தமிழகத்தில் ‘நாயக்கர் ஆட்சி’ காலத்தில், விசுவநாத நாயக்கர், தென் தமிழகத்தில், தனக்குக் கீழான நிலப்பகுதிகளை நிருவகிக்கப் பாளையங்களை உருவாக்கி, அவற்றின் ஆட்சியாளர்களாக, ‘பாளையக்காரர்’களை முதன்மைப் பொறுப்பில் நியமித்தார். இந்தப் பாளையக்காரர்கள், பெரும்பான்மையாக நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். சில பாளையக்காரர்கள் மட்டுமே பிற சமூகத்தினராக இருந்தனர். பிற்காலத்தில், ஆங்கிலேயர்கள் அவர்களை ‘நிலத்தை ஆளுபவர்கள்’ என்று பொருள் தரும் ‘ஜமீன்தார்கள்’ என்று பெயர் மாற்றம் செய்தனர். விசுவநாத நாயக்கரின் கீழாகச் செயல்பட்டு வந்த 72 பாளையக்காரர்களும், ஜமீன்தாரர்களாகப் பெயர் மாற்றம் பெற்றனர்.
விசுவநாத நாயக்கரின் கீழாகச் செயல்பட்டு வந்த 72 ஜமீன்தாரர்களைத் தவிர்த்து, சில அறியப்படாத ஜமீன்தாரர்களும் அக்காலத்தில் இருந்திருக்கின்றனர் என்பது உண்மையில் வியப்பாக இருக்கிறது. பெரிதும் அறியப்படாத ஜமீன்களில், தற்போதைய தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் அமைந்திருந்த ‘நட்டாத்தி ஜமீன்’ மற்றும் ‘சாத்தான்குளம் ஜமீன்’ என்று இரு ஜமீன்கள் அமைந்திருக்கின்றன. நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரால் ஆட்சி செய்யப்பெற்ற ‘நட்டாத்தி ஜமீன்’, பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரால் ஆட்சி செய்யப்பெற்ற ‘சாத்தான்குளம் ஜமீன்’என்கிற இரு ஜமீன்களைப் பற்றி முழுமையாகச் சொல்லும் நூலாக,‘தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு’ எனும் நூல் அமைந்திருக்கிறது. ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போல், நமக்கு ஒரு நூலில் இரண்டு ஜமீன்களின் வரலாறு கிடைக்கிறது.
நட்டாத்தி ஜமீன்தாரரும், சாத்தான்குளம் ஜமீன்தாரரும் தங்கள் ஆட்சிப்பகுதியில் இருக்கும் மக்கள் நலனைக் காக்கப் பல்வேறு பணிகளைச் செய்திருக்கின்றனர். அவர்கள் செய்த பணிகளில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்கிற வள்ளுவரின் வாக்குக்கேற்ப இரு ஜமீன் பகுதிகளிலும் நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளில் பல குளங்களை வெட்டிப் பாசனப் பகுதிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. அன்றைய ஆட்சியாளர்கள், நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டிருப்பது, உண்மையில் பாராட்டுக்குரியது.
ஆட்சியிலிருப்பவர்களுக்கு மண்ணாசையும் பெண்ணாசையும் அதிகமிருக்கும் என்பார்கள். ஜமீன்தாரர்களுக்கும் பெண்ணாசை இருந்திருக்கிறது. தேனி மாவட்டத்தில், கண்டமனூர் ஜமீன்தாரராக இருந்த கண்டம கெண்டம ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர், நாட்டியக்காரி ஜனகம் என்பவரிடம் கொண்டிருந்த ஆசையைப் போலவே, நட்டாத்தி ஜமீன்தாரர் திருவழுதி வைகுந்த நாடனும் நாட்டியக்காரி ஜானகி என்பவரிடமும், சாத்தான்குளம் ஜமீன்தாரர் பாப்பம்மாள் என்பவரிடமும் ஆசை கொண்டு அவர்கள் பின்னால் சென்றிருக்கின்றனர். காவியங்களிலும், கதைகளிலும் காதலைப் படித்து மகிழும் மக்கள், திரைப்படங்களில் வரும் காதலை ரசிக்கும் மக்கள், உண்மையில் காதலை மகிழ்ந்து ஏற்பதில்லை என்கிற இன்றைய நிலையினை, சாத்தான்குளம் ஜமீன்தாரர், பாப்பம்மாள் என்பவரின் மேல் கொண்டிருந்த காதலில் அன்றே நிகழ்ந்துள்ளது என்பதைப் படிக்கும் போது வியப்பாக இருந்தது. இருப்பினும், ஜமீனின் காதலும், அதற்கான முடிவும் படித்த போது நெஞ்சம் கலங்குகிறது.
இவ்விரு ஜமீன்களின் வரலாற்றைக் கிளைக்கதைகளுடனும், பல ஒளிப்படச் சான்றுகளுடனும், சிறந்த நாவலைப் போன்றும், இரு காப்பியங்களாக விறுவிறுப்பாகத் தந்திருக்கும் நூலாசிரியரை, இரு ஜமீன்களின் வாரிசுதாரர்கள் மட்டுமல்லாமல், இந்நூலைப் படிப்பவர்கள் அனைவரும் மகிழ்ந்து நெகிழ்ந்து பாராட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை. தேரிக்காட்டில் அமைந்த இரு ஜமீன்களின் அழிந்த வரலாற்றை, அழியாத கோலங்களாய்ப் படைத்திருக்கும் நூலாசிரியரை ஊக்குவிக்க, இந்நூலைப் பலரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.