சோதிடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சொற்களுக்கு இந்நூலில் சிறப்பான விளக்கம் தரப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இச்சொற்கள் இடம் பெற்றிருந்தால், அது குறித்த தகவல் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன. இச்சொற்கள் அனைத்தும் தமிழ் எழுத்துக்களின் அகரமுதலி வரிசைப்படி, அமைக்கப்பட்டிருப்பதால், நாம் தேட நினைக்கும் சொல்லை எளிதில் கண்டறிந்து, அதற்கான முழு விளக்கத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இங்கு கணித வகை எனும் சொல்லுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விளக்கத்தில், பூமிபிரமாணம் அறிதல் எனும் தலைப்பில் ஒரு கணக்கு விவரம் தரப்பட்டிருக்கிறது. அது, அப்படியே தங்கள் பார்வைக்கு:
அணு 8 கொண்டது கதிரெழுது.
கதிரெழுதுகள் 8 கொண்டது பஞ்சிற்றுகள்
பஞ்சிற்றுகள் 8 கொண்டது மயிர்முனை
மயிர்முனை 8 கொண்டது நுண் மணல்
நுண்மணல் 8 கொண்டது சிறு கடுகு
சிறுகடுகு 8 கொண்டது எள்ளு
எள்ளு 8 கொண்டது நெல்
நெல் 8 கொண்டது விரல்
விரல் 12 கொண்டது சாண்
சான் 2 கொண்டது முழம்
முழம் 12 கொண்டது சிறுகோல்
சிறுகோல் 4 கொண்டது கோல்
கோல் 56 கொண்டது கூப்பிடு
கூப்பிடு 4 கொண்டது காதம்
காதம் 4 கொண்டது யோசனை
யோசனை 10,05,51,000 கொண்டது சூரிய இயக்க மண்டலம்
அதனை இரட்டிப்பாக்க சந்திர மண்டலம்
அதை இரட்டிப்பாக்க நட்சத்திர மண்டலம்
அந்தக் காலத்தில் இருந்த கணக்குகள் மிகக் கடினமாக இருந்த போதிலும், அதனை மனதில் கொள்ள மேற்காணும் வாய்ப்பாட்டைத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. சிறு வயதில் மாயஜாலக் கதைகள் படிக்கும் போது, அதில் பல காத தூரம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காதம் என்பதற்கு விளக்கம் தெரியாமல், தொலைவிலுள்ள ஒரு இடம் என்பதாகவே நினைத்துப் படித்துக் கொள்வேன். தற்போது காதம் தொலைவிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
இதே போன்று, ஜோதிடம் தொடர்பான பல்வேறு சொற்களுக்கான விளக்கங்களையும், அதனுடன் தொடர்புடைய பல்வேறு அரிய செய்திகளையும் சேர்த்து மிகச்சிறப்பாக, அருமையான முறையில் அமைந்திருக்கும் இந்நூலினை ஜோதிடர்கள், ஜோதிடம் பயின்று வருபவர்கள் மட்டுமின்றி அனைவரும் வாங்கிப் படித்துப் பயனடையலாம். ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் எழும் நிலையில், இந்நூலைக் கொண்டு விளக்கமான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். எனவே இந்நூலை அனைவரும் வாங்கிப் படிக்கலாம்! பாதுகாக்கலாம்!!