மலையாள மொழியில் பெர்க்மான் தோமஸ் எழுதிய நாவலை அருள் ஸ்நேகம் தமிழில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்.
இந்தப் பூமிப்பந்தின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்காக ஆக்கிரமித்திருக்கும் கடலில் கிடைக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்களைப் பிடித்து வந்து நிலப்பரப்பில் இருக்கும் மக்களுக்கு கடல் உணவாக வழங்கிக் கொண்டிருக்கும் மீனவர்களது வாழ்க்கை மிகவும் துயரமானது. மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்பவர்கள், புயல், சூறாவளி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களால் பாதிக்காமல் நல்ல முறையில் கரை திரும்ப வேண்டும் என்கிற அச்சம் மீனவர்களின் குடும்பங்களில் பல காலமாக இருந்து வருவதுதான். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக இயற்கைப் பேரிடர்களை விட, இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அதிரடியான நடவடிக்கைகள் மீனவர்கள் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கி விட்டன என்றால் அது மிகையில்லை.
“கடலுக்குச் சென்று வரும் பனியடிமை எனும் மீனவனுக்கு கடற்கரையில் இருப்பது ஒரு குடிசை வீடுதான். அந்தக் குடிசை வீடும், ஆனி, ஆடி மாதக் கடலரிப்பில் நாசமடைவதும், பின்னர் அது புதுப்பிக்கப்படுவதுமாக இருந்து வரும் நிலையில், தான் சேர்த்து வைத்திருக்கும் ஒரு இலட்ச ரூபாயில் கடலரிப்பில் பாதிக்காதபடி கற்களைக் கொண்டு வீடு கட்டி, அதற்கு ஓடு போட்டு விட வேண்டும் என்கிற ஆசை ஏற்படுகிறது. தனது மனைவி முத்தம்மாளிடம் அதுபற்றி பேசுகிறான். அவளும், அதற்கு சம்மதிக்கிறாள். அவன் பிள்ளைகள் மேரியும், மரியானும் தங்களது ஓலைக் குடிசை வீடு ஓட்டு வீடாக மாறப்போகிறது என்று மகிழ்ச்சியடைகின்றனர்.
பனியடிமை தனது ஓலைக்குடிசை வீடை ஓட்டுவீடாக மாற்றுவதற்காக, அந்த ஊர்க் கிராம ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று தலைவரைச் சந்திக்கிறான். ஊராட்சித் தலைவர் அவனது தொடக்கப்பள்ளிக் கால நண்பனாக இருப்பதால், அனுமதி பெறுவது எளிதாக இருக்கும் என்று நினைக்கிறான். அவன் நினைத்தது போல் ஊராட்சித் தலைவரும் அவனுக்கு அனுமதி அளிக்க ஒப்புக் கொண்டாலும், அவன் குடியிருக்கும் ஓலைக் குடிசை வீட்டுக்கு நில உடைமைச் சான்று (பட்டா) வேண்டுமென்று சொன்னதுடன், அதனைக் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வர வேண்டும் என்று தெரிவிக்கிறார். அவன் அடுத்த நாள் கிராம நிர்வாக அலுவலரைச் சந்தித்து, தான் சேர்த்து வைத்திருக்கும் ஒரு இலட்ச ரூபாயில் சொந்த வீடு கட்ட விரும்புவதாகச் சொல்லி நில உடைமைச் சான்று தரும்படி வேண்டுகிறான். அவர், எத்தனை ஆண்டுகள் அங்கு குடியிருந்து வருகிறீர்கள்? என்று கேட்க, அவன், தந்தை காலத்திலிருந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் குடியிருந்து வருவதாகச் சொல்கிறான். அவர், அவன் கொடுத்த விண்ணப்பத்தில் ஏதோ ஒன்றை எழுதி, வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பெற்றுக் கொள்ளும்படி அனுப்பி வைக்கிறார்.
அவனும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, கிராம நிர்வாக அலுவலர் எழுதிய குறிப்புடனான விண்ணப்பத்தைக் கொடுத்து நில உடைமைச் சான்று வேண்டுகிறான். வட்டாட்சியர் மீனவரிடம், பணம் பெற முடியாது என்பதால், நல்ல மீனைப் பரிசாக வாங்கிக் கொண்டு, ஒரு குறிப்பு எழுதி அந்த விண்ணப்பத்தை மாவட்ட வருவாய் அலுவலரைச் சென்று பார்க்கச் சொல்கிறார். அவனும், மாவட்ட வருவாய் அலுவலகத்திற்குச் சென்று அலுவலகத்திலிருப்பவர்களிடம் கொடுத்து நில உடைமைச் சான்று கேட்கிறான். அவர்கள், கடற்கரையில் அவன் குடியிருக்கும் பகுதி புறம்போக்கு நிலமாக இருப்பதால் நில உடைமச் சான்று தர இயலாது என்றும், அரசியல் செல்வாக்கிருந்தால் கிடைக்கும் என்று சொல்ல, ஊராட்சி மன்றத் தலைவரின் பரிந்துரைக் கடிதத்தோடு அந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்கிறான்.
சட்டமன்ற உறுப்பினர் கடற்கரைப்பகுதி சாகர்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. கடற்கரை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க முடியாது என்று அவன் கொடுத்த விண்ணப்பம், பரிந்துரைக் கடிதத்தை அவனிடமேத் திருப்பித் தருகிறார். சட்டமன்ற உறுப்பினரும் அவருடன் இருந்தவர்களும் அவனையும் கடலையும் கேலி செய்து பேசுகின்றனர். கேலிப்பேச்சு அதிகமாகவே, அதனைக் கேட்கப் பிடிக்காமல் சட்டமன்ற உறுப்பினரின் சட்டையைப் பிடித்து அடிக்கிறான். கடைசியில் காவலர்கள் வந்து அவனை காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று அடித்துக் காயப்படுத்தி பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.
காயத்துடன் திரும்பிய அவன் குடிசை வீட்டுக்குள் சென்று, டிரங்குப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்த திருஇருதயப் படத்தை எடுத்து மனைவியிடம் கொடுக்கிறான். அதன் பிறகு, அங்கிருந்த அணையா விளக்கையும், தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்த பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி, அந்தக் குடிசையின் மேல் போடுகிறான். தீ பிடித்து, அவன் குடிசை முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அதிலிருந்து இரண்டு தீக்கொள்ளியை எடுத்துத் தனது பிள்ளைகளிடம் கொடுத்து நடந்து செல்கிறான். அவன் பின்னே, மனைவியும் பிள்ளைகளும்... நடந்து செல்கின்றனர். புதிய விடியலை நோக்கி...” என்று கதை முடிகிறது.
சாதாரண ஒரு மீனவனின் சொந்தமாகச் சிறிய வீடு கட்டும் ஆசை நிறைவேறாமல் போனது மட்டுமின்றி, அவன் பிறந்து வளர்ந்த அந்த ஊரே அவனுக்குச் சொந்தமில்லை என்றாகும்படி அவன் வேறிடம் நோக்கிச் செல்வது... நமக்கு வருத்தத்தைத் தருவதாகவே அமைகிறது. என்ன செய்வது? வசதியானவர்களுக்கு வளைந்து கொடுக்கும் சட்டங்கள், வசதியற்றவர்களுக்கு நிமிர்ந்துதான் நிற்கின்றன... இந்நிலை எப்போதும் மாறப்போவதில்லை...