கவிதை நூல்கள் என்றாலே, கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, தாய் - தந்தை வாழ்த்து என்று ஏதாவதொரு வாழ்த்துப் பாடலுடன் தொடங்குவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. இந்நூலிலும் கவிஞர் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தாய்மொழி, தாய், தந்தை, ஆசிரியர் என்று அவர்களது பெருமைகளை நமக்கு உணர்த்தும் கவிதைகளாக இடம் பெற்றிருப்பது சிறப்பாக இருக்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் பல கவிதைகள் இம்மண்ணில் புரையோடிக் கிடக்கும் சமூகச் சீரழிவுகளை சீர்படுத்திடச் செய்யும் நோக்கத்துடன் அமைந்த கவிதைகளாக இருப்பது பாராட்டுக்குரியது. இக்கவிதைகளில் எனக்குப் பிடித்த சில வரிகளை இங்கு பதிவிடுவது அவசியமென்று கருதுகிறேன்.
சிறுவயதில் நட்பில் இருந்தவர்கள் வளர வளர அவர்களுக்குள் சாதியும் வளர்ந்து பெரியதாகி விட்டதுடன் நட்பை பகைமையாக்கிக் கொண்டு விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கும்
“நேற்று வரை
நேசித்த நண்பன்
இன்று
நேர் விரோதி
காரணம் - அவன்
வேற்று சாதி”
எனும் கவிதை வரிகள் சாதி(தீ)யைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அலைபவர்களுக்குச் சரியான சவுக்கடியாக அமைந்திருக்கிறது.
மனிதனின் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்த மரங்கள் அழிப்பில் பெரும்பங்கு வகிக்கும் மனிதன் மரம் வளர்ப்பதில் ஏனோ அக்கறை கொள்வதில்லை, தன் முன்னோர் தனக்கு வளர்த்துக் கொடுத்த மரங்களை வெட்டித் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள விரும்பும் மனிதர்கள், தன் எதிர்கால மரபு வழியினருக்குத் தாங்களும் மரங்களை வளர்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு கவிதையில்;
“வீடு கட்டக் கடன் கொடுக்கும்
மரங்களின் வங்கி! திருப்பிச் செலுத்து
தினமும் ஒரு மரக்கன்றை வாங்கி”
என்று மரக்கன்றுகள் நடப்படுவதன் அவசியத்தையும், காடுகளின் தேவைகளையும் எளிதாக உணர்த்துகிறார்.
இன்றைய உலகில் நேர்மை, நன்மை, நாணயம், நீதி என்று அனைத்து ஒழுக்க நெறிகளும் காற்றில் போய்க் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் துன்பமே தொடர்ந்து கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இதை எவராலும் மாற்ற இயலாது என்பதாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதனை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்த் கவிதை ஒன்றில்,
“புத்தனும் காந்தியும் மீண்டும் வந்தால் - அவர்
புத்தியை மாற்றவும் ஆட்களுண்டு
இத்தனை தொல்லையும் ஏன் வளர்த்தாய்!
மனிதா உனக்கொரு கேள்வியுண்டு!”
என்கிறார். இப்போது, எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் நிலையில் எந்த மனிதனும் இல்லை என்பதைக் கடுமையாகச் சாடியிருப்பதும் பாராட்டுக்குரியதே.
இந்த அவசர உலகில் இயலாமையால் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ யாரும் முன் வருவதில்லை. பெரிய அளவில் அவர்களுக்குப் பணமோ, வேறு பொருளோ கொடுத்து உதவிட முடியாவிட்டாலும், முதியவர்களுக்குச் சாலையைக் கடக்க உதவலாம், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு வங்கியில் எழுதிக் கொடுத்து உதவலாம், ஆபத்தில் சிக்கியவருக்கு ஆம்புலன்சை வரவைத்து உதவலாம் என்பது போன்ற சிறு சிறு உதவிகளை நாம் செல்லும் வழியிலேயே செய்ய முடியும் என்று ஒரு கவிதையில் எழுதி வழிகாட்டியிருக்கிறார்.
இப்படிச் சமூகச் சிந்தனைகளுடன் பல கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும், இடையிடையே அம்பேத்கார், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், ஔவைப்பாட்டி என்று உயர்சிந்தனை கொண்டவர்கள் குறித்தும் கவிதைகளைப் படைத்திருப்பதும் பாராட்டுக்குரியதாகவே இருக்கிறது.
கவிஞரின் பல வருட முயற்சி, இக்கவிதை நூலாக உருவாக்கம் பெற்றிருக்கிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்...!