முகநூல் (Facebook), புலனம் (Whatsapp) உள்ளிட்ட இணையம் வழியிலான சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்ட பிறகு, புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து போய்விட்டது. தங்களின் எந்தவொரு சந்தேகத்திற்கும் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்த நிலை மாறி, தங்களுக்கான அனைத்துத் தேவைகளையும் இணையத் தேடுபொறிகளில் தேடத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், புத்தக வாசிப்பு என்பது தேவையற்றதாகி விட்டது.
கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த பலருக்கும் அதன் மீதான ஆர்வம் பெருமளவில் குறைந்து போய்விட்டது. தொலைக்காட்சி நிகழ்வுகள், வலையொளிப் (Youtube) பதிவுகள் என்று எல்லோரும் மாறிப்போய்விட்ட நிலையில், புத்தகங்களின் வரவும் குறைந்து போய்க் கொண்டே இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்து வந்த பதிப்பகங்கள், தற்போது நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சிட்டு, அதுவும் விற்பனையாகாத அவல நிலையிலேயேக் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
இச்சூழ்நிலையில், தீவீரப் புத்தக வாசிப்பாளரும், பேராசிரியருமான நூலாசிரியர், தான் படித்த பல்வேறு நூல்களில் இடம் பெற்றிருக்கும் படைப்புத் திறன் குறித்த கருத்துகளைக் கட்டுரையாக்கி நூலாக்கம் செய்திருக்கிறார். இந்நூலில் சில கவிஞர்களின் கவிதைகளைத் திறனாய்வு செய்து, அதனைக் கட்டுரைகளாக்கியிருக்கிறார். உடுமலை நாராயணகவி பாடல்களில் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப் பணி போன்ற கட்டுரைகள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ‘அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள்’ எனும் தலைப்பிலான கட்டுரை, சில இணையதளங்கள் குறித்தும், அதில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்தும் சிறப்பாக விளக்குகிறது.
இந்நூலில் ஆதிசங்கரரின் அத்வைதம் குறித்து நான்கு கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவை, அத்வைதம் குறித்த பல்வேறு செய்திகளை நமக்குத் தருவதாக அமைந்திருக்கின்றன. ”இசுலாமியர்களுக்கு அல்லா ஒருவரே” எனும் ஒருமைக் கோட்பாடு இருப்பினும், இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த நல்லடியார்கள் (அவுலியாக்கள்) இறப்பிற்குப் பின்பு, அவர்களை அடக்கம் செய்த இடத்தில் வழிபடும் வழக்கத்தைப் பற்றி, “இசுலாமியர்களின் தர்கா வழிபாடு” எனும் கட்டுரை சிறப்பாக எடுத்துச் சொல்கிறது. இதே போன்று, “வள்ளுவமும் சமூகக் கட்டுப்பாடும்” எனும் கட்டுரையில், திருக்குறளில் தெரிவித்திருக்கும் பல்வேறு சமூகக் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
மேலும் இந்நூலில், காப்பியங்களில் அறிவியல் கூறுகள், சங்க இலக்கியங்களில் கரும்பு வேளாண்மை, மலை மற்றும் காடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் உள்ளிட்ட கட்டுரைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சில ஆன்மிகக் கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
நூலாசிரியர், குறிப்பிட்ட எல்லைக்குள் இல்லாது, பரவலாக அனைத்து வகையான படைப்புகளின் மீதும் ஆர்வம் கொண்டு, அவற்றை வாசித்தது மட்டுமின்றி, அதில் இடம் பெற்றிருக்கும் படைப்புத்திறனைக் கட்டுரைகளாக்கி, அக்கட்டுரைகளையெல்லாம் நூலாக்கம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.