தாய், தந்தை, மொழி, ஆசான் என்கிற வரிசையில் தனது கவிதைகளை முதலில் வரிசைப்படுத்தித் தந்துவிட்டுப் பின்னர் மறற கவிதைகளைத் தொடர்ந்திருக்கிறார்.
காலத்துக்கேற்ற புதிதாக, ‘திருமண வாழ்த்து’ ஒன்று இங்கே இடம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்த்து இதுதான்...
‘செல்போனும் சிம்கார்டுமாய்
வாழ்வில் இணைந்து
சிம்கார்டும் டவருமாய் ஒத்துணர்ந்து
வாட்ஸ் அப் குரூப்பாய் சொந்தங்கள் கூடி
இனிமை நினைவுகள் மெமரி கார்டாய்
இதயத்தில் தவழ
வைஃபை வசதியாய் லைப்பில்
சொந்தங்களுக்கு உதவி செய்து
புளூ டூத் தெரிய சிரித்து மகிழ்ந்து
2ஜி குழந்தைகள் மட்டும் பெற்று
16 ஆப்சன்களும் பெற்று
100 சதவிகித பேட்டரியுடன்
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தும்’
இந்த வாழ்த்தில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது ஒரு குறையாகத் தெரிந்தாலும் வாசிப்பதற்கு நன்றாக இருக்கிறது.
‘கவிதைத் துளிகள்’ எனும் தலைப்பில் ஒரு கவிதை;
‘பிற ஆடவரைக் கண்டால்
தலைகவிழும் பெண்கள்
நாணம் மிக்கவர்கள்...
பிறன்மனை எனத் தெரிந்தும்
நோட்டம்விடும் ஆண்கள்
நாலும் கெட்டவர்கள்’
என்று சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ‘முதுமையின் ஞாபக வெளியில்!’ எனும் கவிதையில் இளைமை நினைவுகளைச் சொல்லி, முதுமையில் வரப்போவதையும் சொல்லி, கடைசியாக,
‘இருந்த இடத்தில் இருக்கும் முதுமை
இரண்டாம் குழந்தைப் பருவமாகும்!
அநாதை இல்லம் சேர்க்காப் பிள்ளை
ஆயுள்கூட்டும் அமுதமாகும்!
மரணமிலாப் பெருவாழ்வு
நல்ல கதிக்கு யாதுமோர் குறையுமில்லை’
என்று கவிதையை நிறைவு செய்திருப்பதும் நன்றாக இருக்கிறது.
இதே போல் ‘முகநூலில் மலர்ந்த மலர்கள்’ எனும் தலைப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில்,
‘அன்பே
நான்தரும்
ஒற்றை ரோசாவை ஏற்றுக்கொள்
இல்லையேல்
கற்றை ரோசா தேவைப்படும்
கல்லறைக்கு’
என்கிற கவிதையும்
‘நம் வீட்டுக் கோலத்தில்
புள்ளிகளாய் நீ
கோடுகளாய் சுற்றி வந்து காப்பேன்
கணவன்!’
என்கிற கவிதையும் நன்றாக இருக்கிறது.
இக்கவிதை நூலில் காந்தி, காமராசர், பாரதி, பாரதிதாசன் போன்றோருடன் இசையமைப்பாளர் இளையராசாவைப் போற்றும் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சமூகச் சிந்தனையுடனும் சில கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு இக்கவிதை நூல் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.