“பெரிய சோதிட சில்லரைக்கோவை ஓர் ஆய்வு” எனும் இந்நூல்;
1. சோதிடக்கலை ஓர் அறிமுகம்
2. பெரிய சோதிட சில்லரைக் கோவை எனும் சாதக கணித விளக்கம் நூல் அறிமுகம்
3. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் ஆரூடம் நிமித்தம், நாள் பலன்கள்
4. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் சாதகப் பொதுப்பலன்கள்
5. பெரிய சோதிட சில்லரைக் கோவையில் பெண்கள் சாதகம் - பெண்கள் இருது சாதகப் பலன்கள்
- என்று ஐந்து இயல்களைக் கொண்டு அமைந்திருக்கிறது.
மனிதனது செயல்பாடுகளுக்கு உகந்த வேளையை (நேரத்தை அல்லது காலத்தை) பரிந்துரைக்கும் கலையே சோதிடக் கலையாகும். ஆயக்கலைகள் அறுபத்து நான்கினுள் மிகச் சிறந்த கலையாகவும் இது உள்ளது. இது ஐந்தாவது வேதமாகவும், அழிவில்லாக் கலையாகவும் விளங்குவதாகப் பெரியோர்கள் கூறுவதையும் அறிய முடிகிறது. இந்த சிறப்புக்குரிய சோதிடத்தைப் பலர் ஆய்வு செய்து நூல்களாகவும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இந்நூலாசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி இவ்வாய்வு நூலை வெளியிட்டிருப்பது சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.
இந்நூலினுள் கொடுக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, சூரியனைப் பற்றிய தகவல்கள் மிக அருமையாக இருக்கிறது. சூரியகாந்தி மலர்கள், சூரியன் உள்ள திசையை நோக்கி மட்டுமே தன் முகம் காட்டியபடி இருக்கும் என்பதைக் கேட்டும், படித்தும், பார்த்தும் தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், நெருஞ்சி மலர்களும் சூரியனின் கதிரொளி நோக்கித் திரும்பும் இயல்புடையது என்ற தகவல் நல்லதொரு அரிய தகவலாகும். இத்தகவல் குறுந்தொகையில் ஒரு பாடலில் இடம் பெற்றிருக்கிறது என்பது நூலாசியரின் பெருந்தேடலுக்குச் சான்றாக அமைந்திருக்கிறது.
சனீஸ்வரன் என்ற பெயருக்கான காரணத்தை, மெல்ல, அதாவது ‘மெதுவாக இயங்கும் கோள்’ என்ற பொருளையுடைய ‘சனை’ எனும் சொல்லே, நாளடைவில் சனி என்று வழங்கியதாகக் குறிப்பிடுவது சிறப்புடையதாகும். ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப்பயிற்சியினை உடற்பயிற்சியைப் போன்று வேகமாகச் செய்யாமல், மெதுவாகச் செய்வதே நல்லது என்பார்கள். அந்தக் கருத்தைத் தெளிவாகப் புரிய வைக்கும் பொருட்டு, சனீஸ்வரை உவமையாக, உதாரணமாக சோதிட நூலில் குறிப்பிட்டுள்ள தகவல் நயமிக்கவை.
சோதிடத்தின் பெருமைகள், சோதிடரின் தன்மைகள், பஞ்சாங்கம் பற்றிய விளக்கம், யுகங்கள் பற்றிய உண்மைகள், நவக்கிரக ஆரூடங்களின் பலன்கள் என்று அதிகமான சோதிடத் தகவல்களை விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லியிருப்பதால் இந்த ஒரு நூலே, பல சோதிட நூல்களைப் படித்ததைப் போன்று நல்ல அனுபவத்தையும், அறிவையும் தருவதாக இருக்கிறது.
தேங்காய் உடைக்கும் விதம், அத்தேங்காய்த் துண்டுகள் சிதறி உடைந்து விழும் தன்மைக்கேற்பத் தனித்தனியான பலன்கள் உண்டு என்று இந்நூலில் சொல்லப்பட்டிருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. பொதுவாகச் சொல்லப்போனால், சோதிடத்தில் சொல்லாத கருத்துகளே இல்லை என்ற உண்மையையும், சோதிடத்தின் வழியாக, எதிர்கால நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் என்கிற நிலையையும் உணர்த்துவதாக இந்நூல் அமைந்திருக்கிறது.
அரிய தகவல்களைக் கொண்ட இந்த சோதிட நூலை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் நூலாக்கம் செய்து வெளியிட்டிருக்கும் தமிழ் மற்றும் சோதிடப் பேராசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி அவர்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டிச் சிறப்பிக்கலாம்.
சோதிடத்துறையில் உள்ளவர்களும், சோதிடம் கற்றுக் கொள்பவர்களும், கற்க விரும்புபவர்களும் மட்டுமின்றி, அறிவுத் தேடல்களுடையவர்களும், ஆய்வு நோக்கமுடையவர்களும் இந்நூலை வாங்கி வாசித்துப் பார்க்க வேண்டும். பல்வேறு அரிய தகவல்களை அறிந்து கொள்ள முன்வர வேண்டும்.