நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள், அறப்பணியான ஆசிரியப்பணியாற்றி, ஓய்வு பெற்றபின், ஓய்வின்றி கவிதைகள் படைத்து வருகிறார்.மரபுக்கவி மன்னர் பல்வேறு விருதுகளும், பாராட்டுக்களும் பெற்றுள்ளார்.முகநூலிலும் வாசகர்களின் அகநூலிலும் தனிமுத்திரை பதித்து வருகிறார். மரபுக்கவிதை நேசர்களுக்கு மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார். பாராட்டுக்கள்!
தமிழாலே உலகை வெல்வான்!
சங்கத்தால் பெங்களூரு தில்லி மும்பை
சாதனைகள் பலபுரிந்தே நிமிர்ந்தது போல
செங்கதிராய தமிழனென்றும் சிறந்தி ருப்பான்
செந்தமிழைக் காத்திட்டால் உலகை வெல்வான்!
உலகின் முதல்மொழியான தாய்மொழிகளின் தாய்மொழியை, தமிழைக் காத்திட்டால் தமிழன் உலகை வெல்வான் என்ற கூற்று முற்றிலும் உண்மையே!
தமிழினத்தைத் தலைநிமிர வைத்தார்!
தில்லித்தான் தமிழகத்தை இழிவு செய்து
திட்டங்கள் செயல்படுத்த தடையாய் நின்று
நல்லவைகள் நடப்பதினைப் பாழ்ப டுத்தி
நாள்தோறும் செய்கின்ற புறக் கணிப்பை.
தமிழகத்திற்கு, இந்தியாவிற்கு பயன்தரும் சேது சமுத்திரத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு அமுல்படுத்த முடியாமல் தடுத்துவிட்டு, ஹைட்ரோ கார்பன் போன்ற விளைநிலங்களை மலடாக்கும் திட்டங்களை செயல்படுத்தித் தமிழகத்தைப் பாலைவனமாக்கும் எண்ணத்திற்குக் கண்டனத்தை மரபுக் கவிதையின் மூலம் நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.
தமிழ்த்தாயை நிமிரச் செய்வோம்!
வாருங்கள் இளைஞர்கள் ஆங்கி லத்தால்
வழக்கொழிந்து போகாமல் தமிழைக் காப்போம்
சேருங்கள் இளைஞர்கள் உலக மெல்லாம்
செம்மொழியாயப் போற்றுகின்ற தமிழைக் காப்போம்!
தமிழகத்தில் ஆங்கில மோகம் தலைவிரித்து ஆடுகின்றது. தமிங்கிலத்தைத் தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டுப் பரப்பி வருகின்றனர். இளைஞர்களைத் தமிழ் காக்க அழைத்தது சிறப்பு.
இது என்ன தமிழ்மொழியா!
அருந்தமிழில் அம்மாவாம் சொல்லி ருக்க
அதை விடுத்து மம்மி யென்றே அழைக்கச் சொல்வர்
வருகவென அழைப்பதற்குத் தமிழில் நல்ல
வம்மின்னாம் சொல்லிருக்கம் கம்மின் என்பர்!
‘மம்மி’ என்றால் ‘செத்த பிணம்’ என்ற பொருள் தெரியாமலேயே, மம்மி என்று அழைக்கச் சொல்லும் அம்மாக்கள் திருந்திட இந்தப் பாடல் உதவிடும்!
மரபுக்கவிதையே மாத்தமிழைக் காக்கும்!
முகநூலில் நட்புதனை வளர்த்தல் போல
மூத்தமொழி முத்தமிழை வளர்க்க வேண்டும்
அகநூலில் அன்புதனை வளர்க்கும் போதே
அகிலத்தார் மனிதரென்று மதிப்பர் ஏற்பர்!
இன்றைய இளைஞர்கள் முகநூலில் நண்பர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது போல தமிழையும் உயர்த்திட உழைக்க வேண்டுமென்று உணர்த்தியது சிறப்பு. மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.
பாரதி இன்றிருந்தால்!
பெண்ணிற்குச் சுதந்திரத்தைக் கேட்டவன் கண்
பெண்சிசுவைக் கொல்கின்ற காட்சி கண்டால்
கண்ணிரண்டும் தீயாகக் கொதித்தெ ழுந்தே
கள்ளிப்பால் கைகளினைத் தீய்த்த ழிப்பான்.
தினந்தோறும் செய்தித்தாளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. பெண் குழந்தை பிறந்ததும் வீசப்பட்டது. கள்ளிப்பாலுக்கு இரையாக்கிக் கொல்லும் அவலமும் அரங்கேறி வருகின்றது. மகாகவி பாரதியார் இன்று இருந்திருந்தால் பெண் குழந்தைகளைக் கொல்லும் கரங்களைத் தீயிட்டு அழித்திருப்பார் என்பது உண்மையே!
தாய்மொழியில் கல்வி!
எண்ணத்தை நன்றாய் எடுத்தியம்ப தாய்மொழி தான்
பண்ணாய் நமக்குப் பயன்நல்கும் கண்மணியே
தாய்மொழியில் கற்றால்தான் தன்னறிவும் மேலோங்கும்
தோய் தமிழில் கல்வியினைத் தேர்!
அறிவியல் புயல் அப்துல்கலாம் அவர்களின் ஆரம்பக்கல்வி, தாய்மொழி தமிழ்மொழி. சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பிய மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின் ஆரம்பக்கல்வி தமிழ். ஆங்கில மோகம் கொண்ட பெற்றோர்கள் உணர்ந்திட வேண்டும் தமிழின் அருமை பெருமைகளை.
ஏறு தழுவலை வென்றெடுப்போம்!
தமிழினத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு
தமிழ்ப்பண்பின் குறையீடு ஜல்லிக்கட்டு
தமிழர்தம் தொன்மைகுடி ஆயர் தம்மின்
தழைத்தகுல விளையாட்டு ஜல்லிக்கட்டு.
ஜல்லிக்கட்டுக்குத் தடை என்று நீதிமன்றம் சொன்னதும், தமிழகமேக் கொதித்து எழுந்து போராடியது ஏன்? உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள். தடை அதை உடை என்று தடையினைத் தகர்த்து ஜல்லிக்கட்டை நடத்தியது தமிழினத்தின் வெற்றி. தமிழர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்திட்ட பரிசாகும்.
என் முதல் கனவு!
நிமிர்ந்தின்று நிற்கின்றேன் தமிழா சானாய்
நீருலகம் போற்றுகின்ற கவிஞ னாக
அமிழ்தென்றே என்நூலைப் பருகு கின்றார்
அழியாத புகழோடு வாழ்வேன் என்றும்!
இந்தக் கவிதை நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம். பெற்றோர்கள் மருத்துவராக வேண்டுமென்றும் அல்லது பொறியாளராக வேண்டுமென்று விரும்பினர். ஆனால், நான் ஆசிரியரான பின் கவி நூல்கள் படைத்து வென்றுள்ளேன் என்கிறார். உண்மை தான். மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆகியிருந்தால் இச்சாதனைகள் நிகழ்த்தி இருக்க மாட்டார் என்பது உண்மை.
இலவசம் என்னும் வசியம்!
இலவசங்கள் மக்கள்தமை வசியம் செய்தே
இயல்பான வாழ்க்கையினை முடங்கிற் றின்று
இலவசங்கள் உழைக்க வேண்டும் என்ற நெஞ்சுள்
இருந்திட்ட ஆர்வத்தைக் குலைத்த தின்று!
இலவசம் என்ற பெயரில் மக்களை சோம்பேறியாக்கி வரும் அவலத்தை நன்கு சாடி உள்ளார். மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்’ என்ற சீனப்பழமொழியை இன்றைய அரசியல்வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். உழைப்பதற்கு, வேலைக்கு வழிவகை செய்தால் உணவு தானாக உழைத்து உண்பான். உணர்ந்திடுங்கள்.
மரபுக்-கவிதைகளால் அழகிய மாளிகையை எழுப்பி அதில் தமிழன்னையை அமர வைத்து அழகு பார்த்து உள்ளார். நூலை வாங்கிப் படித்து தமிழின் அருமையை பெருமையை அறிந்திடுங்கள்.