நாரதர் மலை என்பதே நார்த்தாமலை என்று மாற்றம் பெற்றது எனும் காரணத்தை இரு மேற்கோள்களுடனும், நகரத்தார் மலை என்றிருந்ததே நார்த்தாமலை என்றானது என்கிற மற்றொரு காரணத்தை மூன்று மேற்கோள்களுடனும் நூலாசிரியர் இங்கு சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த நார்த்தா மலையில் பழியிலி ஈசுவரம் (குடைவரைக் கோயில்), ஜ்வரகரேஸ்வரர் கோயில் (சுனைக்கோயில்), விஜயாலய சோழீஸ்வரம், நகரீஸ்வரம், திருக்கடப்பூர் உடைய நாயனார் கோயில், திருவானைக்கா ஈசுவரம் என்று ஆறு சிவன் கோயில்கள் இருக்கின்றன.
இந்த ஆறு கோயில்களையும் தோற்றுவித்த மன்னர்கள் குறித்தத் தகவல்கள், கோயில்கள் அமைப்பு மற்றும் கட்டுமானம், கோயில்களில் இடம் பெற்றிருக்கும் படிமம், சிற்பம் மற்றும் ஓவியங்கள், கோயில்களில் வழிபாடு மற்றும் விழாக்கள், கோயில்களின் தற்போதைய நிருவாக அமைப்புகள் எனும் தலைப்புகளில் நார்த்தாமலை சிவன் கோயில்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்நூலாசிரியர் பல்வேறு மேற்கோள்களுடன் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நூலில் கோயில்களின் அமைப்பு குறித்த வரைபடங்களும், வரைபடத்தில் கருவறை, அர்த்த மண்டபம், பலிபீடம், முன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் இடம் பெற்றிருக்கும் சிலைகள் போன்றவை எண்களிடப்பட்டு, அடையாளப்படுத்தியிருப்பது சிறப்பாக இருக்கிறது. இதே போன்று, இக்கோயில்களின் பல்வேறு சிறப்புச் செய்திகளை நூலாசிரியர் தொகுத்துத் தந்திருப்பது மட்டுமின்றி, பின்னிணைப்பாக, பதினெட்டுப் பக்கங்களில் கோயில்களின் பல்வேறு ஒளிப்படங்களையும் தந்திருப்பது நூலிற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இந்த நூலின் வழியாக, நார்த்தாமலை சிவன் கோயில்களையும், அதன் அற்புதங்களையும் படிக்கும் நாம், ஒரு முறையாவது நார்த்தாமலை சென்று இக்கோயில்களை பார்த்து, வழிபட்டு வர வேண்டுமென்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.