"பெருக்கெடுத்தோடும்
நீருக்கடியில்
என் பழைய நினைவுகள்"
- இக்கவிதை இத்தொகுப்பில் உள்ள ஒரு கவிதை மட்டுமல்ல, இத்தொகுப்பைப் பற்றி கட்டியம் கூறும் நட்சத்திர வார்த்தைகள்.
நூலாசிரியர் வதிலை பிரபா என் கால் நூற்றாண்டு கால நண்பர். 'மகாகவி' மாத இதழை நெடுங்காலமாக நடத்தி வருகிறார். அவரது இதழில் வெளிவந்த என் கவிதைகள் ஏராளம். வழிநெடுக துயரங்கள் கண்ட போதிலும் மற்றவர்களுக்குப் புன்னகையையும், தன்னம்பிக்கையையும் பரிசளிப்பதே அவரின் வழக்கமாக இருந்திருக்கிறது.
வத்தலக்குண்டில் வசித்துக் கொண்டு, உலகத்தமிழர்களோடு உலா வந்துகொண்டிருக்கும் உன்னத மனிதர். தமிழகத்தின் அத்தனை பிரபலங்களும் அவர் நட்பில்... ஓர் அரசியல்வாதிக்கு நிகராகத் தன்னை இலக்கியத்துறையில் பரபரப்பாய் வைத்துக் கொள்வதென்பது சாதாரண விசயமல்ல, அர்ப்பணிப்பு.
சமீப காலமாக அவரின் 'ஓவியா' பதிப்பகத்தின் வெளியீடுகள் ஷங்கர் படங்கள் போன்று பிரமாண்டமாக இருக்கின்றன. நூலின் அட்டை என்பது ஓர் ஆளின் சட்டை போன்றதாகும். அந்தப் பணியை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். இலக்கிய வெளியீடுகளை அழகியல் தோய்த்து அளித்துக் கொண்டிருப்பதைச் சிறந்த தமிழ்ப்பணியாகவேப் பார்க்கிறேன்.
இப்போது "மிடறு மிடறாய் மௌனம்" என அவரின் நூலைக் கொண்டு வந்திருக்கிறார். காகிதம் முழுக்கக் காதல் வழிகிறது. காதலைச் சொல்ல, மௌனம் சிறந்த மொழி. பேசாத உதட்டை நூலின் முகப்பில் பதித்து நம்மை உருகச் செய்கிறார்.
"ஓர்
இலை உதிர்வது மாதிரி
உதிர்த்துவிட்டுச் சென்றாய்
உன் மௌனத்தை"
மௌனத்தை உதிர்த்தலே, சப்தமற்ற விசயம்தான், அதிலும் 'இலை உதிர்வது மாதிரி' என்று கூறுகிறார். இலை உதிர்வது என்பது பூனை நடப்பது போன்று மென்மையான அழகாகும். இப்படி மௌனத்தையும் பாதியாக உடைக்கிற பிரபாவின் காதல் உயர்வானது.
நீரின் மௌனம் பனிக்கட்டி. உயிரின் மௌனம் பிணம். நீர் மௌனம் உடைக்கும் என்பது எதார்த்தம். ஆனால், உயிர் மௌனம் உடைத்தல் என்பது காதலில் மட்டுமே சாத்தியம். செத்துப் பிழைத்தல் ஆச்சே! மௌனம் காதலை வளர்க்கும். மௌனம் பைத்தியங்களை உருவாக்கும். ஏதோ ஒரு பொருள் மீது பைதத்தியம் பிடித்து அலைதலே சிறந்த வாழ்வெனப்படுகிறது.
"ஒவ்வொரு முறையும்
உன் மௌனத்திலிருந்துதான்
எனக்கான சொற்களை
எடுத்துக் கொள்கிறேன்"
அழகான முரண். மௌனம் கேள்விக் குறிகளின் வேடந்தாங்கல். அங்கே சொற்களின் ஊற்று உறைந்து கிடக்கிறது. இரவு குளத்திலிருந்து நிலவின் பிரதி ஒன்றை எடுத்து வருவது மாதிரி இருக்கிறது, வதிலை பிரபா தன் காதலியின் மௌனத்திலிருந்து தனக்கான சொற்களை எடுத்துக் கொள்வது.
"விளக்கை
பற்ற வைப்பது போன்று
பற்ற வைக்கிறாள்
மௌனத்தை"
இப்படி ஒரு கவிதையை எழுத கவிஞர் ஆறுமாத காலம் யாரோடும் பேசாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது ஆறுமாத காலம் அவரின் காதலி இவரோடு பேசாமல் இருந்திருக்க வேண்டும். இங்கே விளக்கின் சூடு என்பது மனம் எரிந்து சாம்பலாகிற வரையிலானதாகும்.
நூலெங்கிலும் கவிதைகள் மனதைப் பதைக்க வைக்கின்றன. ஒரு படைப்பின் விமர்சன உரையில் மிகுதியாக பேசிவிட எந்தக் கட்டுப்பாடும் எனக்கு நேர்வதில்லை. அவசியமும் இல்லை. அந்த வகையில், இந்நூலின் வாசல் நின்றே பேசியிருக்கிறேன். இந்நூலை அவசரகதியில் வாசிப்பவரால் ஆழத்தை அறிந்து விட முடியாது. ஆழ்ந்து வாசித்தல் அவசியமாகிறது. மிடறு மிடறாய் நம் நெஞ்சத்தைக் குடிக்கின்றன கவிதைகள்.
வதிலை பிரபாவின் மௌனக் கவிதைகள் எல்லாரையும் பேச வைத்திருக்கின்றன. அவருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!