தமிழ் மொழி இலக்கியங்களில் பக்தி இலக்கியத்துக்கென்று தனிச் சிறப்பிடம் உண்டு. சைவம், வைணவம் என்று இரு பெரும் சமயப் பிரிவுகளில் சில நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனைப் போற்றித் தமிழில் பல்வேறு இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இந்த இலக்கியங்களின் துணையால் சமண, பௌத்த சமயங்களைத் தோல்வியடையச் செய்தனர் என்றும் சொல்வதுண்டு. கி.பி 7 முதல் கி.பி 9 ஆம் நூற்றாண்டுகளில் பெருமளவில் படைக்கப்பெற்ற பக்தி இலக்கியங்களைப் பற்றிப் பலரும் பல்வேறு வழிகளில் ஆய்வு செய்திருக்கின்றனர். அந்த வழியில் இந்நூலாசிரியரும் பக்தி இலக்கியத்தில் செய்த ஆய்வுக் கட்டுரைகளை ‘பன்முக நோக்கில் பக்தி இலக்கியச் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் நூலாக்கம் செய்து தந்திருக்கிறார்.
இந்நூலாசிரியர் அன்பு மிகுதியினாலோ என்னவோ, தனக்குத் தெரிந்த நான்கு தமிழறிஞர்களிடம் இந்நூலுக்கு அணிந்துரை பெற்று இருக்கிறார். இவைகளைத் தவிர்த்து, ஒருவரிடம் வாழ்த்துரையும், மற்றொருவரிடம் கருத்துரையும் பெற்றிருக்கிறார். அதிகமான வாழ்த்துரைகள் இடம் பெற்ற சில நூல்களை இதற்கு முன்பாகப் பார்த்திருக்கிறேன். நான்கு அணிந்துரைகள் இடம் பெற்ற நூலினை இப்போதுதான் பார்க்கிறேன். இந்த ஆறு உரைகளுடன் நூலாசிரியரின் என்னுரையும் சேர்ந்து ஏழு உரைகள் இடம் பெற்றிருக்கின்றன. நூலாசிரியர் தமிழ்ப் பேராசிரியராக மட்டுமில்லாமால், ஜோதிடப் பேராசிரியராகவும் இருப்பதால் ஏழு உரைகள் இடம் பெற்றிருப்பதற்கு ஏதாவது ஜோதிட வழியிலான காரணங்கள் இருக்கலாம்... என்று நம்புவோம்.
இந்நூலில் 1. திருவாசகத்துள் இயற்கை, 2. திருமந்திரத்தில் நால் வகை நெறிகள், 3. அருணகிரிநாதர் போற்றும் முருகன், 4. தேவாரத்தினுள் இறைமைக் கோட்பாடுகள், 5. தேவாரத்தில் இயற்கைப் புனைவு, 6. சமயங்களும் அடையாள உருவாக்கங்களும், 7. திருமுறைகளில் பிறவி பற்றிய சிந்தனை, 8. வைணவ சித்தாந்தமும் இன்றைய நிலையில் அதன் தேவையும், திருமாலின் இயல்புகளும், 9. சம்பந்தர் தேவாரத்தினுள் ஆன்மிகச் செய்திகள், 10, காரைக்கால் அம்மையார் போற்றும் இறைவனின் இயல்புகள் எனும் பத்து கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
திருவாசகத்துள் இயற்கை எனும் தலைப்பிலான கட்டுரையில், இறைவன் இயற்கையின் வடிவில் நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்வெளி எனும் ஐந்து பூதங்களுடன், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எண்வகை இயல்பினையுடையவனாக இருப்பதை திருவாசகத்தில் இடம் பெற்ற பாடல்களைக் கொண்டு விளக்கி, இறைவனை ‘அட்டமூர்த்தி அழகன்’ என்று அழைப்பதற்கான விளக்கத்தையும் நூலாசிரியர் தெளிவாகத் தந்திருக்கிறார். இதே போல், திருவாசகத்தில் குறிப்பிட்டுள்ள இறைவனின் இயல்புகளையும், இறைவனது அடியார் நிலைகளையும் மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும், திருவாசகத்தில் சொல்லப்பட்டிருக்கும் புலன்களை அழிக்கும் சிற்றின்பங்களை யானை, குறுந்தூறு (சிறு செடிகள்), எறும்பிடை நாங்கூழ்ப்புழு, கடல் சுறா, கடலில் நீர்ச்சுழி, இருதலைக் கொள்ளி போன்றவைகளின் தன்மைகளைச் சொல்லி, அதனால் ஏற்படும் விளைவுகளை நமக்கு மிக எளிமையாக நூலாசிரியர்கள் விளக்கிவிடுகிறார்.
சமயங்களும் அடையாள உருவாக்கங்களும் எனும் தலைப்பிலான கட்டுரையில், விபூதியின் சிறப்புகள், வகைகள், தயாரிக்கும் முறைகள், பெருமைகள் போன்றவைகளைச் சிறப்பாக விளக்கியிருக்கிறார். இதே போன்று, திருமண் பெருமையையும் அருமையாகத் தந்திருக்கிறார். இங்கு பத்ரகாளியின் படைக்கலக் கருவிகளாக பதினெட்டு கருவிகளைக் குறிப்பிட்டு, அதற்கான விளக்கங்களையும் அளித்திருக்கிறார்.
திருமுறைகளில் பிறவி சிந்தனை எனும் தலைப்பிலான கட்டுரையில், திருமுறைகளில் இடம் பெற்றிருக்கும் இறைவன் தோற்றங்கள் பற்றியும், பிறவி பற்றிய பரிணாமச் செய்திகள் பற்றியும் சொல்லிப் பின்பகுதியில், அகத்தியர் பூசாவிதி 200, தீட்சாவிதி 200 எனும் நூல்களிலிருந்து 1. அண்டசம் - முட்டையிற் தோன்றுவன, 2. சுவேதசம் - வியர்வையில் தோன்றுவன, 3. உற்பிச்சம் -வித்து, வேர்க்கிழங்கு போன்றவைகளை மேல் பிளந்து தோன்றுவன, 4. சராயுசம் - கருப்பையில் தோன்றுவன என்று நான்கு வகைத் தோற்றங்கள் பற்றிய செய்திகளும், 1. தேவர், 2. மனிதர், 3. விலங்கு, 4. பறவை, 5. ஊர்வன, 6. நீர் வாழ்வன, 7. தாவரம் எனும் எழுவகைப் பிறப்புகள் பற்றிய செய்திகளும், நூறாயிர யோனி பேதங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் போன்றவைகளை எடுத்துத் தந்திருப்பது சிறப்பாக இருக்கிறது.
இதே போன்று, அருணகிரிநாதர் போற்றும் முருகப்பெருமானின் இயல்புகள் மற்றும் சிறப்புகள், யுகங்கள் தோறும் திருமால் எடுக்கும் அவதாரங்கள் பற்றிய செய்திகள், பக்தி இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் காரைக்காலம்மையார் குறிப்பிடும் இறைவனின் இயல்புகள் போன்றவைகளை விளக்கும் கட்டுரைகளும் நூலாசிரியரின் ஆன்மிகத் தேடலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
தமிழில் பக்தி இலக்கியங்கள் படிக்கும் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பக்தி இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கும் இந்நூல் பயனுடையதாக இருக்கும்.