மௌன ஒத்திகைகள்
ஆசிரியர் |
சிவமணி |
பிரிவு |
கவிதை |
பக்கங்கள் |
80 |
பதிப்பு |
ஜனவரி’ 2020 |
ISBN |
978-81-943467-1-5 |
விலை |
ரூ.100/- |
பதிப்பகம் |
ஓவியா பதிப்பகம் |
முகவரி |
17-13-11, ஸ்ரீராம் காம்ப்ளக்ஸ், காந்திநகர் முதன்மைச் சாலை, வத்தலக்குண்டு- 624202, திண்டுக்கல் மாவட்டம். |
தொலைபேசி எண் |
----- |
அலைபேசி எண் |
7667557114 |
புத்தகப் பார்வை:
அட்டையிலேயே தொடங்கிவிடுகிறது அட்டகாசம். ஓரங்க நாடகத்தின் ஒத்திகையொன்றை மன்மத தேசத்தில் மௌனமாய் நடத்தியிருக்கிறது. பூசலார்நாயனார் இறைவனை உள்ளுக்குள் வைத்தே பூசிக்க ஆலயம் கட்டியதைப் போல் இவரும் உளக்கோயிலமைத்து உலவவும் விட்டிருக்கிறார்.
தன் காதல்கோட்டைக்கு அவர்வைத்த பெயர் " மௌன ஒத்திகை". பெயர்தான் மௌன ஒத்திகை. தன்னை முன்னிறுத்தி நம்மைப் பேசவைக்கிறது. ஏக்கங்களை மௌனமாய் மொழிபெயர்த்தால் இப்படித்தான் இருக்குமோ? உருகி உருகித் தன்னைத்தானேச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.
கல்லறையின் மேல்தளம்தான் தாஜ்மகால்!
சொல்லறையின் அடித்தளம் மௌன ஒத்திகை !
ஒவ்வொரு மனத்துக்குள்ளும் ஓர் ஒத்திகை நிச்சயமாக நடந்து கொண்டுதானிருக்கும். கவிஞனுக்கோ உச்சத்திலும் உயிர்பெறும்.
என் அறுபத்தைந்தாம் வயதில் நானும்கூட காதல்கவிதைகளை எழுதுவதைப்போல...
பாவேந்தர் தம் எழுபதாம் வயதிலும் அருமையான காதல் கவிதைகளை எழுதியதைப்போல...
வாலி வாழ்நாள் இறுதிவரை வழங்கியதைப்போல...
காலம் காதல் ஒத்திகைகளை நடத்திக் கொண்டுதானிருக்கிறது மௌனமாய் !
காலம் தன் முகம்பார்த்துக்கொள்ள மௌனமாய் ஓர் ஒத்திகையை நடத்தி அரங்கேற்ற சிவமணியைச் சிக்கென பிடித்துக் கொண்டிருக்கிறது. சொற்களுக்குள் தன்னை ஒளித்துக்கொண்டு சொக்கட்டான் ஆடுகிறது காலம்,
சிவமணியின் சிந்தனையாய் !
"இரவிலும் பகலின் சாயம் "
விழுந்து முளைக்கிறதாம்
நினைவுகள் என்னும் நீர்க்குமிழிகள்.
அந்தநீர்க்குமிழிகளை உடைக்கிறதாம் இரவு!
அட....அட...
கழிந்த இரவுகளிலிருந்து கவிதை எடுத்திருக்கிறார்.
அதைப் பகல்படுத்தியிருக்கிறார்!
விடியாத காதலை அழகுபடுத்தியிருக்கிறார்
தன் கவிதை விடியல்களால்.
"எதிலும்
கரைய முடியாமல் நீ
எப்போதும்
கரைந்தபடியே நான்"
எந்த ராஜதிராவகத்தாலும் கரைக்கமுடியாத காதலிது.
"வாடிவாசல் காளையாய்த்
திமிறிவரும் என்னை
அடக்கி
இழுத்துச் செல்கிறாய்
பிடியைச்
சிறிது விட்டுப்பிடி
மூச்சு
முட்டுகிறது..."
அவருக்கு மட்டுமா முட்டுகிறது மூச்சு ? நமக்கும்தானே.
"உனது பெயரை
எழுதி
கரைந்திடும் மைகளையும்
ரசிக்கிறது
துளிர்த்துத் துளிர்த்து
மிதிபடும்
கண்மொட்டுகள்"
என்னே அழகு.
"உன் பெயரெழுதிப் பார்த்தேன்
காகிதத்தில் எறும்புகள் "
என்று 1972 ஆம் ஆண்டிலும்
"உன்னைத் தொட்டுக்கொண்டோடிய
கடல் நீரே தித்திக்கின்றது
கடல் நீராடலாம் வா !"
என்று 1974 ஆம் ஆண்டிலும் நான் எழுதியதையும் நினைவில் நிறுத்துகிறது.
வெயில் தாக்கத்தில் அவள் மேனியில் எழும் வேர்வையின் ஓட்டத்தைக் கண்டு பொறாமைப்படுகிறாராம். என்னே குசும்பு !
"உன் வருகையால்
மரங்கள்
இலையுதிர்காலமாய்
சாலையை நிரப்பிச்
சலசலக்கிறது "
என்னே கற்பனை. அவள் வருகையில் மரங்கள்கூட தம் ஆடைகளை அவிழ்த்தெறிந்துவிட்டு நிற்கின்றனவாம்! அவளை அணிந்து கொள்ள ! சலசலக்கின்றன சருகுகள் என்று பெருமூச்சுவிடும் பெரிசுகளைப் பேசுகிறார் !
மரத்தடி காதல் இவற்றையெல்லாம் பேசுமோ ?
"கொக்குபோல் காத்திருந்தேன்
வந்தமீன் என்னைத் தின்றது !"
விழிவலையில் விழுந்தவரின் வாக்குமூலமிது.
எல்லாரும் வெற்றிக்காகவேபடையெடுப்பார்கள். காதல்மட்டும்தான் தோற்பதற்காகவேப் படையெடுக்க வைக்கும்!
தோற்பதே வெற்றி என்ற காதல் மந்திரத்தை உச்சரிப்பதிலேயே உச்சம்தொடுகிறது மகிழ்ச்சி !
இவரும் உச்சம் தொடுகிறார்.
ஒவ்வொரு கவிதையிலும் உச்சம்தொடுகிற ஒத்திகையிது. வதிலை பிரபாவின் ஒப்பனை பேரழகாக்குகிறது. முதல் நூலிலேயே உச்சம் தொடுகிறார். வாழ்க சிவமணி !
"தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -கை
பட்டுவிடப் பட்டுவிடப் படரும்"
என்ற கவிஞரின் திரைப்படப் பாடலைப்போல்
நூலில் எங்குத் தொட்டாலும் தொடரவைக்கிறது.
கண் பட்ட இடங்களிலெல்லாம் படர்ந்து நிறைகிறது.
ஓரிரு பருக்கைகளையே பதம்பார்க்கக் கொடுத்துள்ளேன் ! படையலை நீங்களே பதம்பாருங்கள் !
நல்ல நூல் ,
ஒரு பல்கலைக்கழகத்தின் பருக்கை.
ஒற்றைப்பருக்கையில் ஒருபடையலிது.
உங்களுக்காகவே! உண்ணுங்கள்!
- கவிக்கோ துரை வசந்தராசன்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|