"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கிற திருமூலரின் கருத்துடன் தன்னுரையைத் தொடங்கியிருக்கும் நூலாசிரியர், தான் பெற்ற இலக்கிய இன்பத்தையும், தான் சிந்தித்த சிந்தனைத் தேனையும் இருபத்திரண்டு கட்டுரைகள் வழியாகப் படிப்போர் சுவைக்கும் வண்ணம் மிக அழகாகத் தந்திருக்கிறார்.
‘அபிராமியைச் சரணடையுங்கள்! என்று அபிராமி பட்டர் ஆற்றுப்படுத்திய பாங்கை, ‘ஆற்றுப்படுத்தும் அபிராமி அந்தாதி’ எனும் முதல் கட்டுரையில் தெளிவாகவும், நயமாகவும் எடுத்துச் சொல்லி, நம்மையும், நம் மனதையும் அக்கருத்துக்களை நோக்கி அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தி விடுகிறார்.
‘திருக்குறளில் தொகுத்துக்கூறல் உத்தி’ எனும் கட்டுரையில் தொகுத்துக் கூறுவதில் திருவள்ளுவர் எப்படி வல்லவர்? என்பதை எடுத்துச் சொல்லியிருப்பதைக் கொண்டு நூலாசிரியரின் திருக்குறள் புலமையை உணர முடிகிறது.
சொல்லில் அடங்காத சோழர்களின் குல வரலாறு, வீரக்கொடைகள், நீதி நிலைநாட்டல், வெற்றித்திறன் போன்ற சோழர்களின் சிறப்பையும், பெருமையையும் கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் துணையுடன் ஒரே கட்டுரையில் நேர்த்தியாக விளக்கிய நூலாசிரியரின் திறமை பாராட்டுக்குரியது.
‘கு. அ. தமிழ்மொழியின் ‘சிறகின் கீழ் வானம்’ என்ற குறும்பாவில் (ஹைக்கூ) சமுதாய முரண்பாடுகள்’ எனும் கட்டுரையில், கவிதாயினி கு.அ. தமிழ்மொழியின் குறும்பாக்களைப் போன்றே ஆழமாகவும், அழகாகவும், தன் கருத்தைச் சொல்லி, அந்நூலைத் தேடி வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
‘கு. அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்’ என்ற கட்டுரை, கு. அழகிரிசாமியின் சிறுகதைப் படைப்புகளில் தென்படும் உளவியல் ஆற்றல், உளவியல் சிக்கல்கள், அச்சிக்கல்களுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
மேலும், ‘பாக்கெட் உணவுகளும் இன்றைய அவசர உலகமும்’, ‘தூண்டுகோல்கள் துலங்குக’, ‘மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணங்களும் தீர்வுகளும்’, ‘வாழ்க்கை ஒரு வானில்’ எனும் கட்டுரைகள் இன்றைய சமூகத்தின் போக்கையும், அதில் ஏற்பட வேண்டிய மாற்றத்தையும் சிந்திக்கும்படியாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது.
நூலில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் வந்திருக்கின்றன. நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு திருக்குறளிலும் கூட எழுத்துப்பிழையைக் காண முடிந்தது. நூலாசிரியர் முதுகலைத் தமிழாசிரியராக இருப்பதால், இது போன்ற பிழைகள் வராதபடி சரிபார்த்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.
பொதுவாக, ‘தமிழ்க்கடலில் சில முத்துக்கள்’ எனும் இந்நூல் நன்முத்துக்களாகவே ஒளிர்கின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கிய ஈடுபாடுடையவர்கள் என்று அனைவரும் படித்துச் சுவைத்து இன்புற வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
வாழ்க! வளர்க! ஆசிரியரின் எழுத்துப்பணி என்று பாராட்டி மகிழ்கிறேன்...