தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் ஓடினாலும், அது தாமிரபரணி ஆற்றுக்கு ஈடாகாது என்று திருநெல்வேலிக்காரர்கள் பெருமையாகச் சொல்வதுண்டு. அதற்கு ஒரே காரணம், தமிழ்நாட்டின் எல்லைக்குள்ளிருக்கும் மலைப்பகுதியில் தோன்றி, தமிழ்நாட்டு எல்லைக்குள்ளிருக்கும் நிலப்பரப்பில் பாய்ந்தோடி, தமிழ்நாட்டு எல்லைக்குள்ளிருக்கும் கடலிலேச் சென்று கலக்கும் ஒரே நதி தாமிரபரணி என்பதுதான். இந்த நதிக்கு இந்தப் பெருமை மட்டுமல்ல, கோடையிலும் வற்றாத ஒரே நதி என்ற மற்றுமொரு பெருமையும் உண்டு.
இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு புராணங்களிலும், சங்ககால இலக்கியம், பக்தி இலக்கியங்கள் மட்டுமின்றி இக்கால இலக்கியங்களிலும் தாமிரபரணியின் பெருமை குறித்துப் பல இடங்களில் பேசப்பட்டிருக்கின்றன என்று தெரிவிப்பதுடன், இந்நதியைப் புலவர்களும், ஆய்வாளர்களும் எப்படியெல்லாம் சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் கூடுதலாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
இந்த நதி எப்படித் தோற்றம் பெற்றது? இந்நதியை பொருநை என்று அழைப்பது ஏன்? இந்நதிக்கு தாமிரபரணி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது? வேறு என்ன பெயர்களிலெல்லாம் இந்நதி குறிப்பிடப்படுகிறது? என்று பல்வேறு சுவையான செய்திகளைச் சொல்லும் இந்நூலாசிரியர், தாமிரபரணி தோற்றம் பெற்ற பொதிகை மலைதான் உலகின் முதலில் தோன்றிய மலை என்றும், இம்மலையை அகத்தியர் வாழ்ந்ததால் அகத்திய மலை என்றழைப்பார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
இம்மலைக்கு மலையம், மலையமா மலை, தென்மலை, தமிழ்மலை, பொதியம், பொதியில், தென்றல் வரை, சந்தனப் பொதிகை, செம்மலை, தென் கயிலை என்கிற பெயர்களும் உண்டு என்கிறார். இவை தவிர, செம்புவரை, தென்றலங்கிரி, மந்தமாருதவரை, ஏகப்பொதிகை, தமிழ்க்கிரி, சந்தனப்பொருப்பு என்று வேறு பெயர்களும் இருக்கின்றன என்கிறார்.
இம்மலையில் அதிகமாகக் காணப்படும் யானைக்கூட்டம், இம்மலையில் அமைக்கப்பட்டிருக்கும் புலிகள் காப்பகம்,, இம்மலைக்குச் செல்வதற்கான சவாலான பயணம் குறித்தும் குறிப்பிடும் நூலாசிரியர், இம்மலையிலிருக்கும் பாண்டியன் கோட்டை ஒன்றையும், அது சிதைந்து கிடைப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். பாண்டிய மன்னன் ஒருவன் எதிரிகளிடமிருந்து தப்பிச் சென்று, இவ்விடத்தில் மறைந்து வாழ்ந்தான் என்றும், அவன் வாழ்ந்த இடமே இக்கோட்டை என்கிற சில செவிவழிக் கதைகளையும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இம்மலைப்பகுதியில் காணி எனும் பழங்குடியினர் வசித்து வருவதைக் குறிப்பிடும் நூலாசிரியர், அவர்களது வாழ்க்கை முறைகளையும், அவர்களது விருந்தோம்பல் பண்பாட்டையும் நூலில் குறிப்பிட்டுச் சிறப்பித்திருக்கிறார். இந்தக் காணி பழங்குடியினரும் வனத்துறையினரும் இணைந்துதான் இம்மலையினை ஓரளவு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர் என்று நூலாசிரியர் தெரிவிக்கிறார்.
இலக்கியங்களில் பொருநை நதியானது சேரர் மற்றும் பாண்டியர்களின் வாழ்வியலில் இணைத்துச் சொல்லப்பட்டிருக்கிறதே, இரு நதிகளும் ஒன்றுதானா? இல்லை, இரண்டும் வேறு வேறு நதிகளா? என்பதற்கான பதிலாக நூலாசிரியர் இரண்டும் பொருநை எனும் பெயருடன் இருந்தாலும், இரு நதிகளும் வேறு என்பதைச் சுட்டிக் காட்டுவதுடன், அவற்றை சேர நாட்டுப் பொருநை, பாண்டிய நாட்டுப் பொருநை பிற்காலப் புலவர்கள் வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.
சேரநாட்டுப் பொருநை நதியானது, பொதிகை மலையில் தோன்றி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது என்றும், பாண்டிய நாட்டுப் பொருநை நதியானது, பொதிகை மலைப்பகுதியில் தோன்றி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து புன்னக்காயல் எனுமிடத்தில் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது என்றும் குறிப்பிடும் நூலாசிரியர், சேரநாட்டுப் பொருநை ஆற்றை, ஆண் பொருந்தம் என்றும், பாண்டிய நாட்டுப் பொருநை ஆற்றை, தண் பொருந்தம் என்றும் புலவர்கள் வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.
பாண்டிய நாட்டுப் பொருநை நதியான தாமிரபரணி பொதிகை மலையில் புறப்பட்டு, இந்தியப் பெருங்கடலில் சென்று சேர்வது வரையிலான இடைப்பட்ட நிலப்பரப்பில், தாமிரபரணியின் ஓட்டத்தால் ஏற்படும் பல்வேறு பயன்களைக் குறிப்பிடுவதுடன், இந்நதியைக் குறித்து குரும்பூர் குப்புசாமி, டாக்டர் கால்டுவெல் ஆகியோரது ஆராய்ச்சிச் செய்திகள், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் கட்டப்பட்ட படித்துறைகள், மண்டபங்கள், தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளையும் இணைத்துக் கட்டப்பட்ட பாலங்கள், தாமிரபரணி ஆற்றைத் தடுத்துக் கட்டப்பட்ட அணைகள், தாமிரபரணிக் கரையில் கல்வெட்டு கொண்ட ஊர்கள் என்று பல்வேறு சிறப்புச் செய்திகளையும் நூலில் சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.
இது மட்டுமின்றி, தாமிரபரணி ஆற்றைச் சார்ந்து வாழ்ந்த மக்கள், அவர்களில் புகழ்பெற்ற மகான்கள் குறித்த செய்திகளோடு, அம்மக்கள் வழிபாட்டுக்காக ஏற்படுத்திக் கொண்ட கோயில்கள், கலைச்சிற்பங்கள் குறித்த செய்திகளையும் சேர்த்துத் தந்திருக்கிறார். தாமிரபரணிப் பகுதி மக்களுக்கு நீண்ட கால நெடிய வரலாறு உண்டு என்பதற்கு ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் சான்றளிக்கின்றன என்று குறிப்பிடும் நூலாசிரியர், தாமிரபரணிப் பகுதியில் ஆதிச்சநல்லூர் மட்டுமின்றி, சிவகளை, கொற்கை போன்ற இடங்களிலும் நடைபெற்று வரும் ஆய்வையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
நூலின் முன்பகுதியில் தாமிரபரணியின் பல்வேறு பெருமைகளைக் குறிப்பிடும் நூலாசிரியர், நூலின் பின்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகள் கலந்து நீர் மாசுபடுதல், தாமிரபரணி ஆற்றின் மணலை அள்ளி அதன் வளத்தைக் குறைத்தல், தாமிரபரணி ஆற்றின் நீரை விவசாயம், குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கு அளித்தல் போன்ற செயல்பாடுகளால் தாமிரபரணிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்பையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. மேலும், தாமிரபரணியின் பாதுகாப்புக்காக நடத்தப்பெற்ற போராட்டங்கள், போராட்டங்களுக்கு முன் நின்ற குழுக்கள், தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள் என்று அனைத்துத் தரப்புச் செய்திகளையும் நூலில் சேர்த்துத் தந்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகளுக்கு ஏற்ற வகையில், தேவையான இடங்களில் படங்கள் இணைக்கப்பட்டிருப்பது நூலுக்கு நன்மதிப்பை ஏற்படுத்துகிறது. தவழந்து வரும் தாமிரபரணி எனும் இந்நூல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி, பசுமையை விரும்பும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும், நதிகளின் மேல் பற்றுதல் கொண்டவர்களுக்கும் அருமையான நூல்.