கான பொதுப்பலன்கள்
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஒன்பதாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
எண் ஒன்பதுக்குரிய கோள் செவ்வாய் ஆகும். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் விளைவு எண் அதே எண்ணாக வருவதால் இந்த எண்ணுக்குரியவர்களுடன் நட்பு கொள்வதால் எவ்வித நன்மையும் தீமையும் ஏற்படாது. நீர் மேல் தாமரை இலை போல வாழ்க்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வர். இவர்களை இல்லத் துறவிகள் என்று கூறினாலும் தகும். உடல் எச்செயலை செய்தாலும் மனம் மட்டும் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும். மெய்த்துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களாக இருப்பதைக் காணலாம்.
இந்த எண்ணுக்குரியவர்களில் சிலர் வேறுமாதிரியான பண்புகளைக் கொண்டிருப்பர். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் விளைவு எண் ஒன்பதே வருவதால், எண் ஒன்பதுக்கு உரியவர்களை யார் எதிர்த்தாலும் தோல்வியே பெறுவர். இதனால் இவர்களுக்கு எதிரிகள் என்பதே கிடையாது. இது எப்படி சாத்தியம் எனில் இவர்கள் தமது எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளவோ இல்லையேல் அழித்துவிடவோ செய்கிறார்கள். எதிரியை நண்பனாக்கிக் கொள்ள பெருந்தன்மையும் புத்திசாலித்தனமும் வேண்டும். எதிரியை முற்றிலுமாக அழிப்பதற்கு கடுமையான வலிமை தேவை. இவை எல்லாவற்றையும் இந்த எண்ணுக்குரியவர்கள் கொண்டிருப்பர் என்பதில் ஐயமே இல்லை.
சித்தர்கள், ஞானிகள், துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களே. அதே சமயம் ராணுவ வீரர்களில் பலரையும் இந்த எண்ணில் காணலாம். இறைவனை எப்போதும் மறவாமல் இருப்போர் நற்கதி அடைவர் என்பதால் நற்கதி அடைவதற்கு உதவி செய்யும் கோள் செவ்வாய் ஆகிய முருகன் என்று கூறலாம்.
செவ்வாயின் நிலை கெட்டிருந்தால், இந்த எண்ணுக்குரியவர்கள் இரக்கமின்றி உயிர்களை வேட்டையாடுதல், கூலிப்படை நடத்துதல், போன்ற கொடூரமான செயல்களைச் செய்வர்.
எண் ஒன்பதிற்கு எழுத்துக்கள் எவையும் இல்லை.


இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.