இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Book Review
புத்தகப் பார்வை

கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்


ஆசிரியர் பொ. திராவிடமணி
பிரிவு புதுக்கவிதை
பக்கங்கள் 96
பதிப்பு 2021
ISBN 978-93-89857-68-9
விலை ரூ. 120/-
பதிப்பகம் டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
முகவரி சென்னை
தொலைபேசி எண் -----
அலைபேசி எண் 9940446650

புத்தகப் பார்வை:


வானம்பாடிப் பறவை…

“தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல்மாறி, வான் பொய்ப்பினும்” (பட்டினப்பாலை வரிகள்)
கவிதைக்கான சொற்கள் அதற்கான உள்ளங்கைகளைத் தேந்தெடுத்துக் கொள்ளும். படைப்பிலக்கியங்களில் குறிப்பாக, தமிழ்க் கவிதைக்கு அத்தகைய உள்முக வாஞ்சை உண்டு. புறச்சூழலால் அழுத்தப்படுகிற போது கவிமனம், உருண்டு, திரண்டு, நெகிழ்ந்து, முறுக்கி கவிஞரின் அனுபவத் திரட்சியாக உருக்கொள்கிறது. கவிதைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான சமூக, வரலாற்றுப் பின்புலத்திற்கு ஏற்ப தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எம்.ஏல். ரொஸென்தல் தன்னுடைய Life Stufied எனும் புத்தகத்தின் விமர்சனத்தில் Confessional Poetry என்கிற வகையை வைக்கிறார். சில்வியா பிளாத் கவிதைகளை இந்த வகைமைக்குள் பொருத்திப் பார்க்கிறார். அமெரிக்காவில் 1940 – 50 களில் வெளியான கவிதைகள் இதற்குள்தான் அடங்கின. வால்ட் விட்மனைத் தொடர்ந்து பாடுபொருளில் இயற்கை, ஆன்மா, சமுதாயம் என்று வளர்ச்சி கொண்டது. அதில் உளவெளிப்பாட்டுக் கவிதை என்பது அகம் திறந்து தன் வாழ்பனுபவங்களை அதன் விளைவான மன எழுச்சிகளை உள்முக நோக்கில் கூறுவது எனப் பொருள்படுவதாகக் ரொஸெந்தல் கூறுகிறார். உள்மனக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள் என்பது எழுதுபவருக்கும் அவருடைய சுயத்திற்குமான முரணாகப் பார்க்கப்படுகின்றன. தமிழ்ச் சூழலில், சுயம் என்பது கவிதையும் கவிஞராகவுமே முன்வைக்கப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு இந்தச் சமூகம் கற்பித்துக் கொடுக்கிற நியாய தர்மங்களை கோபத்தில், விரக்தியில், உற்சாகத்தில் கலைத்துப் போட்டு ஒரு முடிவுக்கு வருகிற போது, முரணோடு சமரசமும் சேர்ந்து கொள்கின்றன. அப்படியான புரிதலை “கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் “ என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பின் பல்வேறு கவிதைகளில் அதன் உண்மைத் தன்மையின் ஊடாக நாம் அவதானிக்க இயலும்.

கணவர், அப்பா, மகள், நண்பர்கள் என தன்னைச் சுற்றிய நெருக்கமான உறவுகளுடன் நடத்தப்படுகிற மனக்குரலாக சில கவிதைகள் இருக்கின்றன.

“என் கவிதையில்
சொற்கள் சொற்களாகவே
அமர்ந்திருக்கின்றன
நீ படிக்கும் வரை”

என்பதான வாசிப்பு மனநிலையில், அப்படியே அமைதியாகக் கடந்து போக முடியாது.

“தணித்தலுக்கும் தணிதலுக்கும்
தண்ணீர் போதாது
தாகமும் வேண்டும்”

என்கிறார்.

கல்லாய்போன அகலிகை மனுஷியாக வேண்டுமென்றால் ராமன் பாதம்பட வேண்டும் என்பது கதை. ஆனால், சபித்தவனே நேரில் வரட்டும்.

“இம்முறை
ராமனின் பாதம்பட்டு
உயிர்ப்பதாய் எண்ணமில்லை
கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்”

என்கிறார்.


கூடவே, சித்தார்த்தருக்காகவும் காத்திருப்பதாகச் சொல்கிறார்.

“துறத்தல் என்பது அவனைத்
துரத்திய ஆசையெனில்
மறத்தல் ஒல்லுமா
மனைவி மக்களை...?”

என்ற கேள்வியோடு யசோதரை தன் விடியலின் உதயத்திற்காகக் காத்திருக்கிறார்.

அப்படி மனைவியையும் சின்னஞ்சிறு மகனையும் தவிக்க விட்டு புத்தர் துறவு மேற்கொள்ளலாமா? எனத் திடீரென்று நம் முன்னால் நின்று, சட்டையைப் பிடித்து உலுக்கவும் செய்கிறார்.

கனவு குறித்து இன்றளவும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. மனிதர்களின் உறக்க நிலையில், துண்டு துண்டாக ஒன்றுக்கொன்று தொடர்பற்றதான சம்பவங்கள் வருகின்றன. அத்தகைய சித்திரங்களும் படிமங்களும் மனிதனின் நிறைவேறாத ஆசைகளாக ஆழ்மனத்தில் கிடப்பவையென உளவியலாளர்கள் கூறுவர்.

“கோடைக்கால மரக்கிளையில்
சிறகு கிளர்த்தி
இளைப்பாறும் பறவைக்கு
நீர்நிறை பொய்கை நினைவு”

என்பதாகவும்,

“தூறலற்ற பாலையில்
செடிவளர்த்துத் தோற்றவளின்
தாழ்த்திய விழிகள் உதிர்த்த முத்துக்களில்
ஆசைகள் உப்புப் பூத்து மிளிர்கின்றன”

இப்படியான அசைபோடும் எண்ணங்களால் ஆன்மாவுக்கு சிறகுகள் முளைக்கட்டும் என்கிறார் கவிஞர் திராவிடமணி.

கவிதைகளையும் அப்படியான ஆழ்மனச் சித்திரங்களாக வரையமுடியும் என்பதற்கு இவ்வரிகள் உதாரணமாக அமையும்.

ஆசையாய் வரையப்பட்ட வனப்புமிக்க ஓவியமாக, தேம்பூங்கட்டியாக, கொண்டாடுகிற ஒருவரின் முத்தத்தை பாதுகாக்கிற சுவாரசியமான கவிதை இது.

“என்னை நனைத்த
முத்தத்தின் சாறுகளைப்
பதப்படுத்திப்
பத்திரப்படுத்திய பிற்பாடு
உன் நினைவின் போதெல்லாம்
ஒரு வில்லையை
வாயிலிட்டு அடக்கிக் கொள்கிறேன்
முத்தத்தில் நனைகிறது உடல்”

எனும் பெரும் ஏக்கத்துடன், உடல் தேவையற்ற முதுமைக்காலத்தில், தன் இணையின் ஆத்மார்த்த அன்புக்காகவும் இந்தக் கவிதைகள் காத்திருக்கின்றன.

இருப்பின் வலிமிகுந்த வாழ்க்கையிலிருந்து கடந்ததை மீள்சமர் செய்கிறபோது, மகிழ்ச்சியோடு துன்பம் மிகுந்த பால்யத்தையே உணர இயலும்.

“நதி நடக்கும் வாசல்
அழகாய்த்தான் இருக்கிறது
காகிதக் கப்பல்களில் செல்கிறது
என்
பால்யத்தின் மகிழ்ச்சி”

என்பது ஒருவகையான கவித்துவப் பயணம். வெடிக்கத் தயாராக இருக்கும் தாத்தாப்பூவில் அமர்கிறபோது அது தனக்கும் இறக்கைகளைத் தருவதாக எல்லாவற்றையும் சட்டென உதறி பறக்கத் துடிக்கும் மணமும் கவிதைகளில் வீசுகின்றன.


எதிர்பார்ப்பும் அளப்பரியத் தேடலும் நம்பிகையுமாக நெருங்க நெருங்க, விலகிச் செல்லும் கானலான பிரியத்தைத் தொடரும் ஒரு வகையான மூர்க்கத் துயரம், வாசகரையும் தொற்றிக் கொள்கிறது.

“எவ்வளவு அழுதாலும்
வலி
ஊறிக்கொண்டே இருக்கிறது
மணல்நெஞ்சில்”

எனத் தவித்தாலும்,

“நீர்த்துறைப் பாசியாய்
விலக்க விலக்கக் கூட நினைக்கும்
பிரியத்திற்கு விலையுண்டா?”

என்ற வினாவின் விடாப்பிடியும் பற்றிக்கொள்கிறது.

“உனக்குத் தெரியாததையா
நீ உணராததையா
இவ்வளவு காலமாகப் பேசினேன்?”

என்கிற அயற்சியை உணரச்செய்கிறார்.

1960 – களில் மேற்கத்தியப் பெண் கவிஞர்கள் தங்களுடைய எழுத்துக்களில் திருமணம், தாய்மை, பாலியல், குடும்பத்திற்கும் பணிக்கும் இடையிலான ஊடாட்டங்கள், பெண் உரிமைகள், சட்டங்கள் அனைத்தையும் விவாதத்திற்கு உட்படுத்தினார்கள். முழுக்க முழுக்கத் தன்னுணர்ச்சிப் பாடல்களிலான வருகை சற்று குறைந்து, இப்போது அரசியல், பண்பாடு, பெண்களுக்கான உரிமைகள் போன்றவைகள் பாடுபொருளாக்கப்படுகின்றன. பணிக்குச் செல்கிற பெண்களுக்கு இருக்கக்கூடிய அலுவல் சுமைகளோடு, வீட்டுச் சுமையும் சேர்ந்து கொள்கிறது. அப்படியானச் சூழலில், உறவுகளின் புரிதலின்மையால் ஏற்படுகிற உளவியலும் இவரது கவிதைகளில் காணமுடிகிறது. வயதான காலத்தில் தன்னைக் கவனிக்காமல், குடித்து சாலையில் மயங்கிக்கிடக்கும் மகனுக்கு, பிச்சையெடுத்து பசியாற்றும் தாயும், சித்தம் கலங்கியிருந்தாலும் இரவு நேரத்தில் இரை தேடும் மனித மிருகங்களை அடையாளங் கண்டு, பயந்து தன்னைப் போர்வையால் முழுமையாக மறைத்துக் கொள்ளும் பெண்ணும் நம் வாசிப்பில் அமர்ந்து கொள்கிறார்கள்.

தமிழ்மொழியின் மீதான பற்று, அதை அழிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தின் ஈயப்பூச்சு, கொரோனா காலத்தின் ஊரடங்குத் தனிமை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துப் பார்த்து சலிப்படையும் குடும்ப உறவுகளின் மனநிலை, அலைபேசியில் வாழ்க்கை நடத்தும் குழந்தைகளை கண்டிக்க முடியாத பெற்றோர்களின் இயலாமை, அச்சம், அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வித்தைக்காரர்களின் அவலம், நகர வாழ்க்கையின் பிடிப்பற்ற தன்மை, கஜா புயலினால் துயருற்ற மனிதர்களின் நிலை, இனப்படுகொலைகளில் எஞ்சி நிற்கும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியல், மனித நேயத்தின் வாடி வாசலாக திறந்துவிடப்பட்டிருக்கிறது. தாகம், மரம், பறவை, நிலவு, மேகம், நீலோற்பல மலர், கண்ணீர் எனப் பரந்து விரிகிறது சோகமும் தன்னம்பிக்கையுமான கவிதைகள்.

“ஒவ்வொரு நாளும் கவனப்படுத்தியும்
கலைக்கப்படுகிறது வலை
தளர்வற்றுப்
பின்னிக்கொண்டுதானே இருக்கிறது சிலந்தி”

“உயிர்த்திருக்கும் நாட்களில்
நல்ல கல்லைத் தேர்வு செய்
உளி உன் கையில்”

போன்ற வரிகள் நம்பிக்கைக்குரியன. ஒர் எழுத்து இந்தச் சமூகத்திடம் கொண்டிருக்க வேண்டிய இணக்கமும் கூட.

வண்ணமும் வடிவமும் அற்ற முகமூடிகளால் நிரம்பியது இந்த உலகம். முகமூடியற்ற வாழ்க்கை நிர்பந்திக்கப்படுமானால், மனிதர்கள் ஒருவரையொருவர் கொன்று புசிக்கும் நிலைக்குக் கூடத் தள்ளப்படுவார்கள். அத்தகைய அருவமான முகமூடிகளை எழுதாமல் எந்தக் கவிஞராலும் கடந்து போக முடியாது. குறைந்தபட்சம் நினைப்பிலாவது வந்து போகும்.

“முன்பெல்லாம்
வீட்டிற்குள் நுழைந்தவுடன்
அதை
அகற்றிவிடுவது வழமை
இப்போது வீட்டிற்குள்ளும்
தேவையாய் இருக்கிறது
முகமூடி”

பயணம், தொன்ம விதைகள் மற்றும் என்னுள் அவள் தலைப்புகளில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் படிமத்திற்கான ஊற்று. சமூகத்தை எதிர்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணின் உளச்செய்கையை அழகாகச் சித்திரிக்கும் வரிகள். தான் கண்ட விடயங்களை அவருக்கான அனுபவத்தோடு உணர்வாக்குகிறார். காம உணர்ச்சியை ஏன் சொல்லத் தயங்க வேண்டும். முறையான காமம், மற்ற தேவைகள் போல் இயல்பானதுதான். அதற்காகக் காத்திருப்பதும் அடைவதிலும் என்ன தவறு? என்பதற்கானக் கவிதைகளை இத்தொகுப்பில் கண்டடையலாம்.

“சொற்களின் மீது தீராக் காதல் இருக்கிறது.
இதழுக்கு பூட்டு போட்டுவிட்டு
விழிகளைத் திறந்து வைக்கிறேன்
சொற்கள் இடையறாது
கரைந்து கொண்டிருக்கின்றன”

என்கிறார்.

மரபும் புதுமையும் இணைந்த தனக்கான மொழிநடை. ‘வாவிக்குள் வசமிழக்கும் மீன்கள்’ போன்ற ரசனைக்குரிய சொல்லாடல்கள் . ஆங்காங்கே விதைக்கப்பட்டிருக்கும், பயன்பாட்டிற்கு வரவேண்டிய தூய தமிழ்ச் சொற்கள், எண்ணற்ற படிமங்கள் மற்றும் குறியீடுகள் வாசகர் மனதில் நீடித்து நிலைக்கும்.


நல்லது, கெட்டது என முன்முடிவோடு நகர்ந்து போவதில்லை. நின்று நிதானித்து இருளையும் பகலையும் கூர்ந்து நோக்கும் கவிஞரின் கவிதரிசனத்தை இத்தொகுப்பின் நெடுகக் காணமுடியும். “பகலைத் தின்று கொழுத்த இரவு” களை ரசிப்பவர். ஆண்டன் செக்காவின் இறுதி நாட்களை எண்ணிப் பார்க்கிறார்.

“எத்தனையோ திட்டமிடல்
எல்லாம் நிராசை என அறிந்தபோது
இறுதியில்
செக்காவ்விற்குக் கொஞ்சம் சாம்பெய்ன்
தேவையாய் இருந்தது
எனக்கு?”

இந்தக் கேள்வியின் நீட்சியாக வேறு ஒரு தொகுப்பு விரியக்கூடும். கவிஞர் பொ. திராவிடமணி அவர்களின் நீண்ட கவிப்பயணத்திற்கு வாழ்த்துகள். ஓவியர் எம். டிராட்ஸ்கி மருது அவர்களின் நேர்த்தியான வாழ்த்துரையோடு “கௌதமருக்காகக் காத்திருக்கிறேன்” என்கிற இந்தக் கவிதைத் தொகுப்பை அழகாக அச்சிட்டு வெளியிட்டிருக்கும் சென்னை, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்க்குப் பாராட்டுகள்.

- முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணையப் பக்க முகவரி: http://www.muthukamalam.com/bookreview/p116.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License