மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட் (Emerald). ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை இக்கற்கள் கிடைக்கின்றன. இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளால் ஆனது.
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும், எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும். இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக்கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில், அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்றும் மக்களிடையே உள்ளது.
முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை தரம் உயர்வானதாக இருப்பதில்லை. பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
யார் அணிவது?
பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும் 5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில் அணிந்து கொள்ளுதல் நல்லது. முதலில் அணியும் போது புதன் கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதம் அணிவதன் பயன்கள்
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டுச் செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேன்மை கொடுக்கும். மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
ஆனெக்ஸ் - மாற்று
மரகதத்திற்கு மாற்றாக ஆனெக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. ஆழ்ந்த நிறம் கொண்ட ஆனெக்ஸ் கற்களுக்கு, மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை இல்லை.