கற்றோர்கள் அனைவரும் போற்றும் வண்ணம் கம்பராமாயணத்தினைப் படைத்திட்ட கம்பனின் புகழையும், அவர் படைத்த கம்பராமாயணத்தின் சிறப்பையும் உலகிற்கு எடுத்துக்காட்டத் தமிழ்நாட்டில் பல இடங்களில் கம்பன் பெயரால் கழகங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இந்தக் கம்பன் கழகங்கள் வாரம், மாதம் என்று ஏதாவதொரு சுழற்சி முறையில் கம்பராமாயணச் சொற்பொழிவுகளை நடத்தி, கம்பன் புகழையும், கம்பராமாயணத்தில் சொல்லப்படும் நல்வாழ்க்கைக்கான வாழ்வியல் நெறிமுறைகளையும், அதன் வழியாகத் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழரின் பண்பாட்டையும், பெருமையையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து கொண்டிருக்கின்றன.
கம்பன் கழகங்கள் நடத்தும் சொற்பொழிவுகளில் கலந்து கொள்ளும் பலருக்கும் கம்பராமாயணத்தின் மேல் ஏற்படும் ஈர்ப்பு அதிகமிருக்கும். கம்பராமாயணச் சொற்பொழிவுகளைக் கேட்க வயதானவர்கள்தான் வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இளம் வயதினரும் கம்பராமாயணத்தின் மேல் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு, சென்னையில் மணி, ரேகா மணி உள்ளிட்ட சில இளம் வயதினர் ஒன்று கூடி ‘மாணவர் கம்பன் கழகம்’ எனும் பெயரிலான ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் வழியாக மாதந்தோறும் கம்பராமாயணம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தி வருவதைக் குறிப்பிடலாம். இப்படித்தான் கோயம்புத்தூர், கம்பன் கழகத்தினரால் கவரப்பட்டு, அவர்களால் சிறந்த பேச்சாளராக உருவாக்கம் பெற்ற மாணவப் பேச்சாளர்களுள் கோயம்புத்தூரைச் சேர்ந்த வீ. வீரபாலாஜியும் ஒருவர்.
தனது மேடைப் பேச்சுகளில் அனைவரையும் கவர்ந்து வரும் இவர், ‘ஸ்பீக் பார் இந்தியா’ எனும் மிகப்பெரும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றவர். பாரதியார் பல்கலக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கிடையிலான 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பெற்ற பாரதியார் பிறந்த நாள் பேச்சுப் போட்டியில் முதல் பரிசுடன் ‘இளம் பாரதி’ விருதையும் பெற்றிருக்கிறார். ஆங்கில மொழியின் மேல் கொண்ட மோகத்தால் தமிழ் மொழி அழிந்துவிடுமோ என்கிற அச்சத்தைப் போக்கும் வகையில், ஆங்கில வழியில் பயின்ற மாணவர் வீ. வீரபாலாஜி தமிழ் மொழி மேல் கொண்ட பற்றுதல் வியக்க வைக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆன்மிகம், சுயமுன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழில் சொற்பொழிவாற்றி வரும் இவர், கம்பராமாயணம் தொடர்புடையதாக, ‘கம்பன் கவியில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ எனும் தலைப்பிலான இந்நூலினை எழுதியிருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் 14 கட்டுரைகளும் எளிமையானதாக, பள்ளியில் பயிலும் மாணவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. கம்பராமாயணத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும் இந்நூல் பள்ளி நூலகங்கள் அனைத்திலும் இடம் பெற்றிட வேண்டும். இதன் மூலம், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்குக் கம்பராமாயணத்தின் மேல் ஈடுபாடு வருவதுடன், தமிழ் மொழியின் மேலும் பற்றுதல் ஏற்படும் என்று நம்புகிறேன்.