எதார்த்தமான மனநிலையைப் புரட்டிப் போட்டுக் காணும் காட்சி யாவற்றினும் நிஜத்தைப் பதிய வைக்கும் வெட்ட வெளிச்சமாய் கதைகள் இருக்கின்றன. நாம் கண்ட காட்சிகளும் நிகழ்ச்சிகளும் கதையாக்கப்பட்டதை எண்ணும் போது, இவற்றைக் கடந்து பயணித்த உணர்வினை உள்ளத்தில் தூண்டி, ஏன் இவை நம் எழுதுகோலில் பயணப்படவில்லை என்ற ஏக்கத்தையும் உந்துதலையும் ஏற்படுத்துகின்றன.
"இடர்களையாய்…" என்ற கதையைப் படித்த பின்பு, நூலாசிரியர் பெண்ணாகவேத் தன்னை உணர்ந்து, கழிவறை இன்றி வாழும் கிராமப்புற பெண்களின் அவஸ்தையை உணர்வுப் பூர்வமாக விளக்கி கதையை நகர்த்திச் செல்கிறார். பெண் எழுத்தாளா்கள் எழுதக் கூசும் உணா்வைத் தனது எழுத்துக்களின் வாயிலாக இவா் வெளிப்படுத்தி இருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.
'விவசாயி கனவு' எனும் கதையில், ”இந்த மணி பைய பியூசில பள்ளிக்கூடத்திலே இரண்டாவதாக வந்திருக்கான். படிப்பு வராத புள்ளையா இருந்தா நீங்க சொல்றது சரி. இவன் படிச்சு பெரிய டாக்டரு இல்லாட்டி இன்ஜினியரா ஆகட்டும். நம்மபாடு நம்மோடு போகட்டும்" என்றாள் மதவாயி... என்ற வரிகளில் இன்றைய கிராமப்புற மக்களின் கல்வி பற்றிய கனவினை மிகவும் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
'அப்பாயி' எனும் கதையை வாசிக்கும் போது, முதுமையின் அவலமும் முதுமையில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் அதை உணர்ந்து செயல்படா மக்களின் மனநிலையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரிடம் முதியவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது குறைந்து விட்டது என்பதையும் மானுடத்தின் பண்பு நலன்கள் மழுங்கிப் போய்விட்டன என்பதையும் மெய்ப்பிக்கும் கதைக்களம்... எல்லோர் மனதிலும் இருக்கும் அப்பாயி பாட்டிகள்... இக்கதையின் இறுதி வரிகள் "ஒரு முதிர்ந்த யானை தன் பலம் முழுவதும் கொண்டு அவன் நெஞ்சில் ஏறி மிதிப்பதைப் போன்ற கனத்தை உணர்ந்தான் தினகரன்" என்று முடித்த, முதுமையின் ரணத்தைப் பேசியுள்ள 'அப்பாயி' கதை அருமையாக இருக்கிறது.
'வல்சி', 'பெருந்திணை', 'மூதின் மகள்', 'கள்ளத்தில் ஊச்சும் இணை மான்கள்" போன்ற கதைகளின் தலைப்புகள் வாயிலாக அவரது இலக்கிய ஆர்வம் வெளிப்படுகிறது.'வெற்றுக் கண்ணாடிகள்', 'தராசு முள்', 'மூதின் மகள்', 'உதிரும் பூவின் ஓசை' போன்ற கதைகள் இன்றைய சூழலிலும் பெண்ணியம் பேச வேண்டியதன் அவசியத்தை படம்பிடிக்கின்றன. 'போதும் பொண்ணு', 'உமையொரு பங்கன்' கதைகளை கலங்காமல் படித்துக் கடப்பது கடினம். இந்தத் தொகுப்பில் 'சியர்ஸ்', 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' மற்றும் 'ரவிக்கைக் காரு' கதைகள் வித்யாசமான கதைக்கருவைத் தாங்கி நம்மை புத்தகத்தோடு பயணிக்கச் செய்கின்றன.
'இழப்பீடு' கதையில் விவசாயிகளின் வறுமையைக் கூறிய போது, இழப்பீடு வழங்கும் அதிகாரிகளின் வினாக்களும், அதற்கு அவர்கள் தரும் விடைகளும் இணைந்து நெக்குருக வைக்கும் தன்மை உடையன என்பதை வெளிப்படுத்தும்,
“ஐயா… இன்னமும் எவ்வளவு நாளைக்குத்தான் இதையே சொல்லுவீங்க. உங்கள நம்பித்தானே நாங்கள் காப்பீடு போட்டோம். எங்களை ஏமாத்திட்டீங்க ஐயா உங்க கால்ல வேணா விழுரேங்கையா” என்றவாறு அவரது காலை பிடிக்க விழுந்த புள்ளப்பனை தடுத்து நிறுத்திக் கத்தத் தொடங்கினார் மேலாளர் என்ற வரிகளைப் படிக்கும்போது, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் விவசாயி எல்லோர் காலிலும் ஏன் விழ வேண்டும் என்ற ஆதங்கத்தை ஏற்படுத்துகின்றது. மற்றவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னை தியாகம் செய்யும் விவசாயிகளின் இன்றைய நிலையை எடுத்துரைக்கும் கதை.
மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் பற்றிய கதை. அடிப்படைத் தேவையை பூா்த்தி செய்ய எந்த தொழிலையும் செய்யலாம். ஆனால், மனிதக்கழிவை எடுக்கும் துயரமான தொழிலை ஒழிக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகக் கதை அமைந்துள்ளது. அப்பாவின் பரிசு என்ற கதை இன்றைய நவயுக வாழ்க்கையில் மென்பொருள் யுகத்தில் பணியாற்றும் இளைஞர்களின் தொலைக்கப்பட்ட நிம்மதியை அப்பட்டமாக வெளிப்படுத்தும் கதையாக அமைந்திருக்கின்றது. படித்து முடித்த பின்பு நல்ல வேலை கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாமல் குடும்பத்தோடும் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் தவிக்கும் கணிப்பொறி பட்டதாரிகளில் அவல நிலையைப் படம்பிடித்து காட்டுவதாக அப்பாவின் பரிசு என்ற கதை அமைந்திருக்கிறது.
இதுபோன்ற சமூக மற்றும் கிராமப்புற மக்களின் சூழலை உணர்ந்து எல்லாக் கதைகளும் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வட்டார வழக்கு அதிக அளவில் ஒவ்வொரு கதைகளிலும் காணப்படுவதால் மக்களின் எதார்த்தமான வாழ்வியல் சூழலோடு, தானும் வாழ்ந்து வரும் கதை ஆசிரியரின் வட்டார வழக்கு புலமை வெளிப்படுகிறது. கதை கூறும் பாங்கு என்று ஒன்று உண்டு, கதை கேட்கும் பாங்கு ஒன்று உண்டு. இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு கதையில் நடைமுறை உத்தி பாங்கைப் பின்பற்றி எல்லாக் கதைகளையும் நகர்த்திச் சென்று இருக்கும் நூலாசிரியரின் ’இடர் களையாய்...” எனும் இந்நூல் சமூகத்தின் இடர்களை எப்பொழுதும் களையும் என்பதில் ஐயமேதுமில்லை.