தேவகோட்டை, தே. பிரித்தோ மேனிலைப்பள்ளியின் பவள விழாவினையொட்டி தயாரிக்கப்பெற்ற நேற்று - இன்று - நாளை (தே. பிரித்தோ கலை இலக்கியப் பவளங்கள் - 75) எனும் நூலில் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றம் பணியும், பயணமும் முன் பகுதிகளாக இடம் பெற்றிருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து, நேற்று எனும் தலைப்பில் இப்பள்ளியில் 1943 ஆம் ஆண்டு முதல் 1993 வரையிலான காலத்தில் பயின்ற மாணவர்களிள் கலை, இலக்கிய ஆளுமைகளாக விளங்கிய / விளங்குகின்றவர்களாக சிறுகதை மன்னர் எஸ். எஸ். தென்னரசு, திரு.வி.க விருதாளர் பேராசிரியர் பா. அருளானந்தம், பேராசிரியர் கண. சிற்சபேசன், கலைமாமணி சுப. முத்துராமன், மேனாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி க. மலைச்சாமி, மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன், மேனாள் துணைவேந்தர் சோம. இராமசாமி, மேனாள் நடுவண் அமைச்சர் ஏ.மா. சுதர்சன நாச்சியப்பன், மேனாள் நடிகர் விஜயகாந்த், திரைப்பட இயக்குநர் ‘கோலங்கள்’ திருச்செல்வம் உள்ளிட்ட 25 ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இன்று எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், தேவகோட்டை இராமநாதன், குறும்பட விருதாளர் து. மணிகண்டன், பேனா முனை ச. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 வளர்ந்து வரும் கலை இலக்கியச் சாதனையாளர்களைப் பற்றிய குறிப்புகளும், நாளை எனும் தலைப்பில் மாவட்ட, மாநில அளவில் வாகை சூடி வரும் மாணவர்களில் 25 மாணவர்களைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன.
இப்பள்ளியில் கலை இலக்கியப் பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருக்கும் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் வழியாக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள், பயிற்சி பெற்ற மாணவர்கள் பெற்ற பாராட்டுகள், விருதுகள் போன்றவை குறித்த கட்டுரை ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. பின்பகுதியில் பள்ளியின் அரிய நிழற்படத் தொகுப்பு எனும் தலைப்பில் பள்ளியின் சில பழைய படங்கள் தரப்பட்டிருக்கின்றன.
பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றம், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம் இணைந்து வெளியிட்டிருக்கும் இந்நூல், இப்பள்ளியில் படித்த / படித்துக் கொண்டிருக்கின்ற 75 கலை இலக்கியப் பெருமைக்குரியவர்களை நமக்கு அடையாளப்படுத்துகிறது.