சைவ சமய ஆச்சாரியர்களால் பாடல் பெற்ற இருநூற்றெழுபத்து நான்கு சிவத்தலங்களுள் ஒன்றாக விளங்கும் ‘திருஅச்சிறுப்பாக்கம் திருத்தலம்’ பழம்பெருமை வாய்ந்த தனிச்சிறப்பு பெற்ற திருத்தலமாகும்.
வள்ளலார் காலத்தில் வாழ்ந்த திருஅச்சிறுப்பாக்க்கம், “ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள்” என்பவர் இத்திருத்தல இறைவன் ஸ்ரீ உமையாட்சீஸ்வரர் மற்றும் இறைவி இளங்கிளி நாயகி ஆகியோர் பற்றிய பாடல்கள் அனைத்தும், “ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகள்” எனும் நூலாக அச்சில் வெளியாகி இருக்கிறது. அந்நூலினைச் சுவாமிகளின் மரபு வழியினர் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். சுவாமிகளின் மரபு வழியில் வந்த ப. திருநாவுக்கரசு என்பவரின் மகளான நூலாசிரியர் முனைவர் தி. கல்பனாதேவி அவர்கள், சுவாமிகளின் மூலப்பாடல்களுக்கு விளக்கம் தரும் வகையில் இந்த நூலினைப் படைத்திருக்கிறார்.
பல நூல்களை ஆழ்ந்து படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கும் இந்நூலாசிரியர், சுவாமிகளின் பாமாலைப் பாடல்களைப் படித்து, அதனைப் பிரித்து, விரித்து எழுதியிருக்கும் உரைநடையில் தந்துள்ள பொருள் விளக்கங்களில் மூலப்பாடல்களின் உயிர் நீங்காது அப்படியே இருப்பதைக் காண முடிகிறது. இந்த எழுத்து வலிமையினை, நன்கு தேர்ந்த புலமையும், இறையருளும் பெற்றவர்களிடம் மட்டுமே காணமுடியும்.
அன்பு - பேரன்பாகவும், இன்பம் - பேரின்பமாகவும் பெருகி நிற்பது போல் சுவாமிகளின் விருத்தப் பாடல்களும் எளிமையாகத்தான் இருக்கின்றன. அதற்கு, நூலாசிரியர் எழுதியிருக்கும் உரை மேலும் எளிமையாகப் புரிந்து கொண்டு, இன்புற வைக்கும் இயல்புடையதாக அமைந்திருக்கிறது. இது இந்நூலின் தனிச்சிறப்பாக இருக்கிறது.
ஸ்ரீ ஆட்சீஸ்வரர் அருள்குறி மாலை, ஸ்ரீ இளங்கிளி அம்மையார் அருள்குறி மாலை. ஸ்ரீ ஆட்சீஸ்வரர் அருளிரந்தமாலை, அருமருந்திரந்த மாலை, சீரரந்த மாலை என்று ஒரு நூலுக்குள் ஐந்து நூல்களை உள்ளடக்கித் தந்திருப்பது இந்நூலை பெரிய நூலாகக் காண்பிக்கிறது. இதனை ஐந்து நூல்களாகத் தனித்தனியாகத் தந்திருந்தால் படிப்பதற்கு மலைப்பு தோன்றாமல் இருந்திருக்கும். ஆனால், இந்நூல் பெரியதாக இருந்த போதிலும் படிக்கத் தொடங்கியவுடன், அதில் மனமொன்றிப் போவதால் நம் கவலைகளெல்லாம் காணாமல் போய்விடுகின்றன.
எவ்வுயிரும் நீயே! நிலைத்த பொருளே!! என்று இறைவன் - இறைவியைப் பாடும் சுவாமிகளின் பாமாலைகளில் காட்டப்படும் உவமைகள், உருவகங்கள், சொல்லாட்சிகள் போன்றவை களிப்பூட்டுவதாக இருக்கின்றன. இந்த உலகத்தையும், அதில் வாழும் உயிரினங்களையும் படைத்தவர் இறைவன். ‘நம்மைப் படைத்த இறைவனிடம், நம்மை ஒப்படைத்து விட வேண்டும்’ என்கிற சரணாகதித் தத்துவத்தை முன்னிறுத்தும் சுவாமிகளின் விருத்தப்பாக்கள் படிக்க மட்டுமல்ல, வாழும் வாழ்க்கையில் அதனைப் பின்பற்றி நடந்திட வேண்டுமென்பதனை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளின் அருமையை முதன் முதலில் பரிமேலழகர் தந்த உரை, தமிழ் மொழியின் பெருமையினை உலகறியச் செய்தது போன்று, ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் அருளிய திருப்பாமாலைகளுக்கு முதன் முதலில் உரையெழுதி, அதன் அருமையை வெளிக்கொண்டு வந்திருக்கும் நூலாசிரியரை மனதாரப் பாராட்டுகிறேன். இந்து சமய ஆன்மிக நூல்கள் பல இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் தனிச்சுவையுடன் இருக்கும். அந்த வகையில், இந்நூலும் தனித்தன்மையுடன், தனிச்சுவையுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்து சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள் இருக்கும் காலம் வரை, ‘ஸ்ரீ நித்த சுத்தானந்த சுவாமிகள் இயற்றிய திருப்பாமாலைகள்’ மட்டுமின்றி, இப்பாமாலைகளுக்கு உரை எழுதிய நூலாசிரியரையும் நினைவில் கொள்ளும் வகையில் இந்நூல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்நூலினை ஆன்மிக அன்பர்கள் மட்டுமின்றி, கவிஞர்கள், புலவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என்று அனைவரும் வாங்கிப் படிக்கலாம்.