மரபுப்பாக்கள் இயற்றுகின்ற பாவலர்கள் அருகி வருகின்ற இக்காலத்தில், ‘மறக்கவொண்ணா மரபுப்பாக்கள்’ எனும் தரமிக்கதொரு மரபுப்பா நூலைத் தந்திருக்கும் நூலாசிரியர் பாராட்டுக்குரியவர். மெய்யாகவே, இந்நூலிலுள்ள அனைத்துப் பாக்களும் மறக்கவொண்ணா பாக்களாக அமைந்திருக்கின்றன.
‘உள்ளத்து உள்ளது கவிதை’ என்பார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம். அதைப் போல், நூலாசிரியரின் உள்ளத்துள்ளும் கவிதைகள் நிரம்பி இருக்கின்றன. அதை மற்றவர்களும் படித்து மகிழும் வகையில் அள்ளித் தந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.
நம் இனிய தமிழ் மொழியில், இரண்டு சொற்களைச் சேர்த்து எழுதும் போது தேவையில்லாத இடத்தில் மெய்யெழுத்தை எழுதுவது தவறாகும், தேவையான இடத்தில் எழுதாமலிருப்பதும் தவறாகும். இவ்விலக்கணத்தை ‘ஒற்று வைக்கா வேந்தன்’ என்ற ‘பா’வின் மூலம் அழகாகப் புரிய வைத்திருக்கும் கவிஞரின் திறன் அருமை.
‘பா’ அனைத்தையும் கதை சொல்லும் பாணியில், அதாவது, கதைப்பாக்கள் என்று சொல்லும் வகையில் எழுதியிருப்பது புதுமையாகவும், நயமாகவும் உள்ளது.
தீய எண்ணம் உடைய ஆண்கள் எவ்விடத்திலும் , எந்நிலையிலும் பெண்களை வெறும் காமப்பொருளாக மட்டுமே நோக்கும் நிலையைத் தனது ‘சேற்றில் மறைந்த செந்தாமரை’, ‘சைகைமொழி’, ‘என்ன செய்ய நினைத்தாய்?’ எனும் கவிதைகளின் வழியாக மிகக் கடுமையாகக் கடிந்து சாடியிருப்பது பாராட்டுக்குரியதே.
மேலும் தமிழ் மொழியின் சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும், தமிழரின் பண்பையும் வெளிப்படுத்துகின்ற கவிதைகளையும், நல்ல மாந்தர் சமுதாயம் அமைய வேண்டும் என்ற அக்கறைப்படும் சில கவிதைகளையும் இந்நூலில் தந்திருப்பது சிறப்பாக இருக்கிறது.
தமிழாசிரியர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கற்கும் மாணவர்கள் என்று பலரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த நூல் இதுவாகும்.