தேவகோட்டை, தே. பிரித்தோ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நா. மைதீன் மற்றும் இரா. அன்புச்செல்வன் ஆகியோர் எழுதிய புதுக்கவிதைகளுக்கு, இப்பள்ளியின் மாணவர்கள் இரா. அன்புச்செல்வன், செ. ஆதவன், க. விகாஸ் மற்றும் அ. ரூபன் ஆகியோர் வரைந்த ஓவியங்களுடன் இந்நூலைப் பள்ளியின் வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் வழியாக வெளியிட்டிருக்கிறது.
இந்நூலில் நா. மைதீன் எழுதிய 20 கவிதைகள், இரா. அன்புச்செல்வன் எழுதிய 23 கவிதைகள் என்று மொத்தம் 43 புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
இக்கவிதைகளில் நா. மைதீன் கவிதைகளில்,
“பாலியல் சீண்டலுக்கு
துபாயில் தலை துண்டிப்பு
துருக்கியில் துப்பாக்கிச் சூடு
பாவப்பட்ட நாட்டில்
‘பதவி’...”
என்ற கவிதையின் வழியாக, பாலியல் சீண்டல் குற்றம் செய்தவருக்குத் தண்டனை தராமல், அவருக்குப் பதவி தந்து பெருமைப்படுத்துகிறது என்று சொல்லி வேதனைப்படுகிறார்.
இதே போன்று,
“ஐந்தாண்டு வாழ்க்கையை
ஒரே நொடியில்
அடமானம் வைத்தான்...
ஐநூறு ரூபாய் நோட்டுக்காக”
என்ற கவிதையின் மூலம் வாக்காளர்கள், வாக்குக்குப் பணம் பெறும் நிலையினைச் சாடுகிறார்.
மற்றொரு கவிஞரான இரா. அன்புச் செல்வன் கவிதைகளில்,
“பதினம வயதில்
பருவம் தொட்டதும்
மஞ்சள் கயிற்றில்
கனவுகளைத் தூக்கில் ஏற்றுகிறார்கள்...
மார்பிலும் தோளிலும்
தூக்கி வளர்த்தவர்கள்”
என்ற கவிதையின் வழியே, பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் திருமணம் எனும் பெயரில், அவர்களின் கல்விக் கனவுகளைப் பெற்றோர்களேக் கலைத்து விடுகிறார்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
இதே போன்று,
“ ‘குடி’ காக்கும் அரசு
‘குடி’ கெடுக்கும் அப்பா
சிதறிப் போனது
சின்னஞ்சிறு குடும்பக்கூடும்”
என்ற கவிதையின் வழியாக, பல குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கும் மதுப்பழக்கத்திற்கு அரசேக் காரணமாக இருக்கிறது என்பதைச் சொல்லி வேதனை கொள்கிறார்.
“கயிறு கட்டி
மந்திரித்தால் மாயமாகும்...
வரிசைக் கட்டி நிற்கிறது
பெருங்கூட்டம்
கலலா கட்டுவதில் மட்டும்
கவனமாய் இருக்கிறது
குள்ளநரிக் கூட்டம்”
என்று மக்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி வருமானம் பார்க்கும் கூட்டமும் இருக்கிறது என்று கவலைப்படுகிறார்.
பள்ளி மாணவர்களின் கவிதைகள் என்றால், அது பெரும்பாலும் காதல் கவிதையாகத்தான் இருக்கும் என்கிற நம் எண்ணத்தை மாற்றி, சமூகச் சிந்தனைகளோடு அமைந்த கவிதைகளைப் படைத்திருக்கும் இரு கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்... இந்தக் கவிஞர்களுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் நம் வாழ்த்துகள்...