மௌனம் துறக்கும் பெண்மை
ஆசிரியர் |
நாகநந்தினி |
பிரிவு |
புதுக்கவிதைகள் |
பக்கங்கள் |
96 |
பதிப்பு |
ஏப்ரல் 2022 |
ISBN |
----- |
விலை |
ரூ.100/- |
பதிப்பகம் |
ஓவியா பதிப்பகம் |
முகவரி |
17-13-11, காந்திநகர் மெயின் ரோடு, வத்தலகுண்டு - 624 202. |
தொலைபேசி எண் |
----- |
அலைபேசி எண் |
7667557114 |
புத்தகப் பார்வை:
சமீபத்தில் நான் மீண்டும் மீண்டும் ரசித்து ஆழமாக வாசித்து மகிழ்ந்தேன். இது ஓர் இளம் கவிதாயினியின் ஒப்பாரி அல்ல.. கர்ஜனை. இது என் தம்பி செந்தில் குமார் அவர்களின் மகள் நாகநந்தினியின் கைவண்ணத்தில் எழுதிய கவிதை நூல். அன்பு சகோதரர்... நண்பர் வதிலை பிரபா அவர்களின் ஓவியா பதிப்பகம் மூலம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்த அருமையான நூல். தெளிவான எழுத்துக்கள். நேர்த்தியான ஒழுங்கமைவு .
சமூகக்கட்டுப்பாடுகள் உள்ள ஒரு பெண்ணின் குரல் எனப் பதிப்பாளர் உரையில் தங்கத்தின் தன்மையை உரசிக் காட்டிவிட்டார். பெண்ணியம் பேசுவது என்பதை விட, இந்த 'கவிதைப் புலிக்குட்டி' பெண்ணிய எதிரிகளிடம் பெண்மைக்கென நியாயம் கேட்கிறது... முழு கர்ஜனையுடன். ஒரு உதாரணம் ரணமாக நம் இதயத்தைப் பிய்த்து எறிகிறது.
ஒரு கவிதை... அதுவும் முதல் கவிதை. இந்தக் கவிதைத் தொகுப்பின் அகரமாக ... சிகரமென ஒரு தீ ஜுவாலையைப் பற்ற வைக்கிறார்.
"ஈ கொசுக்களுடன்
அழுக்கும் கசடுகளும் மொய்க்கும்
கழிவு நீரோடையில்
கவுச்சி நாற்றமடிக்கும்
உதிரத்துளிகளாய்
பிறக்காமல் ஏந்திய மரணமாய்
மிதந்து கொண்டிருக்கிறேன்
அடையாளம் தெரிகிறதா?
நான்
உங்கள் மகள்"
இந்த ஒரு கவிதையின் வார்த்தைகள் தூண்டில் முள்ளாக நமது நாவில் கட்டுப்படும் வேதனையை உணர்கிறீர்களா? வார்த்தைகளை நடுக்கடலில் மென்மையைப் பிரயோகித்து, வன் நங்கூரத்தை நம் இதயத்தில் பாய்ச்சும் வித்தை எவ்வளவு எளிதாக வந்திருக்கிறது கவிதையைப் படைத்தவருக்கு. அடுத்த பக்கம் புரட்டத் திரையெனக் கண்ணீரே கட்டி நிற்கின்றது இதய விம்மலுடன்.
கவிதையின் சூழலமைவு நம் இதய ஓட்டத்தை அதிவேகமாக்கித் தொடரும் வார்த்தைகள், நம்மை எவ்வளவு இலகுவாகக் குற்றவாளி ஆக்கிவிடுகிறது. அடையாளம் தெரிகிறதா? நான் உங்கள் மகள்... சமுதாயக் கீழ்த்தரமான பால் வேறுபாட்டு மோகத்தைச் சிசுவாக மாறி... காரி உமிழ்கிறாளே! வித்தியாசமான எண்ணங்களின் ஊர்கோலங்கள் கவிப்புயலின் பார்வையில். பலர் தங்களின் தமிழ்ப்புலமையில் லைம்லைட் வெளிச்சத்தில் சின்னச்சின்ன கவிதை எழுதிப் பெயர் வாங்கினாலும், தன்னிடம் தன்னை.. தன் பாலினத்தை அங்கீகரிக்காத எத்தர்களுக்கு எதிராக எத்தனை புதினங்களும் எழுதுவேன் எனச் சூளுரைக்கிறாள், தனது 'வித்தியாசம்' என்ற கவிதையில். அடடா... பெருமிதமாக இருக்கிறது இந்தச் சின்னப்பிள்ளையின் அதிசயக் குறிப்புகள்...ம்...கவிதைகள்.
சித்தாள் என்ற கவிதையில் பெண்மையின் தியாகத்தின் கூலிக்கென பெற்ற அடிகளும்... ஆண்மைச் சர்வாதிகாரத்தின் போதை உபசாரமும்... என்று சரியாகுமிந்த போதை சமுதாயமென அடம்பிடித்து அழுகிறது கவிதையின் நாளத்தில்... தமனியில் பாய்ந்து வரும் இரத்தத்தின் உஷ்ணம்.
நிச்சயமாக இந்தக் கவிதைத் தொகுப்பு பெண்மையை மீளப்பெற உதவும் சமுதாயத்திற்காக ஒரு கண்ணாடிதான். பாதையை அப்பட்டமாகக் காட்டும் கைவிளக்குதான். வாசகனின் எண்ணிக்கை இந்த நூலுக்கு அதிகரிக்க வேண்டும் என்று கவிதாயினி நாகநந்தினியை வாழ்த்துகிறேன். வாசிக்க விரும்புபவர்கள் ஏன் உங்கள் அலைபேசியை அழுத்தி உங்களுக்கான ஒரு பிரதியைத் தருவித்து... ஆழமாக வாசிக்கக் கூடாது?
- ஜவஹர் பிரேம்குமார்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|