“எல்லாம் நமதே; எப்போதும் நமதே” எனும் நினைப்பில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்க, தனது வாழ்க்கையை ‘ஒவ்வொரு கணமும்’ நினைத்துப் பார்த்து வாழ்பவர்கள் மிகச் சிலரே...! அவர்களுள் ஒருவராக சுகதேவ், இன்றைய சமூகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு செயல்களை விவரித்தும், விமர்சித்தும் பல கவிதைகளை எழுதி, ‘ஒவ்வொரு கணமும்’ எனும் தலைப்பில் நூலாக்கம் செய்திருக்கிறார். தமிழ் இதழியல் பரப்பில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டுரைகள், இலக்கிய நேர்காணல்கள் வழியாக அறியப்பட்ட சுகதேவ், இந்தக் கவிதைத் தொகுப்பின் வழியாகக் கவிஞராகவும் புதுத்தோற்றம் பெற்றிருக்கிறார்.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும், ‘இன்பம்’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை இது.
“கடலை மிட்டாய்
கருத்துச் சுதந்திரம்
கடித்துச் சுவைக்க சுவைக்க
இரண்டுமே இன்பம்”
கருத்துச் சுதந்திரத்தைக் கடலை மிட்டாயுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் கவிஞர், சாலையோரங்களில் நடந்து செல்ல முடிவதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார். உண்மைதான், உள்ளூரில் உலா வரும் வாகனங்களில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்க, அதன் வழியாகச் சந்திக்கும் சாலை விபத்துகளுக்கும் குறைவில்லை. சாலையில் அவ்வப்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக விரைந்து கொண்டேதான் இருக்கின்றன. இதையெல்லாம் கவனித்த கவிஞர்,
“அந்த ஆம்புலன்ஸ்
கடக்கும் போது
அவன்
சிவாயநம சொல்கிறான்
சாலையோரம்
மரண பயத்தின்
நடமாட்டம் அதிகம்”
என்கிறார். கடந்து செல்லும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுபவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவன் ‘சிவாயநம’ என்று உச்சரிக்கின்றானா? இல்லை, சாலையோரம் நடந்து செல்லும் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ‘சிவாயநம’ என்று உச்சரிக்கின்றானா? என்று இந்தக் கவிதையின் வழியாக நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.
தற்போதெல்லாம் தமிழ்நாட்டில் போராட்டங்களுக்குப் பஞ்சமில்லை. எதையாவது ஒன்றை முன் வைத்துப் போராட்டங்கள் நடத்தப் பெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களெல்லாம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுகின்றதோ இல்லையோ, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவே அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் பார்த்த கவிஞர், நம்மை ‘பார்’ என்று அறிவுறுத்துகிறார். எப்படி?
“என்ன
எதற்கெடுத்தாலும்
போராட்டம்
போ... போ... போய்
தேரோட்டம் பார்”
என்கிறார். போராட்டங்களைக் கைவிட்டுக் கோயில்களில் நடத்தப்பெறும் தேரோட்டங்களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிறார். ஆண்டு முழுவதும் கோயிலுக்குள் சென்று பார்த்து வந்த இறைவன், ஆண்டுக்கொரு முறையாவது அவர்களைத் தேடிக் கோயிலை விட்டு வெளியில், ஊரைச் சுற்றித் தேரில் வலம் வந்து மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறார். இறைவனே, நம்மைத் தேடி வருகிறான் என்று மனம் ஆனந்தம் கொள்கிறது. இறைவன் மீதான நம்பிக்கையும் அதிகமாகிறது. ஆண்டவன் வெளியில் வருவது போல், ஆண்டு கொண்டிருப்பவர்களும், தாங்களிருக்கும் இடத்தை விட்டுச் சிறிது கீழிறங்கி வந்து மக்களைச் சந்தித்தாலே போதும்... பல்வேறு போராட்டங்கள் தேவையில்லாமல் போய்விடும் என்கிற உட்கருத்தை மிக எளிமையாகச் சொல்லிவிட்டார்.
எந்தவொரு விலங்கினங்களையும் துன்புறுத்தக் கூடாது என்கிற சட்டம் கடுமையாக்கப்பட்டுவிட்டதால், தெருக்களில் திரியும் நாய்களின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன. தெரு நாய்களைக் கட்டுக்குள் வைத்திருந்த உள்ளாட்சி அமைப்புகள், தற்போது இதனைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன. இதனால், பல இடங்களில் தெரு நாய்களால் மக்களுக்கான தொல்லையும் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிலையை எப்படிச் சொல்வது? என்பதை மறைமுகமாகத் தனது ‘யார் துரத்துவது?’ எனும் கவிதையின் வழியாகச் சொல்கிறார்;
“முன்னிரவில் வீடு திரும்புவதற்கே
அச்சமாக இருக்கிறது
வீதிகளில்
நிறைய நாய்கள் திரிகின்றன
எனக்கும் அந்த நாய்களுக்கும்
முன்பகை இல்லை
பெரிதும் அமைதி காத்துதான்
என்னைக் கடக்க விடுகின்றன
எப்போதாவது குரைக்கின்றன
என் தோற்றத்தைப் பார்த்தோ
தோளில் தொங்கும் பை பார்த்தோ
அப்படிக் குரைப்பதும்
என்பொருடா என்றும்
உறுதியாகத் தெரியவில்லை
ஆனாலும் அச்சத்துடனே
வேகமாக நடக்கிறேன்
இப்படித்தான்
இல்லாத அச்சம்
வாழ்க்கை நெடுகிலும்
நம்மைத் துரத்துகிறது”
இதன் மூலம் வாழ்க்கையிலும் சில தெருநாய்களால், நமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படலாம், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் வாழ்க்கையில் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவில் வழிகாட்டுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.
மனிதன், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவைத் தேடி உழைத்துக் கொண்டிருக்கிறான். அந்த உழைப்பைச் சுரண்டிப் பலர் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பிழைப்பில் அவர்களுக்கு உணவை விடப் பணம் எனும் காகிதமே மேலானதாக இருக்கிறது. காகிதக் கட்டுகளைச் சேர்க்க விரும்பும் அவர்களிடம் மனிதர்களுக்குத் தேவையான எதையும் காண முடிவதில்லை. அந்தக் காகிதங்களைச் சேர்ப்பதில் அவர்களுக்கு அரசியல்வாதிகளேப் பெருந்துணையாக இருப்பதால், ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக நிறைந்து கிடக்கின்றன. இதனால், ஓரிடத்தில் உணவு மிகுதியும், மற்றொரு இடத்தில் உணவுப் பற்றாக்குறையும் இருந்து கொண்டேயிருக்கின்றன. இதனை நீக்க, ஒரு வேளை உணவாவது முழுமையாகக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பதை ‘உணவும் உணர்வும்’ எனும் கவிதை வெளிப்படுத்துகிறது. அந்தக் கவிதை;
“அடுத்த வேளை உணவின்றி
எண்ணற்றோர்
போதுமான உணவின்றி
எண்ணற்றோர்
உரிய உணவின்றி
எண்ணற்றோர்
கிடைத்தை உண்போர்
எண்ணற்றோர்
அவர்களிடம்
உணவு நெறிமுறைகளை
திணிப்பது
எந்த அண்ட நியாயம்?
குறைந்தபட்சம்
ஒரு வேளையாவது
அவர்களுக்கு வழங்குங்கள்
தேவாமிர்தம்”
நெகிழிப்பைகளின் வரவால் காகிதப் பைகளும், துணிப்பைகளும் காணாமல் போய்விட்டன. மஞ்சள் நிறத்திலான துணிப்பை பயன்பாடு முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது. அதனால், மஞ்சள் பை வைத்திருப்பது ஏழ்மையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. நெகிழிப்பைக்கு அழிவில்லை என்பதால் அது சாலை, நீர்நிலை, செடிகொடிகள் என்று புவியின் மேற்பரப்பிலிருந்த அனைத்தையும் ஆக்கிரமித்தது. அது புவியினுள்ளேப் புதைந்து போனாலும் நீர் சேமிப்பிற்கு அச்சுறுத்தலாகிப் போனது. அதனைத் தொடர்ந்து அரசு, நெகிழிப்பையை மட்டுமின்றி நெகிழிப் பயன்பாட்டையே முற்றிலுமாகத் தடுத்தது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் காகிதப் பைகளும், துணிப்பைகளும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இன்று மஞ்சப்பை இயற்கையின் நண்பணாக மீண்டும் அனைவரது கையிலும் இருப்பதைப் பார்த்த கவிஞர்;
“மஞ்சப்பை
கடைக்கோடி மனிதர்களின்
அடையாளமாக
ஏழ்மையின் சித்திரமாக
இயலாமையின் முன்னறிவிப்பாக
பார்க்கப்பட்டது
அதுபோன்ற துணிப்பைகளுடன்
நடமாடியவர்களை
கேலிக்கும் கேள்விக்கும்
உள்ளாக்கியது சமூகம்
இன்று,
எல்லோர் கைகளில்
துணிப்பை
மஞ்சப்பை 2.0
இயற்கை நின்று நிகழ்த்தும்”
என்று இயற்கையின் தேவையை உணர்ந்து கொள்ளச் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேலையில்லாமலிருக்கும் மகன்களைப் பெற்றோர்கள், மகன்களை ஒன்றுக்கும் உதவாதவனாகவே நினைக்கின்றனர். அவர்களை நாயை விடக் கீழானவர்களாகவேக் கருதுகின்றனர். அதனைப் பெற்றோர்களின் புலம்பல்கள் உறுதிப்படுத்துகின்றன என்பதைக் கவிஞர் தனது ‘அவதூறு’ கவிதையின் மூலம்
“அந்த நாய்
எப்போதும் இப்படித்தான்
குமுறினார் நண்பர்
வீட்டில் வளர்க்கிறீர்களா என்றேன்
பெற்றுத் தொலைத்தேன் என்றார்
மனம் வலித்தது
இல்லாத வீடுகளில் கூட
நாய்களின் பெயரால்
நடத்தப்படும்
அவதூறுகளை நினைத்து”
வருத்தப்பட்டிருக்கிறார். இந்த வருத்தம் அவரது பார்வையில் சரியாகத் தோன்றினாலும், மகன் விரும்பியபடியெல்லாம் படிக்க வைத்த பெற்றோர், அந்தப் படிப்பெல்லாம் வீணாகப் போய்விடுமோ என்கிற அச்சத்திலிருப்பதையும், மகனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்கிற வருத்தத்திலிருப்பதையும் கவிஞர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர்ப்பரப்பாக இருக்கும் கடலின் பெரும்பகுதியைக் அதன் கரைகளே அடையாளப்படுத்துகின்றன என்று ‘இங்கே நின்று பார்’ எனும் கவிதை மூலம் நம்மைப் பார்க்கச் சொல்கிறார்.
“கடலின்
பிரம்மாண்டத்தை
பிரகடனம் செய்கிறது
கரை”
கடலின் பெரும்பகுதி பிரம்மாண்டமாக இருந்த போதிலும், அதிலிருந்து ஆர்ப்பரித்து எழும் அலைகள் பெரும் வேகத்துடன் புதிய இடத்தைத் தேடி வரும் போது, அவற்றைக் கரைகளே அமைதிப்படுத்தி மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பி வைக்கின்றன. மனித வாழ்வில் அவ்வப்போது எழும் துயரங்கள் மனதை வருத்திக் கவலைக்குள்ளாக்கும் போது, அவர்களுக்கு மன ஆறுதல் தருமிடங்களாக இந்தக் கடலும் கரையும்தான் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
காலமாற்றம் பல வரலாறுகளை மாற்றிப் போட்டிருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், காலச்சுழற்சியில் அனைத்தும் மாறிப்போய்விடுகிறது. இதனை நம் கவனத்திற்குக் கொண்டு வரும் கவிஞர்,
“காலம்
நிழலற்றது
யாரும்
ஒதுங்கமுடியாது”
என்று சொல்லி, வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.
‘ஒவ்வொரு கணமும்’எனும் தலைப்பிலான இந்நூல் கட்டுரையாளரான சுகதேவை, ஒவ்வொரு கணமும் நம் முன் கவிஞராகவும் நினைவில் கொண்டு வரும் என்பது மட்டும் உண்மை.