பதினெட்டு சிறுகதைகளுடன் படிப்போர் நெஞ்சில் தேன் சொட்டும் வகையில் தேர்ச்சி மிக்க நடையில் எழுதப்பட்டதாக இந்தச் சிறுகதை நூல் அமைந்திருக்கிறது. ‘சிறுகதைகள் என்றால் இப்படி இருக்கணும்’ என்று சொல்லும்படியாகச் சிறப்பான சிறுகதைகளாக அமைந்திருப்பதுடன், நூலாசிரியரின் வாழ்க்கைக் கண்ணோட்டம், உணர்த்த விரும்பும் செய்திகள் என்று நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. பதினெட்டு கதைகளும், பதினெட்டு வகையான கருத்துகளை வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.
முதல் சிறுகதையான ‘அறுவடை’ இந்நூலுக்கான முத்திரைக் கதையாக இருக்கிறது. அதனால்தான், இந்நூலுக்கும் அறுவடை - சிறுகதைகள் என்று தலைப்பிட்டிருக்கிறார் போலிருக்கிறது. வயல், நெல், கதிரறுப்பு என்று வயல் சார்ந்த அனைத்தையும் அறிந்து கொள்வதுடன், வட்டார வழக்கு மொழிப் பயன்பாட்டில் கதையைக் கொண்டு சென்றிருப்பதால் படிப்பதற்கும் இனிமையாக இருக்கிறது.
‘துருவக்கண்ணாடி’ எனும் சிறுகதையில், சாதாரணமாக முடிதிருத்தும் இடமாக இருந்த கடைகள், இன்று ஆண்களை அழகூட்டிக் காண்பிப்பதற்கான பல்வேறு புதிய நுட்பங்களைப் பயன்படுத்தும் இடமாகவும், காத்திருக்கும் வேளையில் படிப்பதற்குப் பல்வேறு இதழ்கள், பார்ப்பதற்குத் தொலைக்காட்சி என்று மாற்றம் கண்டிருப்பதுடன் அழகு நிலையம் என்று பெயர் மாற்றமும் பெற்றிருப்பதைச் சொல்லிக் கொண்டே, சிறு வயதில் முடிதிருத்தச் சென்ற போது ஏற்பட்ட நினைவுகளை அசை போட்டுக் கொள்வதாக அமைந்த சிறுகதை அனைவரது வாழ்விலும் நடந்ததை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
’நவீன சாப விமோசனம்’ என்கிற சிறுகதை புராணங்களில் சொல்லப்பட்ட சில தீர்ப்பைத் திருத்தி எழுதிய தீர்ப்பாய் ஆக்கியிருப்பது நூலாசிரியரின் அறிவுத் திறனை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. நம்மையும் புதிய கோணத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.
’தெய்வ வாக்கு’ எனும் சிறுகதையில் முருகன் என்பவரின் மனைவி, காமாட்சி அருள்வாக்கு சொல்லும் சாமியாரம்மாவாக ஆன சூழலும், ஆணாதிக்கத்திற்கு ஆப்பு வைக்க, அவர் அந்த அருள் வாக்கைப் பயன்படுத்தும் சாமார்த்தியமும் சிரிக்க வைக்கிறது. இக்கதையில் நூலாசிரியரின் நகைச்சுவை உணர்வை நாமும் ரசிக்க முடிகிறது.
விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வார்கள். அவ்விதியை நல்ல தூய அன்பு உள்ளத்தாலும் வெல்ல முடியும் என்பதை உணர்த்தும் வகையில், தாய்மையின் உணர்வைச் சொல்லும் ’ஓர் உன்னதம்’ எனும் சிறுகதை அருமையாக இருக்கிறது.
சிறுகதையின் முடிவைச் சொல்லாமலே, வாசிப்பவர் தெரிந்து கொள்ள வேண்டும், அதுதான் நல்ல சிறுகதை என்கிற எண்ணத்தில் சிறுகதை எழுதுபவர்கள் கதையினை அரைகுறையாக முடிப்பதும், அது புரியாவிட்டாலும், ஆஹா, ஓஹோ என்று சில வாசகர்கள் புகழ்வதுமாகச் சிறுகதைகள் மாற்றம் கண்டதால், இன்று பலருக்கும் சிறுகதைகளைப் படிக்கவே ஆர்வமில்லாமல் போய்விட்டது. இந்தச் சூழலில், மிக எளிமையாக, அனைவரும் வாசிக்கும் வகையில் சிறுகதைகளை நூலாசிரியர் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தச் சிறுகதை நூலை அனைவரும் வாங்கிப் படிக்கலாம்... பாராட்டலாம்...!